Published : 31 Jan 2017 12:25 PM
Last Updated : 31 Jan 2017 12:25 PM

வங்கி கணக்கு இல்லாமல் பணப்பரிமாற்றம் செய்யலாம்: பிஎஸ்என்எல் - எஸ்பிஐ சார்பில் எம்-வாலட் வசதி அறிமுகம்

வங்கிக் கணக்கு இல்லாமல் பொதுமக்கள், மற்றவர்களுக்கு பணப்பரிமாற்றம் செய்யும் பிஎஸ்என்எல் - பாரத ஸ்டேட் வங்கி (எஸ்பிஐ) சார்பில் விரைவில் 'எம்-வாலட்' வசதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.

இதுகுறித்து மதுரை பிஎஸ் என்எல் பொதுமேலாளர் எஸ்.இ.ராஜம் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பிஎஸ்என்எல் நிர்வாகம், பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைந்து 'மொபிகேஷ் எம்-வாலட்' எனப்படும் நவீன வசதியை அறிமுகம் செய்துள்ளது. இந்த வசதியை உபயோகிப்பவர்கள் வங்கிக் கணக்கு இல்லாமலேயே பணப் பரிமாற்றங்களை தங்கள் செல்போனில் இருந்து சுலபமாக செய்யலாம். இந்த வசதியை பயன்படுத்த கையில் பணம் இருந்தால் மட்டும் போதும். பிஎஸ்என்எல் வாடிக்கையாளர்கள் 'எஸ்பிஐ மொபிகேஷ்' எனப்படும் மென்பொருளை இலவசமாக தங்கள் ஸ்மார்ட் போனில் டவுன் லோடு செய்து கொள்ளலாம். ஸ்மார்ட் போன் வைத்திருக் காதவர்களும் 'எம்-வாலட்' வசதியை எஸ்எம்எஸ் மூலமாக பயன்படுத்தலாம்.

'எம்-வாலட்' பயன்பாட்டாளர்கள் தங்கள் அருகிலுள்ள பிஎஸ்என்எல்-லின் அங்கீகரிக்கப்பட்ட முகவர் களிடம் தாங்கள் விரும்பும் தொகையை செலுத்தி, அந்த தொகையை தங்கள் 'எம்-வாலட்'டில் டெபாசிட் செய்யலாம். அதன்பின் அவர்கள் தங்கள் 'எம்-வாலட்'டில் உள்ள தொகையை தங்கள் பிஎஸ்என்எல் பீரிபெய்டு இணைப்பை ரீசார்ஜ் செய்யவோ தங்கள் பிஎஸ்என்எல் தொலைபேசி அல்லது போஸ்ட் பெய்டு மொபைல் பில் கட்டணத்தை செலுத்தவோ பயன்படுத்தலாம். மின் கட்டணம், குடிநீர் கட்டணம் ஆகியவற்றையும் இந்த புதிய வசதி மூலம் செலுத்தலாம். இந்த புதிய வசதிகளை பிஎஸ்என்எல் நிர்வாகம் அளிக்க உள்ளது. விரைவில் டிக்கெட் புக்கிங், உள்ளிட்ட மற்ற சேவைகளும் இந்த சேவையில் இடம்பெற உள்ளது.

ஒரு வாலட்டில் இருந்து மற்றொரு வாலட்டுக்கோ அல்லது ஒரு வங்கிக் கணக்குக்கோ பணப்பரிமாற்றம் செய்யலாம். அதிகபட்சம் 10 ஆயிரம் ரூபாய் வரை இந்த வசதியை பயன்படுத்தி பணப் பரிமாற்றம் செய்யலாம். இந்த வசதியைப் பயன்படுத்த சேவைக்கு தகுந்தபடி கட்டணம் வசூலிக்கப்படும் என்றார்.

மேலும் இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் கூறி யது: வின்டோஸ் போனில் இந்த வசதியை பயன்படுத்த இன்னும் தொழில்நுட்பம் வரவில்லை. இந்தியாவில் எந்த மூலையில் இருப்பவர்களும், இந்த வசதியை மிக எளிதாக பயன்படுத்தலாம். மற்ற நெட்வொர்க் வாடிக்கை யாளர்களும் இந்த 'எம்-வாலட்' வசதியை பயன்படுத்தலாம். இந்த வசதியில் பண பரிமாற்றத்தில் தவறு நடக்க வாய்ப்பே இல்லை. இந்த புதிய 'மொபிகேஷ் எம்-வாலட்' வசதியை ப்ளே ஸ்டோரில் சென்று டவுன் லோடு செய்து மொபைல் நம்பர், பெயர், பிறந்த தேதியை குறிப்பிட்டால் ஓடிபி நம்பர் வரும். அதை குறிப்பிட்டால் இந்த வசதியை பயன்படுத்தத் தொடங்கலாம் என்றார்.

பிஎஸ்என்எல்-ல் வேலைவாய்ப்பு பயிற்சி

பிஎஸ்என்எல் பொதுமேலாளர் எஸ்.இ.ராஜம் கூறுகையில், பிஎஸ்என்எல் நிர்வாகத்தில் ஆண்டுதோறும் ஏராளமானவர்கள் ஓய்வு பெற்று வருகின்றனர். அவர்களுக்குப் பதில் புதிய பணியாளர்கள் நியமனம் போதுமான அளவில் இல்லாததால் கேபிள் வயர் இணைப்பு, புதிய தொலைபேசி இணைப்பு உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகளுக்கு நிறைய பணியாளர்கள் தேவைப்படுகின்றனர். அதனால், பிஎஸ்என்எல் நிர்வாகமே, குறைந்தபட்சம் 10 வகுப்பு முதல் டிகிரி வரை படித்தவர்களுக்கு 6 வார பிஎஸ்என்எல் குறுகிய கால பயிற்சி படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பயிற்சியில் கேபிள் வயர் இணைப்பு, பாட்டரி பராமரிப்பு உள்ளிட்ட அடிப்படை விஷயங்கள் கற்று தரப்படுகிறது. 3 வார காலம் செய்முறை பயிற்சி, 3 வாரம் வகுப்பறை பயிற்சிகள் பயிற்றுவிக்கப்படுகிறது. இந்த பயிற்சி முடிப்பவர்களுக்கு, ஒப்பந்ததாரர்கள் மூலம், பிஎஸ்என்எல்-ல் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. வெளிநாடுகளிலும் இந்த படிப்புகளுக்கு நிறைய வேலைவாய்ப்பு இருக்கிறது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x