Published : 30 Jan 2017 01:32 PM
Last Updated : 30 Jan 2017 01:32 PM

ஸ்டாலினை மன்னிப்புக் கேட்கச் சொல்ல நடராஜனுக்கு தகுதி இல்லை: திமுக

ஜல்லிக்கட்டு போராட்டம் விவகாரத்தில் ஸ்டாலினை மன்னிப்பு கேட்க கோருவதற்கு எம்.நடராஜனுக்கு எந்த அருகதையும் தகுதியும் இல்லை என்று திமுக எம்எல்ஏ டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

இது தொடர்பாக, திமுகவின் மன்னார்குடி சட்டப்பேரவை உறுப்பினர் டி.ஆர்.பி. ராஜா விடுத்த அறிக்கையில், " 'ஜல்லிக்கட்டு வன்முறைக்கு வித்திட்டது தி.மு.க' என்று அபாண்டமாக வீண் பழி சுமத்தி, திமுக செயல் தலைவர் ஸ்டாலினை மன்னிப்புக் கேட்கச் சொல்லும் எம்.நடராஜன், யாருடைய 'வாய்ஸாக' செயல்படுகிறார் என்பதை முதலில் அவர் விளக்க வேண்டும்.

'குடும்பத்தின் வாய்ஸா' "பாஜகவின் வாய்ஸா" என்பதை அவர் தெளிவுபடுத்த வேண்டும். கண்ணாடி வீட்டிற்குள் இருந்து கொண்டு கல் எறியாதீர்கள் என்பதை மட்டும் நடராஜனுக்கு எச்சரிக்கையாக தெரிவிக்க விரும்புகிறேன்.

"லக்சஸ் கார்" வழக்கில் இரு வருடம் சிறை தண்டனை இருப்பதால் முதலமைச்சர் பதவியை அபகரிக்க முடியாமல் போயிருக்கலாம். சொத்துக் குவிப்பு வழக்கு இன்னும் நிலுவையில் இருப்பதால் மனமின்றி ஒப்புக்கொண்டு விட்டு இப்போது முதலமைச்சராக வேறு வழியின்றி தவித்துக் கொண்டிருக்கலாம். தேர்வு செய்யப்பட்ட முதலமைச்சரை நீக்கினால் தங்கள் குடும்பத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் அதிமுக ஆட்சியே பறி போய் விடுமோ என்ற பீதி இருக்கலாம். அதற்கு திராவிட முன்னேற்றக் கழகமோ, ஸ்டாலினோ எந்த வகையிலும் பொறுப்பாக முடியாது.

ஜனநாயகத்தில் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்பட்டு, ஆளுனரால் பதவிப் பிரமாணம் செய்யப்பட்டுள்ள முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உரிய மரியாதையும், மதிப்பும் கொடுக்க வேண்டியது ஒரு எதிர்கட்சி தலைவரின் பொறுப்பு. 89 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பிரதான எதிர்கட்சியாக இருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொறுப்பு. ஒரு முதலமைச்சர் என்று கூடப் பாராமல் அவரை அவமானப்படுத்தும் நடராஜனுக்கும், முதலமைச்சராக நினைத்து ஏமாந்து தவிப்பவருக்கும் ஸ்டாலினின் அரசியல் நாகரீகம் தர்மசங்கடத்தை உருவாக்குகிறது.

முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் ஜல்லிக்கட்டு பிரச்சினைக்காக பிரதமரை சந்திக்க சென்ற போது "வெற்றியுடன் திரும்பி வாருங்கள்" என்று வாழ்த்தியது, அவருடன் குடியரசு தினவிழாவில் பங்கேற்றது, முதலமைச்சரின் காருக்கு வழி விட்டு ஸ்டாலின் கார் காத்திருந்தது போன்றவை எல்லாம் எம்.நடராஜனுக்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அந்த எரிச்சலின் உச்சத்தில் இல்லாததை அள்ளி வீசியும், பொல்லாததை புழுதி வாரி தூற்றியும் நடராஜன் அரசியல் செய்வது அர்த்தமற்ற அரை வேக்காட்டு அரசியல்!

