Published : 23 Jan 2015 10:15 AM
Last Updated : 23 Jan 2015 10:15 AM

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் ஒருநாள் விடுப்பு போராட்டம்: தமிழகம் முழுவதும் 3.50 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை

தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நேற்று நடத்தப்பட்டது. சுமார் 3.5 லட்சம் பேர் பணிக்கு செல்லவில்லை என்று சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

தமிழக அரசு துறைகளில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், 50 சதவீதம் அகவிலைப் படியை அடிப்படை ஊதியத்துடன் இணைத்து 20 சதவீதம் இடைக்கால நிவாரணம் வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை, தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. அரசு தரப்பில் எந்த பதிலும் வராததால், ஜனவரி 22-ம் தேதி ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி, நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. போக்குவரத்து துறை, வருவாய்த்துறை, கல்வித்துறை, அரசு தேர்வுத்துறை, மருத்துவத்துறை, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பெரும்பாலானோர் பணிக்கு செல்லவில்லை எனக் கூறப்படுகிறது.

சென்னையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகிலும், சேப்பாக்கத்தில் பழைய சம்பளக் கணக்கு அலுவலகம் அருகிலும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டன. இதில், நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு மாநில அமைப்பாளர் கு.பால்பாண்டியன் கூறியதாவது:

கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஒருநாள் தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் சுமார் 70% முதல் 80% அரசு ஊழியர்கள் பணிக்கு செல்லவில்லை. மேலும் மாவட்டங்கள் தோறும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டன. சுமார் 3.5 லட்சம் பேர் இந்த தற்செயல் விடுப்பு போராட்டத்தில் பங்கேற்றனர்.

இதனால், வேட்டி சேலை வழங்குதல், வருவாய்த்துறையில் சான்றிதழ்கள் வழங்குதல், போக்குவரத்து துறையில் ஓட்டுநர்கள் உரிமம் வழங்குதல், வாகனங்கள் பதிவு மற்றும் மற்ற அரசு துறைகளில் நிர்வாக ரீதியான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.

எங்களது கோரிக்கைகள் குறித்து உடனடியாக பேச்சு நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இல்லையெனில், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து பிப்ரவரி முதல் வாரத்தில் சங்கங்கள் ஒன்று கூடி முடிவு செய்வோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x