Published : 30 Jan 2017 08:53 AM
Last Updated : 30 Jan 2017 08:53 AM

144 தடை உத்தரவு எதிரொலி: மெரினாவில் உச்சகட்ட பாதுகாப்பு- விடுமுறை நாளிலும் வெறிச்சோடிய கடற்கரை

போலீஸார் 144 தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து, நேற்று விடுமுறை நாளாக இருந்தபோதி லும் கூட்டம் இல்லாமல் சென்னை மெரினா கடற்கரை வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு அதிக அளவில் போலீஸார் குவிக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டுக் கான தடையை நிரந்தரமாக நீக்க வலியுறுத்தி சென்னை மெரினா கடற்கரையில் கடந்த 17-ம் தேதி முதல் மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட் டனர். இதையடுத்து தமிழக அரசு ஜல்லிக்கட்டுக்கு அவசரச் சட்டம் கொண்டு வந்தது. ஆனால், நிரந்தர சட்டம் வேண்டும் என கூறி போராட்டத்தை மாணவர்கள், இளைஞர்கள் கைவிட மறுத்தனர்.

இந்நிலையில், கடந்த 23-ம் தேதி காலை மெரினாவில் இருந்த போராட்டக்காரர்களை வலுக் கட்டாயமாக அப்புறப்படுத்த போலீஸார் முயன்றனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஐஸ்அவுஸ், நடுக்குப்பம், திருவல்லிக்கேணி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போலீஸாருக்கும் வன்முறை யாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. ஐஸ்அவுஸ் காவல் நிலையம், வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. அரசுப் பேருந்து, பொதுமக்களின் வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டன.

‘குடியரசு தின விழாவை சீர்குலைக்க சமூக விரோதிகள் செய்த சதிதான் வன்முறைக்கு காரணம். இதற்கும் மாணவர்களுக் கும் எந்த சம்பந்தமும் இல்லை. தவறு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்கள்’ என சென்னை மாநகர காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் எச்சரித்தார். இதைத் தொடர்ந்து கைது நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை 240-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதற்கிடையே, போலீஸ் தாக்குதல் மற்றும் மீனவ குப்பங்கள் தாக்கப்பட்டதைக் கண்டித்து இளைஞர்கள் மீண்டும் போராட்டம் நடத்தப்போவதாக தகவல் வெளியானது. மேலும், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஜல்லிக்கட்டு வெற்றியை கொண்டாடவும் மெரினாவில் இளைஞர்கள் திரளப் போவதாகவும் சமூக ஊடகங்களில் தகவல் பரவியது. இதுகுறித்து மாநகர காவல் ஆணையரிடம் உளவுப் பிரிவு போலீஸார் தெரிவித்தனர். ஒன்றரை லட்சம் பேர் இதுபோல தகவல்களை பரிமாறி வருவதாக சைபர் கிரைம் போலீஸார் கண்டறிந்தனர். விடுமுறை தினமான ஞாயிற்றுக் கிழமை அனைவரும் ஒரே நேரத்தில் மெரினாவில் திரள வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதைத் தொடர்ந்து மெரினா கடற்கரையில் பட்டினப்பாக்கம் முதல் நேப்பியர் பாலம் வரை நேற்று முன்தினம் இரவு முதல் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிப்ரவரி 12-ம் தேதி வரை 15 நாட்களுக்கு இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதேபோல மயிலாப்பூர், ஐஸ்ஹவுஸ், பட்டினப்பாக்கம், திருவல்லிக்கேணி ஆகிய காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மெரினாவில் நடை பயிற்சி மேற்கொள்ளவும், பொழுதுபோக்குக்காக பொது மக்கள் குடும்பம் குடும்பமாக செல்லவும் எந்த தடையும் இல்லை என காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை முதலே மெரினா கடற்கரை போலீஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அங்கு ஏராளமான போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். நேப்பியர் பாலம், குடிசை மாற்று வாரியம், கண்ணகி சிலை, டாக்டர் பெசன்ட் சாலை சந்திப்பு, விவேகானந்தர் இல்லம் எதிர்புறம், காந்தி சிலை, கலங்கரை விளக்கம், சாந்தோம் தேவாலயம், பட்டினப்பாக்கம் கடற்கரை சந்திப்பு என அனைத்து பகுதிகளிலும் போலீஸார் நிறுத்தப்பட்டனர்.

வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை களில் மெரினா கடற்கரையில் கூட்டம் அதிகமாக இருக்கும். சென்னை மட்டுமின்றி, புறநகர் பகுதிகளில் இருந்தும் பலர் குடும் பத்துடன் வருவார்கள். ஆனால், 144 தடை உத்தரவு, போலீஸ் குவிப்பு போன்ற காரணங்களால் காலை முதலே மெரினா வெறிச்சோடி காணப்பட்டது.

ஜல்லிக்கட்டு ஆதரவு போராட் டத்தில் பங்கேற்ற பெரும்பாலோர் கருப்புச் சட்டை அணிந்து வந்தனர். அதேபோல நேற்றும் யாராவது கருப்புச் சட்டையில் வருகிறார்களா என போலீஸார் உன்னிப்பாக கவனித்தனர். சந்தேகத்துக்குரிய நபர்களைப் பிடித்து விசாரித்தனர்.

பாரிமுனையில் இருந்து நேப்பி யர் பாலம் வழியாகவும், அடை யாறில் இருந்து பட்டினப்பாக் கம் வழியாகவும் சாலை நடுவே தடுப்பு வேலிகள் அமைத்து கார் உள்ளிட்ட வாகனங்களில் போராட் டக்காரர்கள் யாரேனும் செல்கிறார் களா என போலீஸார் கண்காணித் தனர். கடற்கரையை ஒட்டியுள்ள மீனவப் பகுதிகளையும் போலீஸார் கண்காணித்தபடி இருந்தனர்.

தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, ஐஸ்அவுஸ், பட்டினப்பாக்கம் பகுதிகளிலும் அமைதியான நிலையே காணப்பட்டது. இந்தப் பகுதிகளிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டிருந்தனர்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x