Published : 01 Jan 2017 10:25 AM
Last Updated : 01 Jan 2017 10:25 AM

2017 புத்தாண்டு: ஆளுநர், முதல்வர், தலைவர்கள் வாழ்த்து

ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு தமிழக மக்களுக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:

தமிழக ஆளுநர் (பொறுப்பு) வித்யாசாகர் ராவ்:

புத்தாண்டு பிறக்கும் இனிய தருணத்தில் கடந்த காலங்களில் நாம் பெற்ற பாடங்கள், வளர்ச்சிக்கான எதிர்கால திட்டங்கள் மூலம் இந்தியாவை உலகத்துக்கு தலைமை தாங்கச் செய்வோம். இந்தப் புத்தாண்டை திறந்த மனதுடனும், அர்ப்பணிப்பு மிக்க உழைப்பு, அறிவுத் திறனுடனும் வரவேற்போம். ஒற்றுமை யான, இணக்கமான இந்தியாவை உருவாக்க பாடுபடுவோம்.

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்:

தமிழக மக்களின் விருப்பங்கள், தேவைகளைக் கருத்தில் கொண்டு, அரசு செயல்படுத்தி வரும் நலத் திட்டங்களை மக்கள் அனைவரும் நல்ல முறையில் பயன்படுத்தி, ஒற்றுமையுடன் அயராது உழைத்து வளமும், வலிமையும் மிக்க தமிழகத்தை உருவாக்க இந்தப் புத்தாண்டில் உறுதியேற்போம். இந்தப் புத்தாண்டு தமிழக மக்களுக்கு மங்காத எழுச்சியையும், நிறைவான வளர்ச்சியையும், நீங்காத வளங்களையும் வழங்கும் ஆண்டாக மலரட்டும். தமிழக மக்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

வி.கே.சசிகலா (அதிமுக பொதுச்செயலாளர்):

மக்களுக் காக வாழ்வதில் மட்டற்ற மகிழ்ச்சி கொண்டிருந்தவர் ஜெயலலிதா. அத்தகைய பேருள்ளம் கொண்ட அவ ரது நல்லாசி என்றும் நமக்கு உண்டு. அவர் காட்டிய வழியில் நம் பயணம் தொடர வேண்டும். புலர்கின்ற புத்தாண்டு தமிழக மக்கள் அனைவருக்கும் மிகச் சிறப்பான ஆண்டாக அமைந்திட இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மு.க.ஸ்டாலின் (திமுக பொருளாளர், எதிர்க்கட்சித் தலைவர்):

நம் ஒவ்வொருவருக்கும் மகிழ்ச்சி தரும் ஆண்டாக புத்தாண்டு அமைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஆண்டில் நடந்த இன்னல்கள் மறைந்து, இன்பம் பிறக்கும் ஆண்டாக இந்தப் புத்தாண்டு அமையட்டும். மாநிலமும், நாடும் வளர்ச்சி பெற்று ‘நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வையுடன்’ நடைபோட உங்களில் ஒருவனாக முன்னிற்பேன் என இந்நாளில் உறுதியளிக்கிறேன்.

சு.திருநாவுக்கரசர் (தமிழக காங்கிரஸ் தலைவர்:

வரும் புத்தாண்டில் தீவிரவாதம், வன்முறை, வறுமை, அறியாமை போன்ற தீமைகள் அகலவும், பணமதிப்பு நீக்கம் என்ற சுனாமியில் இருந்து மக்கள் கரை சேரவும், கடந்த ஆண்டில் நிகழ்ந்த சோதனைகள், வேதனைகள், இழப்புகள் இந்தப் புத்தாண்டில் இல்லாமல் இருக்கவும் வாழ்த்துகிறேன்.

விஜயகாந்த் (தேமுதிக தலைவர்):

இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும் என்ற சிந்தனையோடு 2017-ம் ஆண்டு புத்தாண்டை மகிழ்வோடு வரவேற்போம். கடந்த ஆண்டு துயரங்கள் அனைத்தும் நீங்கி, இருள் சூழ்ந்த வாழ்வில் ஒளி பிறக்கட்டும். அனைவருக்கும் தேமுதிக சார்பில் புத்தாண்டு வாழ்த்துகள்.

