Published : 28 Jun 2016 08:18 AM
Last Updated : 28 Jun 2016 08:18 AM

ரயில் நிலையம் அருகில் இருட்டில் கண்காணிப்பு கேமரா: நடவடிக்கை எடுக்க பயணிகள் கோரிக்கை

தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் பொதுமக்கள் வெளி யேறும் பகுதிகளில் இருட்டு சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் பயனற்றதாகியுள்ளது.

தென்சென்னையின் பிரதான பகுதியாக தாம்பரம் உள்ளது. இதையடுத்த, சிட்லபாக்கம், அஸ்தினாபுரம், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த பொதுமக்கள் தங்கள் போக்கு வரத்துக்காக பெரும்பாலும் மின்சார ரயில்களையே நம்பியுள்ளனர். தாம்பரம் சானடோரியம் ரயில் நிலையத்தில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கானோர், சென்னை நகரை நோக்கி பயணிக்கின்றனர்.

இந்த ரயில் நிலையத்தில் இருந்து இருபுறமும் வெளியில் செல்வதற்கான சுரங்கப்பாதை உள்ளது. சுரங்கப்பாதையில் இருந்து ஜிஎஸ்டி சாலைக்கு செல்லும் வழியில், ரயில் நிலையத்துக்கு அருகில் டாஸ்மாக் மதுபானக்கடை அமைந்துள்ளது. மாலை நேரங்களில் இக்கடையில் அதிகளவு கூட்டம் இருக்கும். இதனால், இப்பகுதியை கடக்க ரயில் பயணிகள் சிரமப்படுகின்றனர். சில நேரங்களில், குடிமகன்கள் சுரங்கப்பாதை வாசல் பகுதியில் வந்து படுத்துக் கொள்கின்றனர். இதனால், சுரங்கப்பாதையை பயன்படுத்தாமல், ரயில் பாதையை ஆபத்தான முறையில் கடந்து செல்கின்றனர். அதேபோல், சுரங்கப்பாதையில் இருந்து சிட்லபாக்கம் பகுதிக்கு செல்ல வெளியேறும் மற்றொரு பாதையில், ஆட்டோ நிறுத்தம் உள்ளது. இப்பகுதியில் உள்ள மேம்பாலத்தூணில், 3 திசைகளுக்கு தனித்தனியாக கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.

அந்த கேமராக்களின் அருகில் தெரு விளக்கும் அமைக்கப்பட்டுள் ளது. ஆனால், இரவு நேரங்களில் அந்த விளக்குகள் பெரும்பாலும் எரிவதில்லை. இதனால், இரவு நேரங்களில் கண்காணிப்பு கேமராக்கள் இயங்கியும் எந்த பயனும் இல்லாமல் போகிறது. மேலும், மழை காலங்களில், இந்த சுரங்கப்பாதையில் இருந்து தண்ணீர் வெளியேற முடியாமல், இடுப்பளவுக்கு மழைநீர் தேங்கி விடும். அந்த நேரங்களில், ரயில் தண்டவாளங்களை கடந்து செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.

சமீபத்தில் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த சம்பவத்தால், ரயில் நிலையத்துக்குளும் வெளி யிலும், பொதுமக்களின் பாது காப்பை உறுதி செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. எனவே, ரயில் ரயில்வே நிர்வாகமும், வெளியில் காவல்துறையும் பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x