Published : 23 Jan 2015 02:12 PM
Last Updated : 23 Jan 2015 02:12 PM

ஸ்ரீரங்கத்தில் பாஜக போட்டி: வேட்பாளராக எம்.சுப்ரமணியம் அறிவிப்பு - தேமுதிக ஆதரிப்பதாக தமிழிசை தகவல்

ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் பாஜக போட்டியிடுகிறது. அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் எம்.சுப்ரமணியம் வேட்பாளாராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழகத்தில் காலியாகவுள்ள ஸ்ரீரங்கம் சட்டப்பேரவை தொகுதிக்கு பிப்ரவரி 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளராக எஸ்.வளர்மதியும், திமுக வேட்பாளராக என்.ஆனந்தும், மார்க்சிஸ்ட் வேட்பாளராக க.அண்ணாதுரையும் அறிவிக்கப் பட்டுள்ளனர்.

பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைமை கூறி வந்த நிலையில், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிகவும் ஸ்ரீரங்கம் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேலைகளில் ஈடுபட்டது. இதையடுத்து, தேமுதிக தலைவர் விஜயகாந்தை, தமிழக பாஜக தலைவர்கள் சில நாட்களுக்கு முன்பு சந்தித்தனர்.

விஜயகாந்தை சந்திப்பதற்கு முன்பு வரை பாஜக சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று கூறி வந்த மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், விஜயகாந்தை சந்தித்த பிறகு, தே.ஜ. கூட்டணி சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்றார். இதனால் ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் தேமுதிக போட்டியிடுவது உறுதி என்று தகவல் பரவியது.

இந்த தகவல் பாஜக தலை மைக்கு தெரிவிக்கப்படவே, பாஜக சார்பில் வேட்பாளரை நிறுத்துங்கள் என்று மாநிலத் தலைமைக்கு அறிவுறுத்தப்பட்டதாக தெரிகிறது. இதையடுத்து, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், விஜயகாந்தை நேற்று முன்தினம் சந்தித்து பேசினார். இந்த சூழலில் பாஜக சார்பில் திருச்சியைச் சேர்ந்த சுப்ரமணியம் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

தமிழிசை தகவல்

இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:

ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல் ஒரு அசாதாரணமான சூழலில் நடக்கிறது. ஊழலுக்கு எதிரான தேர்தல். இந்த தேர்தலில் தேசிய ஜன நாயக கூட்டணி வேட்பாளராக பாஜகவின் மாநில துணைத்தலை வர் எம். சுப்ரமணியம் போட்டியிடு வார்.

பாஜக வேட்பாளருக்கு தே.ஜ கூட்டணியில் உள்ள தேமுதிக, ஐஜேகே, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, புதிய நீதி கட்சி ஆகியவை ஆதரவளிக்க ஒப்புதல் அளித்துள்ளன. மக்கள் எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள் என்று நம்புகிறோம். ஊழலற்ற ஆட்சி அமைய வேண்டும் என்பதுதான் எங்கள் பிரச்சாரத்தின் மையக்கருத்தாக இருக்கும். நாடாளுமன்ற தேர்தலின்போது பாமக வெற்றிக்காக நாங்கள் பாடுபட்டோம், எங்கள் வெற்றிக்காக அவர்கள் பாடுபட்டார்கள். அதனால் அவர்கள் பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும்.

இவ்வாறு தமிழிசை சவுந்தர ராஜன் கூறினார்.

முன்னதாக, சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 119-வது பிறந்த நாளையொட்டி அவரது உருவப்படத்துக்கு தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

3 பொறியியல் கல்லூரிகளின் அதிபர்

மு.சுப்ரமணியம் (54), பொறியியல் பட்டதாரி. திருச்சி தில்லை நகரில் வசித்து வருகிறார்.

1996-ல் பாஜக உறுப்பினராக சேர்ந்தார். 2002 - 06 வரையில் பாஜக மாநில கல்வியாளர் பிரிவு பொருளாளர். 2006-12 வரையில் தேசியக்குழு உறுப்பினர், 2012-14 வரையில் மாநிலச் செயலர் மற்றும் மாநில பொறியாளர் பிரிவு பொறுப்பாளர். 2014 முதல் பாஜக மாநில துணைத் தலைவராக செயல்பட்டு வருகிறார்.

2011-ம் ஆண்டு மண்ணச்சநல்லூர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டவர்.

திருச்சியில் உள்ள ஜெயராம் பொறியியல் கல்லூரி, ஆக்ஸ்போர்டு பொறியியல் கல்லூரி, ஸ்ரீ அங்காளம்மன் பொறியியல் கல்லூரி ஆகிய கல்வி நிறுவனங்களின் தலைவராக உள்ளார்.

இவரது மனைவி நிர்மலா, மகள் டாக்டர் திவ்யா, மகன் பொறியாளர் ஷியாம் சுந்தர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x