Published : 09 Jan 2015 10:24 AM
Last Updated : 09 Jan 2015 10:24 AM

விபத்தில் சிக்கிய காரிலிருந்து சிதறிய பல லட்சம் ரூபாய் மாயம்

கோவை அருகே விபத்தில் சிக்கிய காரிலிருந்து ரூ. 2.44 கோடி பணம் மீட்கப்பட்ட விவகாரத்தில் லட்சக்கணக்கிலான பணம் மாயமாகியுள்ளது. பணத்தின் உரிமையாளர் சரியான தகவலை தெரிவிக்க உடன்படாததால் எவ்வளவு பணம் மாயமானது என்பது குறித்து அதிகாரிகள் குழப்பமடைந்துள்ளனர்.

ஈரோட்டில் இருந்து கேரளத்துக்கு நேற்று முன்தினம் சென்ற சொகுசு கார் கோவை அருகே போடிபாளையம் என்ற இடத்தில் அரசு பேருந்து மீது மோதி திடீரென விபத்தில் சிக்கியது. உடனே, காரில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த கோடிக் கணக்கிலான பணம் சாலையில் சிதறியது. மக்கள் ஓடோடி வந்து சாலையில் கிடந்த பணத்தை அள்ளிச் சென்றனர்.

ரூ. 2.44 கோடி பணத்தை மீட்டு வருமான வரித் துறையினரிடம் ஒப்படைத்ததாக மதுக்கரை போலீஸார் தெரிவித்தனர். பணம் தொடர்பாக நடத்தப்பட்ட விசா ரணையில், ஈரோட்டை சேர்ந்த ரயில்வே கேட்டரிங் ஒப்பந்ததாரர் முஸ்தபா என்பவரது பணம் என்பது தெரியவந்தது. ஆனால், பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக் கான ஆவணங்களை அவர் காட்டவில்லை. இதையடுத்து, அந்த பணம் முழுவதும் ஹவாலா பணமாக இருக்குமா என்பது குறித்து வருமான வரித்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விபத்தில் கார் உருக்குலைந்தபோது வெளியே சிதறிய பணத்தை பொதுமக்கள் சிலர் அள்ளிச் சென்றதாக காரில் பணம் எடுத்து வந்த ஜலீல் என்பவர் போலீஸில் தெரிவித்துள்ளார். மாயமாகியுள்ள பணம் மட்டும் லட்சக்கணக்கில் இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், எவ்வளவு பணம் காரில் பக்கவாட்டு கதவுகளில் பதுக்கி வைக்கப்பட்டு எடுத்து வரப்பட்டது என்பது குறித்து முஸ்தபா சரிவர தெரிவிக்காததால் அதிகாரிகளிடையே குழப்பம் நீடிக்கிறது.

காரில் பதுக்கப்பட்டிருந்தது ரூ. 2.75 கோடி எனவும், ரூ.2.50 கோடி எனவும் மாறிமாறி முஸ்தபா தெரிவிப்பதாக அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், மீட்கப் பட்ட பணம் ரூ. 2.44 கோடி என்பதால் மீதமுள்ள பணம் முழுவதும் மாயமாகியுள்ளது தெரியவந்துள்ளது.

இது தொடர்பாக வருமான வரித் துறையினரிடம் கேட்டபோது, அந்த பணத்துக்கான ஆதாரச் சான்றுகள் அவரிடம் இல்லை என கூறி வருகிறார். இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x