Published : 31 Jan 2017 08:46 AM
Last Updated : 31 Jan 2017 08:46 AM

ராணிப்பேட்டை சிப்காட்டில் ரசாயன தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து

ராணிப்பேட்டை சிப்காட் தொழிற் பேட்டையில் உள்ள ரசாயன தொழிற்சாலையில் நேற்று தீ விபத்து ஏற்பட்டது.

வேலூர் மாவட்டம் ராணிப் பேட்டையை அடுத்த சிப்காட் பகுதி 3-ல் குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த கிரண்குமார் என்பவர் ரசாயன தொழிற்சாலையை நடத்தி வருகிறார். இங்கு, தொழிற்சாலை கழிவுப் பொருட்களை மறுசுழற்சி முறையில் பவுடராக்கி சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு மூலப் பொருட்களாக அனுப்பும் பணி நடக்கிறது.

இந்நிலையில், தொழிற்சாலை யின் ஒரு பகுதியில் நேற்று அதி காலை 4 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. அப்போது, பணியில் இருந்த பாதுகாவலர்கள் அளித்த தகவலின்பேரில் சிப்காட் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அதற்குள், கழிவுப் பொருட்களை தேக்கி வைத்திருந்த கிடங்கில் இருந்த பொருட்கள் வெடித்துச் சிதறின. தீ கொழுந்துவிட்டு எரிந்த தால் சோளிங்கர், ராணிப்பேட்டை, ஆற்காடு, பெல் தொழிற்சாலை மற்றும் காட்பாடி பகுதியில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

தொழிற்சாலையின் பெரும் பகுதி எரிந்ததால், அந்தப் பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளித்தது. வேலூர் உதவி கோட்ட தீயணைப்பு அலுவலர் முருகேசன் தலைமையில் 47 பேர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். 8 மணி நேரம் போராடி தீயை கட்டுப்படுத்தினர்.

பேரிடர் மீட்புப் படை

தீ விபத்தில் தொழிலாளர்கள் யாராவது தொழிற்சாலைக்குள் சிக்கியிருப்பார்களா என்ற சந்தே கம் ஏற்பட்டது. இதையடுத்து, அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடர் மீட்புப் படை குழுவினர் ராணிப்பேட்டை விரைந்தனர். ஆனால், யாரும் தொழிற்சாலைக்குள் சிக்கவில்லை என்பது தெரியவந்தது.

சம்பவ இடத்துக்கு வந்த வேலூர் மாவட்ட ஆட்சியர் ராமன் கூறும் போது, ‘‘தீயை கட்டுப்படுத்த தீய ணைப்பு வீரர்களுக்கு தேவையான தண்ணீர் சப்ளை செய்ய வேலூர் மாநகராட்சி, ராணிப்பேட்டை நகராட்சியின் தண்ணீர் லாரிகள் பயன்படுத்தப்பட்டன.

தீ விபத்தால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கண்காணிக்கின்றனர். மேலும், சிப்காட் பகுதியில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து மருத்துவக் குழுவினர் கண்காணிக்க உள்ளனர்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x