Published : 22 Mar 2017 03:30 PM
Last Updated : 22 Mar 2017 03:30 PM

யானைக்கவுனி மேம்பாலத்தில் போக்குவரத்து தடை ஏன்?- அமைச்சர் எஸ்.பி.வேலுமணி விளக்கம்

யானைக்கவுனி பாலம் பழுதடைந்துள்ளதால், அதைப் பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், வாகனப் போக்குவரத்து தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது என்று பேரவையில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்தார்.

சட்டப்பேரவையில் இன்று பட்ஜெட் மீதான 3-ம் நாள் விவாதம் நடைபெற்றது. துறைமுகம் தொகுதிக்குட்பட்ட பழுதடைந்த யானைக்கவுனி மேம்பாலத்தை போக்குவரத்திற்கு பயன்படுத்த தடைசெய்யப்பட்டு இருப்பதால் ஏற்படுகின்ற போக்குவரத்துநெரிசல் குறித்து விவாதிக்க வேண்டும் என்று திமுக எம்.எல்.ஏ. பி.கே.சேகர் பாபு கவன ஈர்ப்பு அறிவிப்பு செய்தார்.

இது தொடர்பாக பேரவையில் நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பதில் அளித்துப் பேசியதாவது:

''பெருநகர சென்னை மாநகராட்சியில், வால்டாக்ஸ் சாலை மற்றும் ராஜா முத்தையா சாலைகளை இணைக்கும், யானைக்கவுனி பாலச் சாலையில் அமைந்துள்ள, யானைக்கவுனி பாலம் ரயில்வே துறையைச் சார்ந்ததாகும். இப்பாலத்தின் இருபுறமும் உள்ள, அணுகுசாலைப் பகுதி மட்டுமே, பெருநகர சென்னை மாநகராட்சியால் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இப்பாலம் தற்போது மிகவும் பழுதடைந்துள்ள காரணத்தால், கனரக மற்றும் இலகு ரக வாகனங்கள் செல்வதற்கு, ரயில்வே துறை மற்றும் போக்குவரத்து காவல்துறையால், தடை செய்யப்பட்டுள்ளது. இப்பாலத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ரயில்வே துறையின் மூலம், இப்பாலத்தின் கீழ், தற்காலிகமாக இரும்புத் தூண்கள் நிறுத்தப்பட்டு, பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இப்பாலத்தின் கீழ் உள்ள, இருப்புப் பாதைகளை கூடுதலாக அமைக்க ஏதுவாக, பாலத்தின் ரயில்வே பகுதி நீளத்தை, 47 மீட்டரிலிருந்து 150 மீட்டருக்கு அகலப்படுத்த, ரயில்வேதுறை உத்தேசித்துள்ளது.

இப்பாலத்தை இடித்துவிட்டு, புதிதாக மேம்பாலம் அமைக்கும் பணியை, ரயில்வே துறை மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியும் இணைந்து, 50 : 50 நிதிப் பங்கீட்டில் மேற்கொள்ள, உத்தேசிக்கப்பட்டுள்ளது.

ரயில்வே பகுதி பாலத்தை மேற்கொள்ள விரிவான திட்ட அறிக்கை மற்றும் வடிவமைப்பு பணிகள் தயார் செய்யப்பட்டு வருவதாக ரயில்வேதுறை தெரிவித்துள்ளது.

ரயில்வே துறையிடமிருந்து விரிவான திட்ட அறிக்கை பெறப்பட்ட பின்னர், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட, அணுகுசாலைப் பகுதிக்கான, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

பழுதடைந்துள்ள பாலத்தின் கீழ், இரும்புத்தூண்கள் நிறுத்தி பலப்படுத்தும் பணிகள் நடைபெற்று வருவதால், யானைக்கவுனி மேம்பாலத்தில், கனரக மற்றும் இலகு ரக வாகனப் போக்குவரத்து தற்போது தடைசெய்யப்பட்டுள்ளது.

தற்போது பேசின் சாலை மற்றும் ராஜா முத்தையாசாலை - ஈ.வெ.ரா பெரியார் சாலைகள் வழியாக, போக்குவரத்து திருப்பி விடப்பட்டுள்ளது" என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x