Published : 01 Aug 2015 09:49 AM
Last Updated : 01 Aug 2015 09:49 AM

விடுதியில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்

விடுதியில் அடிப்படை வசதிகளை செய்துதரக் கோரி சட்டக்கல்லூரி மாணவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சென்னை புரசைவாக்கத்தில் அரசு சட்டக் கல்லூரி மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியில் 100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கியுள்ளனர். நேற்று முன்தினம் விடுதியில் மதிய உணவு சாப்பிட்ட மாணவர்களுக்கு தலை சுற்றல், மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து 56 மாணவர்கள் சிகிச்சைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டனர். டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில், மதியம் சாப்பிட்ட உணவில் பிரச்சினை இருப்பது கண்டுபிடிக்கப் பட்டது.

போலீஸார் விடுதிக்கு சென்று பார்த்தபோது, அங்கிருந்த குடிநீர் தொட்டியில் நாய் ஒன்று இறந்து கிடந்தது. இதையடுத்து தண்ணீர் தொட்டியில் இருந்த நாயின் உடல் அப்புறப்படுத்தப்பட்டது. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் சிகிச்சைக்கு பிறகு 51 மாணவர்கள் விடுதிக்கு திரும்பினர். 5 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

பேச்சுவார்த்தை

இந்நிலையில் விடுதியில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி 60-க்கும் மேற்பட்ட மாணவர்கள் புரசைவாக்கம் நெடுஞ்சாலை மில்லர்ஸ் சாலை சந்திப்பில் நேற்று சாலை மறியிலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த சட்டக்கல்லூரி முதல்வர் முருகதாஸ், மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி 15 நாட்களில் அடிப்படை வசதிகளை செய்து தருவதாக உறுதி அளித்தார். இதையடுத்து மாணவர்கள் சாலை மறியலை கைவிட்டனர். மாணவர்களின் சாலை மறியல் போராட்டத்தால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x