Published : 30 Dec 2016 02:26 PM
Last Updated : 30 Dec 2016 02:26 PM

ராமநாதபுரத்தில் ரூ.170 கோடி முதலீட்டில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம்: தமிழக அரசு தகவல்

ராமநாதபுரம் மாவட்டத்தில் மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் அமைக்க மத்திய அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதற்காக மத்திய அரசு சார்பில் ரூ.113.90 கோடியும், தமிழக அரசு சார்பில் ரூ.56.95 கோடியும் நிதி முதலீடு செய்ய உள்ளது.

இது தொடர்பாக தமிழக அரசு இன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில், ''தமிழக மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைக் காத்திடவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை பாதுகாத்திடவும், தமிழக அரசு எடுத்துவரும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக பாக்ஜலசந்தி பகுதியில் மீனவர்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில் மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பினை மேற்கொள்ள ஊக்குவித்திடவும், அதற்கு தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை உருவாக்கிடவும், தமிழக முதல்வர், பிரதமர் மோடியிடம் ரூ.1520 கோடி சிறப்பு நிதியுதவியினைக் கோரினார்.

தமிழக அரசு மேற்கொண்ட தொடர் நடவடிக்கைகளின் காரணமாக இச்சிறப்பு நிதியில் கோரப்பட்டிருந்த உட்கட்டமைப்பு வசதிகளின் ஒருபகுதியாக ராமேஸ்வரம் பகுதியில் பாக்ஜலசந்தியில் மீன்பிடி விசைப்படகுகளின் நெரிசலைக் குறைக்கவும், ராமநாதபுரம் மாவட்டம் மூக்கையூர் மற்றும் அதன் அருகில் உள்ள கிராம மீனவர்கள் தங்களது மீன்பிடிப் படகுகளை பாதுகாப்பாக நிறுத்தி, மீன்பிடித் தொழிலினை மேற்கொள்ள ஏதுவாக மூக்கையூர் மீன்பிடித் துறைமுகம் அமைப்பதற்காக ரூ.113.90 கோடி மத்திய அரசின் நிர்வாக ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.

மத்திய அரசின் 50% நிதியுதவியுடன் கட்டப்பட உள்ள இந்த மீன்பிடித் துறைமுகத்தினை அலைத் தடுப்புசுவர், படகு அணையும் தளம், தடுப்புச் சுவர், ஏலக்கூடம், மீன் உலர்தளம், வலைப்பின்னும் கூடம், குளிர்பதன நிலையம், எரிபொருள் நிலையம், படகு பழுதுபார்க்கும் வசதிகள், மீனவர் ஓய்வு அறை மற்றும் நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கூடிய உலகத் தரத்துடன் உருவாக்கிட தேவையான எஞ்சிய 50% தொகையான 56.95 கோடி ரூபாயினை தமிழக அரசு தனது சொந்த நிதியை முதலீடு செய்ய உள்ளது.

ஓப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு விரைவில் பணிகள் தொடங்கப்பட உள்ள இந்த மீன்பிடி துறைமுகம் மூலம் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் மற்றும் மூக்கையூர் மற்றும் அதனை சுற்றியுள்ள மீனவ கிராமங்களைச் சார்ந்த 250 விசைப்படகுகளையும், 200 நாட்டுப்படகுகளையும் மீனவர்கள் பாதுகாப்பாக நிறுத்தி மீன்பிடி தொழிலில் ஈடுபடமுடியும் என்பதோடு, மீனவர்கள் தாங்கள் பிடிக்கும் மீன்களை சுகாதாரமாக கையாள்வதன் மூலம் அவற்றிக்கு ஏற்றுமதி சந்தையில் அதிக விலையினையும் பெற்று வாழ்வில் ஏற்றமடைவர்'' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x