Published : 23 Jan 2014 12:00 AM
Last Updated : 23 Jan 2014 12:00 AM

வாழ்க்கையை அழித்துக் கொள்வது எளிது; பாதுகாப்பதுதான் கஷ்டம்- இளைஞர் நல விழாவில் நீதிபதி ராஜேஸ்வரன் பேச்சு

சென்னை

சென்னையில் 3-வது இளைஞர் நல விழா புதன்கிழமை தொடங்கியது. இதில், சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.ராஜேஸ்வரன் கலந்து கொண்டு விழா மலரை வெளியிட்டுப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

“நாட்டின் நலன், பாதுகாப்பு, எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு இந்த விழா நடத்தப்படுகிறது. வாழ்க்கையை அழித்துக் கொள்வது எளிது. அதைப் பாதுகாப்பதுதான் கஷ்டம். இதை விளக்கும் வகையில் இங்கு கண்காட்சி வைத்திருக்கிறார்கள். புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க இளைஞர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்” என்றார். அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் டாக்டர் வி.சாந்தா பேசியதாவது:-

“டைபாயிடு, சின்னம்மை, போலியோ போன்றவற்றைக் கட்டுப்படுத்திவிட்டோம். ஆனால், நமது வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றத்தால் புற்றுநோய், மாரடைப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் ஆகியவை உண்டாகின்றன.

பீடி, சுருட்டு, சிகரெட்டு போன்ற புகையிலை சார்ந்த பொருட்கள், மது அருந்துதல், சுகாதாரமின்மை ஆகியவை காரணமாகவும் மேற்கண்ட நோய்கள் வருகின்றன. தற்போது தந்தூரி, ரெட் மீட் சாப்பிடும் பழக்கம் அதிகரித்திருப்பதால் குடல் புற்றுநோய் அதிகரித்துள்ளது. புகையிலை உட்கொள்ளாவிட்டால், 30 சதவீதம் புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்” என்றார்.

இவ்விழாவில், இளைஞர் நல விழா ஒருங்கிணைப்பாளர் லோசாலி, டாக்டர் நெவின் சி.வில்சன், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் ஆகியோர் பேசினர்.

முன்னதாக, தமிழ்நாடு அரசு பல் மருத்துவக் கல்லூரி பேராசிரியர் டாக்டர் எம்.பி. அஸ்வத் நாராயணன் வரவேற்றார். நிறைவில், அடையாறு புற்றுநோய் மருத்துவமனை இ.விதுபாலா நன்றி கூறினார்.

வரும் 26-ம் தேதி வரை நடைபெறும் இளைஞர் நல விழாவையொட்டி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் புகையிலை, மது அருந்துவதால் ஏற்படும் பாதிப்பை விளக்கும் கண்காட்சி நடைபெறுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x