Last Updated : 18 Jan, 2017 04:07 PM

 

Published : 18 Jan 2017 04:07 PM
Last Updated : 18 Jan 2017 04:07 PM

21 ஆண்டுகளாக காத்திருக்கும் பீடம்: கோவையில் எம்.ஜி.ஆர். சிலை நிறுவ விடிவு தருமா நூற்றாண்டு விழா?

எம்ஜிஆர் சிலைக்கு 21 ஆண்டுகளாக காத்திருக்கும் பீடத்துக்கு எம்ஜிஆர் நூற்றாண்டுக் கொண்டாட்டத்தின்போதாவது விடிவு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு கோவை அதிமுகவினரிடம் மேலோங்கியுள்ளது.

கோவை நகரின் மையத்தில் ஒசூர் சாலையில் அதிமுக கோவை மாநகர் மற்றும் புறநகர் மாவட்ட தலைமை அலுவலகமாக செயல்பட்டு வருகிறது இதயதெய்வம் மாளிகை. இந்த கட்டிடமும், வளாக இடமும் மறைந்த கோவை தொழிலதிபரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான வரதராஜனால் அதிமுகவுக்கு (எம்ஜிஆருக்கு) அளிக்கப்பட்டது.

இதன் திறப்பு விழாவுக்கு எம்ஜிஆர் அழைக்கப்பட, அவர் அப்போதைய அமைச்சர் நெடுஞ்செழியனை அனுப்பி உள்ளூர் அமைச்சர்கள் அரங்கநாயகம், குழந்தைவேலு ஆகியோரை முன்வைத்து திறந்து வைக்கப்பட்டது. 1991-1996 ஜெயலலிதா ஆட்சியின்போது இந்த கட்டிடத்தின் முகப்பில் எம்ஜிஆர் சிலை ஒன்றை நிறுவ ஏற்பாடு செய்தார் அப்போதைய கோவை அதிமுக மாவட்ட செயலாளர் த.மலரவன். அதற்காக கட்சிப் பிரமுகர்கள், தொழிலதிபர்களிடம் நிதிவசூல் நடந்தது. சிலைக்கு பீடமும், மேற்கூரையும் கான்கிரீட் தளத்துடன் கட்டி முடிக்கப்பட்டது. சிலை செய்யவும் பணிகள் நடந்தன.

ஆனால் 1996 தேர்தலில் அதிமுக பெரும் தோல்வியை சந்திக்க, சிலை அமைக்கும் பணி கிடப்பில் போடப்பட்டது. பீடம் மட்டும் தனியாக அலுவலகம் முன்பு நின்றது. 2001 தேர்தலில் அதிமுக வெற்றி பெற மாவட்டச் செயலாளரானார் செ.ம.வேலுச்சாமி. அமைச்சராகவும் பதவி வகித்தார். இங்கே பாதியில் நிறுத்தப்பட்டிருக்கும் பீடத்தில் சிலை நிறுவ வேண்டும் என்ற கோரிக்கைகள் தொண்டர்களிடையே எழுந்தன.

அந்த நேரத்தில், எம்.ஜி.ஆர். விசுவாசிகள் பலரும் கட்சியில், முக்கியப் பொறுப்பில் ஓரங்கட்டப்பட்டிருந்ததால் இந்த சிலையை அமைக்கத் தயங்கினர். ஆனால், சிலை அமைக்கப்படவில்லை. 2006-ல் திமுக ஆட்சி. அதற்குப்பிறகு சிலையை பற்றி மூச்சுவிடுவார் இல்லை. 2011-ல் மீண்டும் அதிமுக ஆட்சி. அப்போது மேயரான செ.ம.வேலுச்சாமி, அமைச்சராக உள்ள எஸ்.பி.வேலுமணி, கோவை மேயராக வந்த ராஜ்குமார் ஆகியோர் அடுத்தடுத்து மாவட்டச் செயலாளர் பொறுப்புகளை வகித்தனர். அவர்களிடம் பத்திரிகையாளர்கள் கேட்கும்போதெல்லாம், ‘தலைவர் சிலைதானே வைத்துவிடலாம்’ என்றே சொல்லி வந்தனர்.

இதற்கிடைப்பட்ட காலத்தில் கோவை இருகூர் பேரூராட்சிக்கு காமாட்சிபுரம் பகுதியில் ஒன்று, வடகோவை அரசு போக்குவரத்துக்கழக அலுவலகம் முன்பு ஒன்று, வெள்ளலூரில் ஒன்று, ரத்தினபுரியில் ஒன்று என 4 எம்.ஜி.ஆர். சிலைகள் ஆங்காங்கு உள்ள அதிமுக பிரமுகர்கள் மூலம் உருவானதே ஒழிய, இந்த பீடத்தில் எம்ஜிஆர் சிலை என்பது மட்டும் வரவேயில்லை. அதிலும், வடகோவை அரசு போக்குவரத்துக்கழக டெப்போ அருகில் அமைக்கப்பட்ட எம்.ஜி.ஆர். சிலையை கட்சித் தேர்தல் பிரச்சாரத்துக்கு வரும்போது ஜெயலலிதாவே திறந்து வைத்தார் என்பதுதான் ஆச்சரியம்.

அப்படியும் இதயதெய்வம் மாளிகை பீடத்தில் சிலை வைப்பதற்கு நிர்வாகிகள் தயக்கம் காட்டியே வந்தனர்.

அவர்களிடம் ஜெயலலிதா கோபித்துக் கொள்வாரோ என்ற பயமே மிதமிஞ்சி நின்றது. அந்த எம்.ஜி.ஆர். சிலைக்கான பீடம் இப்போதும் பாழடைந்து இதயதெய்வம் மாளிகை முன் காட்சிப்பொருளாக இருக்கிறது. அதற்கு எம்ஜிஆர் நூற்றாண்டு விழா கொண்டாடும் இந்த ஆண்டிலாவது விடிவு கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர் கட்சிக்காரர்கள்.

இதுகுறித்து கட்சியின் சீனியர் ஒருவரிடம் கேட்டபோது, ‘எம்ஜிஆர் சிலை அங்கே நிறுவ வேண்டும் என்பது அனைத்து தொண்டர்களின் ஆசையாகவே இருந்து வந்துள்ளது. ஒரு வருடம் முன்பு கட்சி அலுவலகம் நெருக்கடியில் இருக்கும் நிலை கருதி, பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய நான்கு மாடிக் கட்டிடம் கட்ட பிளான் போட்டு தலைமைக்கு அனுப்பியதாக கூட்டத்தில் தெரிவித்தார்கள் நிர்வாகிகள். அப்படி புதிதாக கட்டிடம் எழும்பும்போது இந்த பீடத்தையும் இடித்துவிட்டு அங்கே எம்ஜிஆர் சிலை நிறுவ வேண்டும் என்றும் முடிவு செய்தார்கள். இப்போது ஜெயலலிதாவும் காலமாகி விட்டதால் எம்ஜிஆர்- ஜெயலலிதா இருவரது சிலையும் வைக்க ஆலோசித்தார்கள். தலைவர் நூற்றாண்டான இந்த ஆண்டிலாவது இதற்கு ஒரு தீர்வு வரவேண்டும் என்பதே எங்களுடைய ஆசை’ என்றார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x