Published : 01 Jan 2017 06:12 PM
Last Updated : 01 Jan 2017 06:12 PM

விவசாயக் கடன்களை தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கடமை: வாசன்

விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வது மத்திய அரசின் கடமையாகும் என்று தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக ஞாயிற்றுக்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கையில், ''பிரதமர் நரேந்திரமோடி கடந்த மாதம் 31-ம் தேதி தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில் ரூபாய் நோட்டு விவகாரத்தில் மக்கள் மீது அரசு ஏற்றிய சுமையை மக்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று கூறியுள்ளார்.

கிராமப்புறப் பகுதிகளில் பணப்பரிவர்த்தனை வங்கிகளின் மூலம் மிகவும் குறைவாகவே நடைபெறுகிறது. இதற்காக கிராமப்புற மக்களுக்கும், விவசாயிகளுக்கும் உடனடியான பணப்பரிவர்த்தனையை செய்வதற்குண்டான எந்தவிதமான நடவடிக்கைகளை அரசு எடுத்திருக்கிறது, இனிமேல் என்ன நடவடிக்கைகளை எடுக்கப்போகிறது என்பது குறித்த அறிவிப்பு அவரது உரையில் இடம் பெறவில்லை.

கறுப்புப் பண ஒழிப்புக்காக பிரதமர் அறிவித்த 50 நாட்களில் பொருளாதார வளர்ச்சி ஏற்படத் தொடங்காமல் அதற்கு நேர்மாறாக தேக்க நிலையே தொடர்கிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைத்து, மீண்டும் நாட்டு மக்கள் பணத்தட்டுப்பாடின்றி, இயல்பு வாழ்க்கைக்கு திரும்ப கூடிய நிலையை ஏற்படுத்த வேண்டியது மத்திய அரசின் கடமையாக இருக்கிறது.

வீட்டுக் கடன், வட்டித் தள்ளுபடி, மூத்த குடிமக்களுக்கான டெபாசிட்டுக்கு வட்டி, கர்ப்பிணி பெண்களுக்கு நிதியுதவி, சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கு கடன் உத்தரவாதம் போன்ற பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.

முக்கியமாக அனைத்து தரப்பு விவசாயிகளின் எதிர்பார்பான தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் உள்ள விவசாயக் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பையும் விவசாயிகள் எதிர்பார்த்தார்கள். இதனையும் நிறைவேற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை'' என்று ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x