Published : 26 Jan 2015 02:18 PM
Last Updated : 26 Jan 2015 02:18 PM

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை: ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவிப்பு

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடாது. யாரையும் ஆதரிக்காது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் அறிவித்துள்ளார்.

சென்னை சத்தியமூர்த்தி பவனில் நிருபர்களிடம் இளங்கோவன் நேற்று கூறியதாவது:

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதில்லை என்றும் அங்குயாரையும் ஆதரிப்பதில்லை என்றும் முடிவு எடுத்துள்ளோம். ஜனநாயக முறையை கடைபிடிக்காமல் இந்தத் தேர்தல் முழுக்க முழுக்க பணநாயகத்தை முன்வைத்தே நடக்கிறது. ஆளுங்கட்சியை சேர்ந்தவர்கள் 2 நாட்களுக்கு முன்பிருந்தே வாக்காளர்களுக்கு ரூ.1000, ரூ.2 ஆயிரம் என்று கொடுத்து வருகின்றனர். ஒரு ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் அளவுக்கு பணம் கொடுக்கப் போவதாக பேச்சு அடிபடுகிறது. எங்கள் தொண்டர்கள் இந்தத் தேர்தலில் மனசாட்சிப்படி நடுநிலையாக வாக்களிப்பார்கள்.

இவ்வாறு ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தொடர்ந்து நிருபர்களின் கேள்விக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:

உங்களிடம் யாராவது ஆதரவு கேட்டார்களா?

எங்களிடம் ஆதரவு கேட்டார்கள். ஆனால் அதை உங்களிடம் சொல்ல விரும்பவில்லை. எங்களைப் பொறுத்த வரை இந்தத் தேர்தல் நியாயமாகவும், ஜனநாயக முறைப்படியும் நடக்காது என்பதால் போட்டியிடவில்லை.

பணப் பட்டுவாடா செய்வதாக சொல்கிறீர்களே, இதுபற்றி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிப்பீர்களா?

புகார் கொடுத்தால் மட்டும் என்ன நன்மை கிடைக்கப் போகிறது. தமிழகத்தில் கடந்த மக்களவைத் தேர்தலில் பணப் பட்டுவாடா நடந்ததை ஓய்வுபெற்ற தலைமைத் தேர்தல் ஆணையர் வி.எஸ்.சம்பத்தே ஒப்புக்கொண்டுள்ளார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடும்போது, நீங்கள் போட்டியிடாமல் இருப்பது பின்னடைவை ஏற்படுத்தாதா?

இதில் எந்தப் பின்னடைவும் இல்லை. இந்தத் தேர்தலே ஒரு கண்துடைப்பு தேர்தல். எப்படியும் ஆளுங்கட்சிதான் வெற்றி பெறப் போகிறது. இதில் எங்கள் சக்தியை விரயமாக்க விரும்பவில்லை.

ப.சிதம்பரம், வாசன் கட்சிக்கு போகிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளதே?

சிதம்பரம் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறாரா, தமாகாவில் சேருகிறாரா என்ற கேள்வியை எல்லாம் சிதம்பரத்திடமும், வாசனிடமும்தான் கேட்க வேண்டும்.

தனக்கு நோட்டீஸ் அனுப்பிய விவகாரத்தில் நீங்கள் அவசரப்பட்டுவிட்டதாக கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளாரே?

கார்த்தி சிதம்பரம் விளக்கம் அளிக்க வேண்டியதற்கான கெடு இன்னமும் மிச்சமுள்ளது. யார் அவசரப்பட்டார்கள் என்று அப்போதுதான் தெரியும்.

இவ்வாறு இளங்கோவன் பதிலளித்தார்.

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்லை என்ற முடிவை பாமக, மதிமுக ஆகிய கட்சிகள் ஏற்கெனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x