Published : 09 Jul 2017 10:21 AM
Last Updated : 09 Jul 2017 10:21 AM

விக்கிபீடியா இணைய தேடுதளத்தில் தமிழ்வழி தகவல் தொகுப்பு: கோவையில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

இணைய உலகில் அறிவுசார் தகவல் தேடுதளமாக உள்ளது விக்கிபீடியா. எளிதில் கட்டுரைகளை பதிவேற்றவும், அதை சரிப்படுத்தவும் முடியும் என்பதால் ஏராளமானோர் பங்களிக்கின்றனர். இந்த சேவை, தமிழ் உள்ளிட்ட உலகின் முன்னணி மொழிகளில் கிடைக்கிறது.

தமிழ் மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கும் நோக்கிலும், கல்வி பயிலும் மாணவர்கள், தமிழில் கற்க விரும்புவோர் பயன்பெறும் வகையிலும் புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழி கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்த்து பதிவேற்றுவது, பயனளிக்கும் கட்டுரைகளை இயற்றி பதிவேற்றுவது உள்ளிட்ட பல்வேறு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

இதற்கான பயிற்சி, கோவையில் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன வளாகத்தில் தொடங்கியது. 30 ஆசிரியர்கள், 10 வேளாண் ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாலுமுத்து தலைமை வகித்தார். உலகமெல்லாம் தமிழ்’ என்ற தலைப்பில் என்.ஆர்.மகாலிங்கம், ‘விக்கியின் தனித்தன்மை’ என்ற தலைப்பில் கு.சண்முகசுந்தரம் ஆகியோர் பேசினர். ஆசிரியர்கள் சத்யபிரபா, அனிதா ஆகியோர் கருத்தாளர் அறிமுகம் செய்தனர்.

இதுகுறித்து முதுநிலை விரிவுரையாளர் ராஜன் கூறும்போது, “விக்கிபீடியாவில் பல்வேறு தகவல்கள் பல மொழிகளில் கிடைத்தாலும், தமிழில் குறைவாகவே உள்ளன. ஆனால், பயன்படுத்துவோர் பட்டியலில் இந்திய அளவில் தமிழ் 2-ம் இடத்தில் உள்ளது. எனவே, பல்வேறு தலைப்புகளில் உள்ள கட்டுரைகள் தமிழாக்கம் செய்யப்பட வேண்டிய கட்டாயம் உள்ளது.

இதற்கான பணிகள், முன்பு தமிழ் வளர்ச்சித் துறை மூலமாக தொடங்கப்பட்டன. மல்டிமீடியா வசதி மூலமாக தமிழ் வழி கட்டுரைகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக, விக்கிபீடியா தேடுதளத்தில் தமிழ் கட்டுரைகளை பதிவேற்றம் செய்ய பயிற்சி அளிக்கிறோம்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் மூலமாக சென்னையில் 7000 பேருக்கு பயிற்சி வழங்கப்பட்டது. அதன்பின், 30 மாவட்டங்களுக்கு 3 கட்டமாக பயிற்சி வழங்கப்படுகிறது. அதில் ஒரு பகுதியாக, கோவையில் 11 மாவட்டங்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.

தமிழில் சொந்தமாக கட்டுரை எழுதி பதிவேற்றுவது, தமிழ் இணைய கல்விக்கழகம் வெளியிட்டுள்ள ஆங்கிலக் கட்டுரைகளை அனைவருக்கும் பயன்படும் வகையில் மொழிபெயர்த்து பதிவேற்றுவது உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. இத்திட்டம் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு பயன் அளிக்கும். வெளிநாட்டில் உள்ளவர்கள், தமிழ் வழியில் பயிலவும் உதவும்” என்றார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x