Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

100 டன் எடையுள்ள அம்மன் கோயில் 9 அடி தொலைவு நகர்த்தப்பட்டது- சாலை விஸ்தரிப்பு பணிக்காக நடவடிக்கை

ஆம்பூர் அருகே சுமார் 100 டன் எடையுள்ள கோயில் கோபுரம் 9 அடி தொலைவிற்கு நகர்த்தப்பட்டது.

சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஆறுவழிச் சாலையாக மாற்றும் பணி நடந்துவருகிறது. இந்த பணியின் ஒரு பகுதியாக ஆம்பூர் அடுத்த அய்யனூர் கிராமம் அருகே மேம்பாலம் அமைக்கப்படுகிறது. இதற்காக நிலம் கையகப்படுத்தும் பணி முடிந்த நிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி நடக்கிறது. இதில், சுமார் 300 ஆண்டுகள் பழைமையான ஆதி பெத்தபலி கெங்கையம்மன் கோயில் இடிக்கப்பட உள்ளது. இந்த கோயில் இடிக்கப்படுவதை கிராம மக்கள் விரும்பவில்லை.

இதனால், கோயிலை இடிக்காமல் நகர்த்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இது தொடர்பாக தனியார் நிறுவன ஒன்றின் உதவியுடன் கோயில் நகர்த்தப்படுகிறது. ரூ.3 லட்சம் செலவில் நகர்த்தப்படும் இந்த கோயில் கோபுரம் சுமார் 40 அடி உயரம், 100 டன் எடை கொண்டது.

கடந்த 2-ம் தேதி கோயில் அடித்தளம் இடிக்கும் பணி நடந்தது. இந்த பணி தற்போது முடிந்தநிலையில் சுமார் 100 டன் எடையுள்ள மொத்த கோபுரத்துடன் கூடிய கோயில் இரும்பு தளவாடங்கள் மீது அமர்த்தப்பட்டுள்ளது. தண்டவாளம் உதவியுடன் 40 அடி தூரம் கோயிலை நகர்த்திச் செல்ல பாலம் போன்ற கட்டுமான பணி நடந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை மாலை சிறப்பு பூஜைகளுடன் கோயில் நகர்த்தும் பணி தொடங்கியது. தினமும் சுமார் 10 அடி வீதம் கோயிலை நகர்த்த திட்டமிடப்பட்டுள்ளது. புதன்கிழமை மாலை நிலவரப்படி சுமார் 9 அடி தூரத்திற்கு கோயில் நகர்த்தப்பட்டது. கனரக வாகனங்களில் பயன்படுத்தப்படும் ஜாக்கிகள் உதவியுடன் மெல்ல மெல்ல முன்னோக்கி கோயில் நகர்த்தப்படுகிறது.

சுமார் 100 டன் எடையுள்ள பிரம்மாண்ட கோயில் நகர்ந்து செல்வதை ஏராளமான பொதுமக்கள் வேடிக்கை பார்த்துச்செல்கின்றனர். 5 நாட்களுக்குள் இந்த கோயில் 40 அடி தூரம் நகர்த்தப்பட்டு புதிய இடத்தில் வைக்கப்படும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x