Published : 31 May 2016 04:19 PM
Last Updated : 31 May 2016 04:19 PM

ரூ.570 கோடி பிடிபட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை: பிரதமரிடம் திமுக கோரிக்கை

திருப்பூர் அருகே 3 கண்டெய்னர் லாரிகளில் ரூ. 570 கோடி பணம் பிடிபட்டது குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என திமுக கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோருக்கு திமுக செய்தித் தொடர்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் இன்று அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

''கடந்த மே 13-ம் தேதி திருப்பூர் அருகே திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி அருகே உள்ள செங்கப்பள்ளி என்ற இடத்தில் 3 கண்டெய்னர் லாரிகளில் கொண்டுச் செல்லப்பட்ட ரூ. 570 கோடி பணம் கைப்பற்றப்பட்டது.

மாவட்ட ஆட்சியரும், காவல் துறை அதிகாரிகளும் நடத்திய விசாரணையில் ரூ. 570 கோடி பணம் தொடர்பான எந்த ஆவணங்களும் லாரி ஓட்டுநர்களிடம் இல்லை. லாரிகளில் வந்த ஆந்திர மாநில பாதுகாப்பு அதிகாரிகள் அவர்களுக்குரிய சீருடையில் இல்லை.

பறிமுதல் செய்யப்பட்ட ரூ. 570 கோடி பணம் கோவையில் உள்ள பாரத ஸ்டேட் வங்கியின் (எஸ்பிஐ) கரூவூலத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. பணம் பிடிபட்டு 18 மணி நேரத்துக்குப் பிறகே எஸ்பிஐ சில ஆவணங்களை வழங்கியது.

ரிசர்வ் வங்கி அனுமதியுடன் ரூ. 570 கோடி எடுத்துச் செல்லப்பட்டதாக எஸ்பிஐ கடிதம் அளித்துள்ளது. இந்த அளவு பெரும் தொகையை கொண்டு செல்ல ரிசர்வ் வங்கி வாய்மொழி உத்தரவு வழங்காது. எனவே, இது பல சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு மாநிலத்தில் இருந்து மற்றொரு மாநிலத்துக்கு சாலை வழியாக எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் பெரும் தொகையை எப்படி அனுப்ப முடியும்? வழக்கமாக இதுபோன்ற பெரும் தொகை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் ரயில் மூலமாகவே அனுப்பி வைக்கப்படும்.

பல மணி நேர தாமதத்துக்குப் பிறகு ரூ. 570 கோடி பணம் தங்களுடையது என எஸ்பிஐ ஏற்றது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

எங்களுக்கு கிடைத்த தகவலின்படி நீலகிரி மாவட்டத்தில் இருந்து 8 கண்டெய்னர் லாரிகளில் பணம் ஆந்திரத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. அதில் 3 லாரிகள் மட்டும் திருப்பூர் அருகே பிடிபட்டுள்ளதாக அறிகிறோம்.

இந்தப் பணம் எஸ்பிஐ-க்கு சொந்தமானது என மத்திய அமைச்சர் நியாயப்படுத்தியுள்ளார். ஆனாலும் ரூ. 570 கோடிக்கு உண்மையான உரிமையாளர் யார் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

அண்மையில் கரூரில் அன்புநாதன் என்பவரின் வீட்டிலிருந்து பெருமளவு பணம் கைப்பற்றப்பட்டது இந்த சந்தேகத்தை அதிகப்படுத்தியுள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் தாங்கள் தலையிட்டு சிபிஐ மற்றும் அமலாக்கப் பிரிவு விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். உண்மை குற்றவாளிகளை கண்டறிய வேண்டும்'' என்று டி.கே.எஸ். இளங்கோவன் கூறியுள்ளார்.

இந்த கடிதத்தின் நகலை தலைமை தேர்தல் ஆணையர் நஜீம் ஜைதி, மத்திய வருவாய்த் துறை செயலாளர், ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன், மத்திய உள்துறை செயலாளர், சிபிஐ இயக்குநர், வருமான வரித்துறை தலைமை ஆணையர் ஆகியோருக்கு டி.கே.எஸ். இளங்கோவன் அனுப்பியுள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x