Published : 16 Sep 2016 08:51 AM
Last Updated : 16 Sep 2016 08:51 AM

வீடு, வாகனம், தொழில் கடன்கள் பெற நாடு முழுவதும் இந்தியன் வங்கி ‘லோன் மேளா’: 2 நாட்கள் நடைபெறுகிறது

இந்தியன் வங்கி சார்பில் செப்டம்பர் 17 மற்றும் 18-ம் தேதிகளில் லோன் மேளா (கடன் வழங்கும் முகாம்) அகில இந்திய அளவில் நடைபெற உள்ளது. இந்த முகாமில் வீட்டுக் கடன், வாகனக் கடன், சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான (முத்ரா) கடன்கள் வழங்கப்பட உள்ளன.

இதுதொடர்பாக இந்தியன் வங்கியின் பொதுமேலாளர்கள் எம்.கார்த்திகேயன், யு.ஏ.பிரசாந்த், ஆர்.மணிமாறன் ஆகியோர் சென்னையில் நேற்று செய்தி யாளர்களிடம் கூறியதாவது: இந்தியன் வங்கி நாடு முழுவதும் வரும் சனி, ஞாயிறுக்கிழமைகளில் கடன் வழங்கும் முகாமை நடத்த இருக்கிறது. குறைந்த வட்டியில் இந்த கடன்கள் வழங்கப்பட இருக்கின்றன.

இந்த முகாமில் உரிய ஆவ ணங்களை சமர்பித்து உடனடிக் கடன்களை பொதுமக்கள் பெற முடியும். மேலும், இந்த முகாமில் கடன் வழங்குவதற்குரிய பரிசீலனைக் கட்டணம் (Processing fee) எதுவும் வசூலிக்கப்படமாட்டது.

முத்ரா திட்டம்

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் முனைவோருக்கு ரூ.10 லட்சம் வரை கடனுதவி வழங்கு வதற்காக முத்ரா கடனுதவி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், பெரும்பாலானோருக்கு முத்ரா திட்டம் குறித்து விழிப்புணர்வு இல்லை. எனவே, இந்தத் திட்டத்தை சிறு தொழில் முனைவோர் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இந்தியன் வங்கியில் பெறப்படும் வீட்டுக் கடனைப் பொருத்தவரை 30 ஆண்டுகள் வரை திரும்பிச் செலுத்தலாம். மேலும், வீட்டுக்கடனுக்கான வட்டியைப் பொருத்தவரை ரூ.75 லட்சம் வரை பெறப்படும் கடனுக்கு 9.55 சதவீதமும், 75 லட்சத்துக்கு மேல் 9.75 சதவீதமும் வசூலிக்கப்படுகிறது.

முகாம் நடைபெறும் இடங்கள்

தமிழகம் முழுவதும் இந்தியன் வங்கிக் கிளைகள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம்கள் நடைபெறும். சென்னை வடக்கு மண்டலத்தைப் பொருத்தவரை அம்பத்தூரில் உள்ள அருள்ஜோதி கல்யாண மண்டபம், அண்ணா நகர் சாந்தி காலனியில் உள்ள நடேசன் கூட்டுறவு மேலாண்மை நிறுவனம், பிராட்வேயில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றம், போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிக்கு அருகில் உள்ள லட்சுமி திருமண மண்டபம், புரசைவாக்கம் தாசப்பிரகாஷ் திருமண மண்டபம், அண்ணா சாலையில் உள்ள கிறிஸ்து சர்ச் பள்ளி ஆகிய இடங்களில் கடன் வழங்கும் முகாம்கள் நடைபெறும்.

சென்னை தெற்கு மண் டலத்தைப் பொருத்தவரை லஸ் கார்னர் அருகே உள்ள காமதேனு கல்யாண மண்டபம், கோடம்பாக்கத்தில் உள்ள மீனாட்சி மகளிர் கல்லூரி, தாம்பரம் (கிழக்கு) பாரதமாதா தெருவில் உள்ள ஜெயகோபால் கரோடியா பள்ளி, தியாராய நகரில் உள்ள இந்தியன் வங்கிக் கிளை, சோழிங்கநல்லூர் பகுதியில் கே.வி.எல்.கல்யாண மண்டபம் ஆகிய இடங்களில் லோன் மேளா நடைபெறும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x