Last Updated : 24 Dec, 2015 08:19 PM

 

Published : 24 Dec 2015 08:19 PM
Last Updated : 24 Dec 2015 08:19 PM

வீரன் அழகுமுத்துகோன் நினைவு தபால் தலை: மத்திய அமைச்சர் மதுரையில் வெளியிடுகிறார்

வீரன் அழகு முத்துகோன் நினைவு தபால்தலை மதுரையில் வெளியிடப்பட உள்ளது. இதை மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நாளை மறுநாள் சனிக்கிழமை வெளியிடுகிறார்.

மதுரையில் உள்ள காந்தி மியூசியத்தின் திறந்தவெளி அரங்கத்தில் நடைபெறும் இந்த விழாவில் அழகுமுத்துகோனின் குடும்பத்தினர் கௌரவிக்கப்பட உள்ளனர். இதில் டி.அழகுமுத்தம்மாள், ஜி.மீனாட்சி தேவி, டி.சின்ன துரைச்சி, டி.ராஜேஷ்வரி, ஜி.வனஜா மற்றும் எஸ்.ராணி ஆகியோர் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.

மதியம் 2.00 மணிக்கு துவங்க இருக்கும் விழாவில் மத்திய கப்பல் மற்றும் தரைவழி போக்குவரத்து இணை அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணன், பாஜகவின் தமிழக பொறுப்பாளர் முரளிதர் ராவ் மற்றும் ராஜஸ்தான் பாஜகவின் மக்களவை உறுப்பினர் பூபேந்தர் யாதவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இந்த நிகழ்ச்சியில் அழகுமுத்துகோனின் நினைவு தபால்தலையை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் வெளியிட்டு சிறப்புரை ஆற்ற உள்ளார்.

இது குறித்து ‘தி இந்து’விடம் தொலைதொடர்புத்துறை அமைச்சக வட்டாரம் கூறுகையில், ‘பாஜகவின் தேசிய தலைவரான அமித்ஷா சில மாதங்களுக்கு முன் தமிழகம் சென்று அனைத்து சமூகத்தினரையும் தனித்தனியாக சந்தித்து பேசினார். அப்போது அவரை சந்தித்த யாதவர் சமூகத்தினர் வீரன் அழகுமுத்துகோனுக்கு தபால்தலை வெளியிட வேண்டும் எனக் கொரிக்கை விடுத்தனர். பிறகு அமைச்சர் பொன்.இராதாகிருஷ்ணனும் செய்த விடா முயற்சியால் இதற்கு கடந்த வாரம் அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.’ எனத் தெரிவித்தனர்.

மதுரையின் கட்டாலங்குளம் பகுதியை ஆண்ட பட்டய அரசரான அழகுமுத்துகோன் மாவீரனாகக் கருதப்படுகிறார். கடந்த 1728 முதல் 1757 வரை வாழ்ந்த அழகுமுத்துகோன், கப்பம் கட்ட முடியாது என ஆங்கிலேயரை எதிர்த்த முதல் அரசராகக் கருதப்படுகிறார். இவருடன் சேர்ந்த்து 6 படத்தளபதிகள் மற்றும் 248 போர் வீரர்களும் ஒரு போரில் பீரங்கி வாயில் வைத்து சுடப்பட்டு தியாக மரணம் அடைந்தனர். அப்போது பீரங்கி முன் நின்று சாகும் தரிவாயிலும் தன்னை சேர்ந்தவர்கள் யாரையும் காட்டிக் கொடுக்க முடியாது என அழகுமுத்துகோன் கூறியது தமிழக வரலாற்றில் அவரது நெஞ்சுரத்தை காட்டுகிறது. இவருக்கு மதுரையை ஆண்டு பெரிய வீரப்ப நாயக்கர் எழுதிக் கொடுத்த செப்புப் பட்டயத்தில் இருந்து அவர் யாதவர் குலத்தை சேர்ந்தவர் என வரலாற்றாசிரியர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரது நேரடி வாரிசுகள் இன்றும் கட்டாங்குலத்தில் வாழ்ந்து வருவதாகக் கூறப்படுகிறது.

ஐந்து ரூபாய் விலையுள்ள இந்த தபால்தலையில் வீரன் அழகுமுத்துகோனின் உருவப்படம் இடம் பெற்றுள்ளது. இது நினைவு தபால்தலை என்பதால் ஒரே முறையாக ஐந்து லட்சம் எண்ணிக்கையில் அச்சடிக்கப்பட்டு வெளியிடப்பட உள்ளது. இது விற்றுத் தீர்ந்த பின் மீண்டும் அந்த தபால்தலை அச்சடிக்கப்படாது. இதற்கு நினைவு தபால் தலை எனப் பெயர். இதுவன்றி, ‘மை ஸ்டாம்ப்’ மற்றும் ‘ரீசேல்’ என இருவகை தபால் தலைகளும் உண்டு. இதில் மைஸ்டாம்ப் வகையில் விரும்பும் நபரின் புகைப்படமும், ரீசேல் வகையில் அன்றாட பயன்படுத்தப்படும்படி தொடர்ந்து விற்றுத் தீர்ந்த பின் மீண்டும், மீண்டும் அச்சடிக்கப்படும். இந்த நிகழ்ச்சிக்கு பின் அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் மதுரையின் மீனாட்சி கோயிலுக்கும் விஜயம் செய்யத் திட்டமிட்டுள்ளார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x