ஜல்லிக்கட்டு வேண்டும் என்று இன்று நேற்றல்ல. அந்த வீர விளையாட்டு தடை செய்யப்பட்டதிலிருந்து போராடிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். ஆட்சியிலிருந்த போது தங்கு தடையின்றி ஜல்லிக்கட்டை நடத்திக் காட்டிய இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். அலங்காநல்லூரிலும், சென்னையிலும் ஜல்லிக்கட்டுக்காக போராட்டம் நடத்தியவர் தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின். தமிழுணர்வுடன் மெரினாவில் மாணவர்கள் போராடுகிறார்கள் என்று கேள்விப்பட்டதும் உடனே ஓடோடிச் சென்று முதல் நாளே மாணவர்களை வாழ்த்தி விட்டு திரும்பியவர்.

தமிழ் கலாச்சாரத்திற்காக போராடிய மாணவர்களை "தேச விரோதிகள்" என்றும், "சமூக விரோதிகள்" என்றும் கூறி பாஜகவின் வாக்கு வங்கி அரசியலுக்கு துணை போன அதிமுக ஆட்சிக்கு உரிமை கொண்டாடும் எம்.நடராஜன் "ஸ்டாலின் மாணவர்கள் போராட்டத்தில் வன்முறையை தூண்டி விட்டார்" என்று கூறுவது வெட்க கேடான வெற்றுக் குற்றச்சாட்டு. இப்படியொரு அபத்தமான குற்றச்சாட்டை கேட்பவர்கள் வேறு வழியாக சிரித்து விடுவார்கள் என்பதை நடராஜனுக்கு தெரிந்தும் "ஏதோ தானே முதல்வர். தானே அரசு" என்ற எண்ணவோட்டத்தில் இப்படி பேட்டி கொடுக்க எத்தணித்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.

ஆகவே இது போன்ற "புதிய அவதார" அரசியலை ஒதுக்கி வைத்து விட்டு, லக்ஸஸ் கார் வழக்கு, பெரா வழக்கு போன்றவற்றின் நிலை என்ன என்று பாருங்கள். தன் மீது உள்ள அழுக்கை துடைத்துக் கொள்ள தவிக்கும் நடராஜன் பா.ஜ.க. "வாய்ஸாக" செயல்படட்டும். பா.ஜ.க.விடம் மண்டியிட்டு "முதலமைச்சர் பதவியை விட்டுக் கொடுங்கள்" என்று யாசகம் கேட்கட்டும். அது அவரது சொந்த விஷயம். ஆனால் பா.ஜ.க.வை திருப்திப்படுத்த ஜல்லிக்கட்டுக்கான மாணவர் போராட்டத்தையும் தி.மு.க.வையும் தொடர்புபடுத்தி பேசுவதற்கு எவ்வித அருகதையும் கிடையாது.

"தமிழ் பண்பாட்டிற்காக போராடிய மாணவர்களையும், இளைஞர்களையும் "தேச விரோதிகள்" சமூக விரோதிகள்" "மத தீவிரவாதிகள்" என்று காவல்துறை அதிகாரிகளை தூண்டிவிட்டு பேட்டி கொடுக்க வைத்து, முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எப்படியாவது பதவியிலிருந்து இறக்கி விட வேண்டும் என்று திட்டம் போட்டதே சசிகலாவின் கணவர் நடராஜன் என்று என்னாலும் பகிரங்கமாக குற்றம்சாட்ட முடியும். ஆனால் அப்படிப்பட்ட அணுகுமுறையை எங்களுக்கு திராவிட முன்னேற்றக் கழகமோ, செயல் தலைவர் ஸ்டாலினோ கற்றுக் கொடுக்கவில்லை.

ஆகவே, ஸ்டாலினை மன்னிப்புக் கேட்கக் கோருவதற்கு நடராஜனுக்கு துளியும் அருகதையும் இல்லை. தகுதியும் இல்லை என்பதை ஆணித்தரமாத தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x