மருத்துவர் ராமதாஸ் (பாமக நிறுவனர்):

2016-ம் ஆண்டு ஏமாற்றத்தில் முடிந்துள்ளது. ஆனால், மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுதான் இயற்கையின் நியதி. அந்த வகையில் கடந்த ஆண்டு சோதனைகளை மறந்து சாதனைகளை படைக்கும் ஆண்டாக 2017-ம் ஆண்டு அமையும் என்ற நம்பிக்கையுடன் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழிசை சவுந்தரராஜன் (தமிழக பாஜக தலைவர்):

பிரதமர் மோடியின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் கறுப்புப் பணம் ஒழிந்து நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. அனைவரது வாழ்விலும் துன்பங்கள் நீங்கி இன்பம் மலர இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வைகோ (மதிமுக பொதுச்செயலாளர்):

வேகமாக ஊடுருவி வரும் மேல்நாட்டு கலாச்சாரத்தால் தமிழ் பண்பாட்டுத் தளம் சிதைந்து வருவது கவலை தருகிறது. உலகின் மிகப்பழமையான தமிழர் நாகரிகத்தின் அடிப்படை அறநெறிகளைப் பாதுகாக்க இப்புத்தாண்டு நாளில் உறுதியேற்போம்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

இந்தப் புத்தாண்டில் தமிழக மக்கள் வாழ்வில் வளம் பெருக வாழ்த்துகிறேன். நல்லதே நடக்கும் என்ற நம்பிக்கையோடு வளமான தமிழகம், வலிமையான பாரதம் அமைய இந்நாளில் உறுதியேற்போம்.

ஜி.ராமகிருஷ்ணன் (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

2017-ம் ஆண்டு மக்களுக்கான போராட்டங்கள் மலர்கிற ஆண்டாக அமையட்டும். உலகில் முதல் முதலாக பாட்டாளி வர்க்கம் ஆட்சி அமைத்த நவம்பர் புரட்சியின் நூற்றாண்டு இது. அந்தப் புரட்சியின் உத்வேகத்தோடு புத்தாண்டை வரவேற்போம்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர்):

துயரங்கள் மேலோங்கி வரும் நிலையில் ஆங்கிலப் புத்தாண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். ஏற்றத்தாழ்வற்ற, மகிழ்ச்சியான சமத்துவம் நிறைந்த வாழ்க்கையைப் பெற அனைவரும் ஒன்றுபட்டு குரல் கொடுப்போம். நமக்கான கொள்கைகளை உருவாக்குவதில் வெற்றி காண்போம்.

அன்புமணி ராமதாஸ் (பாமக இளைஞரணித் தலைவர்):

புத்தாண்டு ஏற்படுத்தித் தரும் புதிய வாய்ப்புகளைப் பயன்படுத்தி தனிமனித வாழ்க்கையிலும், தமிழகத்தின் வளர்ச்சி யிலும் சாதனைகள் படைக்க புத்தாண்டில் வாழ்த்துகிறேன்.

கவிஞர் வைரமுத்து:

365 நன்மைகள் பெறவும், 365 நன்மைகள் தரவும், கதவு திறக்கிறது காலம். பயன் பெறுவோம்; பயன் தருவோம். புத்தாண்டு வாழ்த்துகள்.

இவர்கள் தவிர அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் தலைவர் ஆர்.சரத்குமார், இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் பாரிவேந்தர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர் கார்த்தி சிதம்பரம், தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் தலைவர் தி.வேல்முருகன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் தலைவர் ஈ.ஆர்.ஈஸ்வரன், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன், இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ், சமத்துவ மக்கள் கழகத் தலைவர் ஏ.நாராயணன், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ். முஸ்தபா, மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநிலப் பொதுச்செயலாளர் கரு. பவுனாச்சாரி, தமிழ்நாடு பால் முகவர்கள், தொழிலாளர்கள் நலச் சங்கத் தலைவர் சு.ஆ.பொன்னுசாமி, கொங்குநாடு ஜனநாயக கட்சியின் தலைவர் ஜி.கே.நாகராஜ் உள்ளிட்டோரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x