Published : 09 Jan 2015 09:48 AM
Last Updated : 09 Jan 2015 09:48 AM

11-வது முறையாக தலைவராகிறார் கருணாநிதி: இன்று கூடுகிறது திமுக பொதுக்குழு - மகளிரணி தலைவராகிறார் கனிமொழி

திமுகவின் பொதுக்குழுக் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடுகிறது. இதில் 11-வது முறையாக தலைவராக கருணாநிதியும், பொதுச் செயலாளராக அன்பழகனும், பொருளாளராக ஸ்டாலினும் தேர்வு செய்யப்படவுள்ளனர். கனிமொழிக்கு மகளிரணித் தலைவர் பொறுப்பு வழங்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.

திமுகவின் உட்கட்சி தேர்தல் பல்வேறு கட்டமாக நடந்து முடிந்ததை அடுத்து திமுக பொதுக்குழு கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று கூடுகிறது. இந்த கூட்டத்தில் தலைவர், பொதுச் செயலாளர், பொருளாளர், உட்பட பல்வேறு பொறுப்புகளுக்கு 100-க் கும் அதிகமானோர் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இது தொடர்பாக திமுக நிர்வாகிகள் சிலர் கூறியதாவது:

திமுக பொதுக்குழு இன்று கூடுகிறது. தலைவர் பதவிக்கு கருணாநிதியும், பொதுச் செயலாளர் பதவிக்கு அன்பழகனும், பொருளாளர் பதவிக்கு ஸ்டாலினும் வேட்பு மனு செய்துள்ளனர். தமிழகத்திலுள்ள அத்தனை மாவட்ட நிர்வாகிகளும், பொதுக்குழு உறுப்பினர்களும் கருணாநிதி, அன்பழகன், ஸ்டாலினுக்கு ஆதரவாக உள்ளதால் அவர்கள் மீண்டும் அதே பொறுப்புகளின் கீழ் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

இது தவிர தணிக்கைக்குழு உறுப்பினர்கள், துணைப் பொதுச் செயலாளர்கள், இளைஞரணி, மகளிரணி, மாணவரணி, சொத்து பாதுகாப்புக்குழு, சட்டப்பிரிவு, ஆதி திராவிடர் பிரிவு, சிறுபான்மை பிரிவு, பொறியாளர் பிரிவு, மருத்துவ அணி, கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை, இலக்கிய அணி என திமுக தலைமைக் கழகத்தில் உள்ள பல்வேறு பிரிவுகளுக்கான நிர்வாகிகளும் பொதுக்குழுவில் தேர்வு செய்யப்படுவார்கள்.

இதன்படி திமுக மகளிரணித் தலைவர் பொறுப்பு கனிமொழிக்கு வழங்கப்படலாம் என தெரிகிறது. ஆற்காடு வீராசாமி செயற்குழு உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டதையடுத்து அவர் வகித்த முதன்மைச் செயலாளர் பொறுப்புக்கு துரைமுருகன் தேர்வு செய்யப்படவுள்ளார். இதையடுத்து தலைமைக் கழகத்தில் உள்ள பல்வேறு அணிகளுக்கான நிர்வாகிகளும் தேர்வு செய்யப்படவுள்ளன.

துரைமுருகன் வகித்த துணைப் பொதுச் செயலாளர் பதவிக்கு ஐ.பெரியசாமி தேர்வு செய்யப்படலாம். இதேபோல, மகளிர் இட ஒதுக்கீட்டில் துணைப் பொதுச் செயலாளராக உள்ள சற்குண பாண்டியனுக்கு பதிலாக சுப்புலட்சுமி ஜெகதீசன் துணைப் பொதுச் செயலாளர் ஆக்கப்படுகிறார். தலித் பிரிவில் உள்ள வி.பி.துரைசாமி அப்படியே தொடரலாம். மேலும் இளைஞ ரணியை ஸ்டாலினே வைத்திருப் பார். இளைஞரணி துணைச் செய லாளர்களாக வெள்ளக்கோயில் சுவாமிநாதன், மகேஷ் பொய்யா மொழி தேர்வு செய்யப்படவுள்ளனர். மேலும் அமைப்புச் செயலாளர்கள் டி.கே.எஸ்.இளங்கோவனும், ஆர்.எஸ்.பாரதியும் அப்படியே தொடருவார்கள்.

இதற்கான அனைத்து அறிவிப்புகளும் இன்று நடைபெறும் பொதுக்குழுவில் வெளியாகும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x