Last Updated : 05 Jan, 2017 08:44 AM

 

Published : 05 Jan 2017 08:44 AM
Last Updated : 05 Jan 2017 08:44 AM

10 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவின் நகல் இல்லாததால் சிரமப்படும் மக்கள்

நகர் மற்றும் ஊரமைப்புத் துறை (டி.டி.சி.பி.) மண்டல அலு வலகம் மற்றும் தலைமை அலுவல கத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைப் பிரிவின் நகல்கள் இல்லாததால் அந்த மனைகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய முடியாமல் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகின்றனர்.

சென்னையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் (சிஎம்டிஏ) அனுமதியும், மாநிலத் தின் பிற பகுதிகளில் நகர் மற்றும் ஊரமைப்புத் துறை (டிடிசிபி) அனுமதியும் பெற்ற இடத்தை மட்டுமே பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து தமிழ்நாடு முழுவதும் பத்திரப் பதிவு அலுலகத்தில் பதிவு வெகுவாகக் குறைந்துவிட்டது. இதற்கு என்ன காரணம் என்று விசாரித்தபோது அதிர்ச்சியான தகவல்கள் கிடைத்தன.

தமிழ்நாட்டில் சென்னையில் 10 சதவீதமும், மாநிலத்தின் பிற பகுதிகளில் 90 சதவீதமும் அங்கீகாரம் இல்லாத மனைகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் சிஎம்டிஏ செயல்பாடு நன்றாக இருப்ப தால்தான் அங்கீகாரம் இல்லாத மனைகள் அதுவும் புறநகர் பகுதி களில்தான் 10 சதவீதமாக இருப்பதாக வும், நகர் மற்றும் ஊரமைப்புத் துறை செயல்பாடு திருப்திகரமாக இல்லாததால் மாநிலத்தின் பிற பகுதிகளில் அங்கீகாரம் இல்லாத மனைகள் 90 சதவீதம் வரை இருப்ப தாகவும் கூறுகின்றனர் விவரம் தெரிந்தவர்கள்.

தமிழ்நாட்டில் சென்னை தவிர மற்ற பகுதிகளில் நிலத்துக்கு அடியிலோ அல்லது நிலத்துக்கு மேல்பகுதியிலோ ஏதாவது அபிவிருத்தி செய்ய வேண்டு மானால் நகர் மற்றும் ஊரமைப்புத் துறையின் அனுமதி பெற்றாக வேண்டும். கிராம பஞ்சாயத்தைப் பொறுத்தவரை வணிக பயன்பாடாக இருந்தால் 4 ஆயிரம் சதுர அடி வரை யிலும், வீடாக இருப்பின் தலா 2 ஆயிரம் சதுர அடி வீதம் தரைத்தளம், முதல்தளம் வரை அனுமதி அளிக் கலாம். தனித்தனி வீடுகளாக இருந் தால் தலா ஆயிரம் சதுர அடி வீதம் நான்கு வீடுகள் வரை அனுமதி அளிக்க முடியும். 5 ஏக்கர் வரை மண்டல நகர் மற்றும் ஊரமைப்புத் துறை மண்டல அலுவலகமும், 5 ஏக்கருக்கு மேல் இருந்தால் சென்னையில் உள்ள நகர் மற்றும் ஊரமைப்புத் துறை தலைமை அலுவலகமும் தான் அனுமதி அளிக்க இயலும்.

கோவை, சேலம், கடலூர், சிவகங்கை, திருவள்ளூர், செங்கல் பட்டு உள்பட 11 இடங்களில் உள்ள நகர் மற்றும் ஊரமைப்புத் துறை மண்டல அலுவலகங்களிலும், சென்னை யில் உள்ள நகர் மற்றும் ஊரமைப்புத் துறை தலைமை அலுவலகத்திலும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவின் நகல்கள் இல்லை என்பது தெரிய வந்துள்ளது. இதனால், அந்த மனைப் பிரிவுகளை விற்கவோ, வாங்கவோ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

எந்தவொரு மனையாக இருந் தாலும் அதனைப் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்யப் போனால், அந்த மனைக்கு நகர் மற்றும் ஊரமைப்புத் துறை வழங் கிய அனுமதி ஆவணத்தில் ஒப்புகைச் சான்று பெற்று வருமாறு கூறுகிறார்கள். அவ்வாறு அந்த குறிப்பிட்ட ஆவணத்தில் ஒப்புகைச் சான்று பெற்றுவராவிட்டால் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வ தில்லை. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.

இதுகுறித்து தொழில்முறை நகர மைப்பு வல்லுநர்கள் சங்கத் தலைவர் கே.எம்.சதானந்த் கூறியதாவது:-

ென்னையில் உள்ள நகர் மற்றும் ஊரமைப்புத் துறை தலைமை அலுவலகத்தில், அத்துறை அனுமதி பெறப்பட்ட மனைப் பிரிவின் நகல்கள் வழங்கும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கோரி னேன். அதற்கு கடந்த 10 ஆண்டு களுக்கு முன்பு அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவின் நகல்கள் தங்களிடம் இல்லை என்றும், அவற்றை வைக்க இடமில்லாததால் அப்புறப் படுத்திவிட்டதாகவும் தகவல் கூறினர்.

மாநிலத்தின் பிற பகுதிகளில் உள்ள நகர் மற்றும் ஊரமைப்புத் துறை 11 மண்டல அலுவலகங்கள், பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், நகராட்சியிலும் இதே நிலைதான். மண்டல அலுவலகங்களில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முந்தைய அனுமதி பெறப்பட்ட மனைப்பிரிவின் நகல்கள் இருந்தால் அவற்றை மண்டலம் வாரியாக டிடிசிபியின் இணையதளத்தில் உடனடியாக பதிவேற்றம் செய்ய வேண்டும். அத்துடன் நகல்கள் இல்லாத மனைப்பிரிவுகளை பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவு செய்வதற்கான வழிவகைகளை அரசு உடனடியாக உருவாக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x