Published : 31 Jan 2017 12:36 PM
Last Updated : 31 Jan 2017 12:36 PM

ரூ.10 நாணய மாலை அணிந்து ஆட்சியரிடம் புகார் தெரிவித்த இளைஞர்

சேலம் வங்கிகள் உள்ளிட்ட பொது இடங்களில் 10 ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாகக் கூறி, நாணயங்களை மாலையாக அணிந்து சேலம் ஆட்சியரிடம் இளைஞர் புகார் தெரிவித்தார்.

சேலம் சன்னியாசி குண்டு பகுதியைச் சேர்ந்தவர் சேகர் (32). இவர் சில்லி சிக்கன் கடை நடத்தி வருகிறார். இவர் 10 ரூபாய் நாணயங்களை பிளாஸ்டிக் கவரில் போட்டும், நாணய மாலை அணிந்தபடி சேலம் ஆட்சியர் வா.சம்பத்திடம் நேற்று புகார் மனு கொடுத்தார்.

மனுவில், 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ரிசர்வ் வங்கி அறிவிப்புகள் அவ்வப்போது வெளியானதால் எனது கடைக்கு வந்தவர்களிடம் 10 ரூபாய் நாணயங்களை நான் வாங்கிக் கொண்டேன். என்னிடம் தற்போது ரூ.2 ஆயிரம் மதிப்புக்கு 10 ரூபாய் நாணயங்கள் உள்ளது. இந்த நாணயங்களை கடைகளில் கொடுத்து பொருள் கேட்டால், நாணயங்களை வாங்க மறுக்கின்றனர். வங்கியில் டெபாசிட் செய்ய முயன்றபோது, வங்கி அதிகாரிகளும் நாணயங்களை வாங்க மறுத்துவிட்டனர்.

சிறிய அளவில் கடை நடத்தி வரும் எனக்கு ரூ.2 ஆயிரம் அளவுக்கு 10 ரூபாய் நாணயங் கள் முடங்கிவிட்டதால், கடையை நடத்துவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. எனவே, நாணயங்களை ரூபாயாக மாற்ற எனக்கு உதவிட வேண்டும் என தெரிவித்துள்ளார்.

“நாணயங்களை வங்கியில் டெபாசிட் செய்யுங்கள். வங்கியில் நாணயங்களை வாங்க மறுப்பு தெரிவித்தால், எனக்கு தகவல் கொடுங்கள்” என ஆட்சியர் கூறி அவரை அனுப்பி வைத்தார்.

இதுகுறித்து ஆட்சியர் நிருபர்களிடம் கூறியதாவது:

சமூக வலைதளங்களில் 10 ரூபாய் நாணயங்கள் செல்லாது என வெளியாகும் தகவல் வதந்தியே. 10 ரூபாய் நாணயங்கள் செல்லும் என ஏற்கெனவே வங்கிகளுக்கும், வியாபாரிகளுக்கும் கூட்டம் நடத்தப்பட்டு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. எனவே 10 ரூபாய் நாணயங்களை வங்கிகள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் ஏற்றுக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x