Published : 07 Dec 2016 08:27 AM
Last Updated : 07 Dec 2016 08:27 AM

2-வது நாளாக அரசு பேருந்து சேவை முடங்கியது: ரயில்களில் அலைமோதிய கூட்டம்

முதல்வர் ஜெயலலிதா மறைவு செய்தி வெளியானதையடுத்து, தமிழகத்தில் அரசு பேருந்துகளின் சேவை முடங்கியது. பயணத்தை தவிர்க்க முடியாத சிலர் ரயில்களில் பயணம் செய்ததால், ரயில்களில் வழக்கத்தை விட கூட்டம் அதிகமாக இருந்தது.

முதல்வர் ஜெயலலிதாவின் மறைவு செய்தி நேற்று முன்தினம் இரவு வெளியிடப்பட்டது. இதற்கு முன்பே தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகளின் சேவை திடீரென நிறுத்தப்பட்டது. ஆங்காங்கே பேருந்துகள் பணிமனைகளில் நிறுத்திவைக்கப்பட்டன. கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து 2-வது நாளாக நேற்றும் வெளியூருக்கு பேருந்துகள் இயக்கப்படவில்லை.

கர்நாடகா, கேரளா, ஆந்திராவில் இருந்து தமிழகத்துக்கு இயக்கப் படும் பேருந்துகளின் சேவையும் முற்றிலும் ரத்து செய்யப்பட்டன. இதனால், கோயம்பேடு, பெருங் களத்தூர் பேருந்து நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.

சென்னையிலும் மாநகர பேருந்துகளின் சேவை முற்றிலும் முடங்கியது. இருசக்கர வாகனம், ஆட்டோ மற்றும் கார் போன்ற சொந்த வாகனங்களில் மக்கள் பயணம் செய்தனர். மேலும், பெரும்பாலான மக்கள் மின்சார ரயில்களில் பயணம் செய்தனர்.

வெளியூர் பயணத்தை தவிர்க்க முடியாத சிலர் ரயில்களில் பயணம் செய்தனர். முன்பதிவு இல்லாத ரயில் பெட்டிகளில் கூட்டம் அதிகரித்தது. இதனால், சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் மக்கள் கூட்டம் அலைமோதியது. முன்பதிவு இல்லாத டிக்கெட் எடுக்க பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர். முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட் எடுத்துக் கொண்டு பயணிகள் சிலர் முன்பதிவு பெட்டிகளில் நின்று கொண்டும் பயணம் செய்தனர்.

பேருந்துகள் இயக்கப்படுமா?

இது தொடர்பாக அரசு போக்கு வரத்து கழக அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அரசு பேருந்துகளின் சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும், போக்குவரத்து ஊழியர் கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட் டுள்ளது.

எனவே, இன்று காலை 6 மணி முதல் வழக்கமாக அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.

போக்குவரத்து ஊழியர்கள் அனைவரும் பணிக்கு திரும்ப வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, இன்று காலை 6 மணி முதல் வழக்கமாக அரசு பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x