Published : 29 Nov 2014 10:51 AM
Last Updated : 29 Nov 2014 10:51 AM

வெளிநாட்டில் இருந்து பறவைகள் வரத்து குறைந்தது: வெறிச்சோடிய வேடந்தாங்கல் - ஏமாற்றத்துடன் திரும்பும் சுற்றுலாப் பயணிகள்

மழை பொழிவு இல்லாததால் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு பறவைகளின் வரத்து குறைந்துள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் புகழ்பெற்ற வேடந்தாங்கல் சரணாலயம் உள்ளது. சுமார் 73 ஏக்கர் பரப்பில் அடர்ந்த மரங்களுடன் காணப்படும் வேடந்தாங்கல் ஏரியில் நிலவும் இதமான தட்பவெப்ப நிலை காரணமாக ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து இனப்பெருக்கம் செய்து பின்னர் குஞ்சுகளுடன் நாடு திரும்பும்.

ஆண்டுதோறும் நவம்பர் மாத சீசனில் நைஜீரியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன. சுற்றுலாப் பயணிகளுக்காக நவம்பர் மாத சீசனில் சரணாலயம் திறக்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் மாவட்டத்தில் மழைப் பொழிவு குறைந்ததால் ஏரியில் தண்ணீர் குறைந்தது. இதனால் பறவைகள் வருவதும் குறைந்தது. அதன் காரணமாக சரணாலயம் மூடப்பட்டது. இதை தொடர்ந்து, சரணாலய நிர்வாகம் பறவைகளின் வசதிக்காக, ஏரியில் பட்டுப்போன நிலையில் இருந்த மரங்களை அகற்றி, புதிய மரக்கன்றுகள் நடும் பணிகளை மேற்கொண்டது. மேலும், ஏரியின் நீர்வரத்து கால்வாய்களை தூர்வாரி சீரமைத்தது.

இந்நிலையில், வடகிழக்கு பருவமழை தொடங்கியதால் வெளிநாட்டு பறவைகள் வரத் தொடங்கின. இதையடுத்து பொது மக்கள் பார்வையிடுவதற்காக கடந்த அக்டோபர் 27-ம் தேதி முதல் சரணாலயம் திறக்கப்பட்டது. ஆனால், எதிர்பார்த்த அளவுக்கு மழை பெய்யாததால், வேடந்தாங்கல் ஏரிக்கு தண்ணீர் வரத்து குறைந்தது. இதனால், சரணாலயத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கையும் குறைந்துள்ளது.

பறவைகளை காண வரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத் துடன் திரும்பிச் செல்கின்றனர்.

இதுகுறித்து, சரணாலய வட்டாரங்கள் கூறியதாவது: ’மழை சீசன் தொடங்கியதும் வழக்கம் போல பறவைகள் வந்தன. ஆனால், ஏரிக்கு தண்ணீர் வரத்து இன்றி, நாளுக்கு நாள் ஏரியின் தண்ணீர் மட்டம் குறைந்து வருவதால் இங்கு வரும் பறவைகள் வெளியே சென்று தங்க ஆரம்பித்துள்ளன.

மேலும், சரணாலயத்தில் தற்போது சாம்பல் நாரை 80, நத்தை கொத்தி நாரை 350, பாம்புதாரா 8, நீர்க்காகம் 400, வெள்ளை அரிவாள் மூக்கன் 450, வக்கா150, சிறிய வெள்ளை கொக்கு190, வெளிர் உடல் அரிவாள் மூக்கன் 10 என சுமார் 1638 பறவைகள் தங்கி உள்ளதாக தெரிகிறது.

கடந்த ஆண்டு இதே சீசனில் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் பறவைகள் வரை தங்கியிருந்தன. மேலும், அருகில் கரிக்கிளி சரணாலயத்திலும் பறவைகள் வரத்து குறைந்துள்ளன. மழை பெய்தால், மீண்டும் சரணாலயத்துக்கு பறவைகள் வரவு அதிகரிக்கும். போதிய பறவைகள் இல்லாததால், வேடந்தாங்கல் சரணாலயத்தில் பைனாககுலர் வைக்கவில்லை. மேலும், பறவைகளைப் புகைப்படம் எடுக்க வருபவர்களும் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x