Published : 06 Oct 2016 01:02 PM
Last Updated : 06 Oct 2016 01:02 PM

விவசாயிகளிடம் கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்புவதா?- வங்கிகளுக்கு ராமதாஸ் கண்டனம்

வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகளிடம் வங்கி நிர்வாகங்கள் குண்டர்களை அனுப்பி மிரட்டுவதா என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயிலை அடுத்த அறந்தாங்கியில், வங்கிக் கடனை செலுத்த முடியாத விவசாயியை வங்கி நிர்வாகம் குண்டர்களை அனுப்பி மிரட்டியதால் அச்சமும், அவமானமும் அடைந்த அவர் பொதுமக்கள் முன்னிலையில் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார்.

பொதுத்துறை வங்கி நிர்வாகத்தின் இந்த மனிதநேயமற்ற, காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கை கடுமையாக கண்டிக்கத்தக்கது.

காட்டுமன்னார்கோயிலை அடுத்த அறந்தாங்கி கிராமத்தைச்சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் பாரத ஸ்டேட் வங்கியின் காட்டுமன்னார்கோயில் கிளையில் சில ஆண்டுகளுக்கு முன் டிராக்டர் கடன் வாங்கியுள்ளார்.

உழவு உள்ளிட்ட விவசாயப் பணிகளுக்கு டிராக்டரை வாடகைக்கு விடுவதன் மூலம் கிடைக்கும் வருவாயில் வங்கிக் கடனை அடைப்பது தான் அவரது திட்டமாகும்.

ஆனால், போதிய வருவாய் கிடைக்காததால் கடந்த சில மாதங்களாக அவரால் கடன் தவணையை செலுத்த முடியவில்லை.

இந்த நிலையில், வங்கியின் பிரதிநிதிகள் என்று கூறிக்கொண்டு நேற்று முன்நாள் முத்துராமலிங்கத்தின் வீட்டிற்கு சென்ற குண்டர்கள் சிலர், 5ஆம் தேதிக்குள் வங்கிக் கடனை கூடுதல் வட்டியுடன் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு செலுத்தாவிட்டால் மிக மோசமான விளைவுகள் ஏற்படும் என்றும் மிரட்டியுள்ளனர்.

இதனால் டிராக்டரை குண்டர்கள் உதவியுடன் வங்கி நிர்வாகம் பறிமுதல் செய்து விடுமோ என அஞ்சிய முத்துராமலிங்கம், விவசாயிகள் சங்க நிர்வாகிகளுடன் வங்கிக் கிளைக்கு சென்று முறையிட்டுள்ளார். வங்கிக் கடனை வசூலிக்க குண்டர்களை அனுப்பி மிரட்டிய வங்கி நிர்வாகத்தைக் கண்டித்து விவசாயிகள் போராட்டமும் நடத்தியுள்ளனர்.

ஆனால், டிராக்டரை பறிமுதல் செய்வதில் வங்கி நிர்வாகம் உறுதியாக இருந்ததால் தம்மிடமிருந்த பூச்சி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றிருக்கிறார். தொடர்ந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்.

அண்மைக்காலமாகவே வங்கிகளின் மென்மையான இலக்குகளாக விவசாயிகளும், மாணவர்களும் மாறியுள்ளனர். வேளாண்மைக்காகவும், கல்வி கற்பதற்காகவும் வாங்கிய கடனை செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவர்களையும், விவசாயிகளையும் வங்கி நிர்வாகங்கள் குண்டர்களை அனுப்பி மிரட்டுவது வாடிக்கையாகி விட்டது.

வங்கி நிர்வாகங்கள் மற்றும் குண்டர்களின் மிரட்டல் காரணமாக கடந்த மார்ச் மாதம் 10ஆம் தேதி அரியலூர் மாவட்டம் ஒரத்தூரைச் சேர்ந்த அழகர் என்ற விவசாயி தற்கொலை செய்து கொண்டார்.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாட்டைச் சேர்ந்த பாலன் என்ற விவசாயி கடன் தவணையை செலுத்தாததற்காக அவரை வங்கி அதிகாரிகளும், காவல்துறையினரும் கடுமையாக தாக்கி, டிராக்டரை பறித்துச் செல்லும் காட்சிகள் வாட்ஸ் அப்பில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தின.

அதேபோல், கல்விக் கடனை செலுத்தாததற்காக குண்டர்கள் மிரட்டியதால் மதுரை அனுப்பானடியைச் சேர்ந்த மாணவர் லெனின் தற்கொலை செய்து கொண்டார்.

வங்கிகளுக்கு செலுத்த வேண்டிய கடனை செலுத்தாமல் ஏமாற்ற வேண்டும் என்பது முத்துராமலிங்கம் உள்ளிட்ட விவசாயிகளின் நோக்கம் அல்ல. வீராணம் ஏரி வறண்டு கிடப்பதால் கடந்த சில ஆண்டுகளாக டிராக்டர் மூலம் முத்துராமலிங்கத்துக்கு வருவாய் கிடைக்கவில்லை.

இந்த ஆண்டின் தொடக்கத்தின் வீராணம் ஏரியை தூர்வாரிய அதிகாரிகள், அதில் கிடைத்த மண்ணை முத்துராமலிங்கம் உள்ளிட்டோரின் நிலத்தில் கொட்டியதால் பயிர் செய்ய முடியவில்லை.

விவசாயம், டிராக்டர் ஆகிய இரு ஆதாரங்களின் மூலமும் வருவாய் இல்லாததால் தான் முத்துராமலிங்கத்தால் கடனை செலுத்த முடியவில்லை. இந்த சூழலை புரிந்து கொண்டு கடனை திரும்பச் செலுத்த வங்கி நிர்வாகம் அவகாசம் கொடுத்திருக்க வேண்டும். மாறாக, குண்டர்களை அனுப்பி மிரட்டியதால் அவமானம் தாங்க முடியாமல் முத்துராமலிங்கம் தற்கொலை செய்ய முயன்றிருக்கிறார்.

விவசாயிகளிடம் இந்த அளவு கடுமை காட்டும் வங்கி நிர்வாகங்கள் பெருந்தொழில் நிறுவனங்கள் வாங்கிய கடனை வசூலிப்பதில் மட்டும் கனிவு காட்டுகின்றனர். அந்நிறுவனங்கள் கடனை செலுத்தாவிட்டால், அதை தள்ளுபடி செய்து தயவு காட்டுகின்றனர்.

கடந்த 2 ஆண்டுகளில் மட்டும் தனியார் நிறுவனங்கள் வாங்கிய ரூ.1.10 லட்சம் கோடி கடனை வங்கிகள் தள்ளுபடி செய்திருக்கின்றன. தொழில் நிறுவனங்களின் கண்ணுக்கு வெண்ணெய், விவசாயிகளின் கண்ணுக்கு சுண்ணாம்பு என்ற வங்கிகளின் அணுகுமுறை ஆபத்தானதாகும்.

மக்களுக்கு உணவு படைக்கும் கடவுள்களான விவசாயிகள் கடந்த 5 ஆண்டுகளாக வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் மீளமுடியாத கடன்சுமையில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு உதவ வேண்டியது மத்திய அரசின் கடமையாகும் .

எனவே, தனியார், பொதுத்துறை வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய அனைத்து கடன்களையும் மத்திய அரசு தள்ளுபடி செய்ய வேண்டும். மேலும், முத்துராமலிங்கத்தின் தற்கொலை முயற்சிக்கு காரணமானவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து தண்டிக்க தமிழக அரசு முன்வர வேண்டும்'' என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x