Last Updated : 28 Jun, 2016 10:12 AM

 

Published : 28 Jun 2016 10:12 AM
Last Updated : 28 Jun 2016 10:12 AM

யானைகள் நடமாட்டத்தை தடுக்க அவரை பயிரிடும் பழங்குடியினர்: யானைகளுக்கு பிடிக்காது என நம்பிக்கை

‘யானை வந்ததால் வாழை, கரும்பு, தென்னை எல்லாம் நாசம் ஆச்சு. கரும்பு தென்னை ஒன்னையும் விட்டு வைக்கல. எனவே விவசாயத் தோட்டங் களுக்குள் வரும் யானைகளை காட்டுக்குள்ளே விரட்டியடிக்க ணும். அதையும் மீறி வரும் யானைகளை பிடிச்சு முகாம்ல அடைக்கணும். இல்லே சுட்டுக் கொல்லணும்’ இப்படி விவசாயிகள் குரல்கள் ஓங்கி ஒலித்ததன் எதிரொலியாய் நடந்த யானை விரட்டும் படலத்தில் ஒரு யானை ரயிலில் அடிபட்டு இறந்தது. இன் னொரு யானை மயக்க ஊசி போட்டு பிடிக்கப்பட்டு கூண்டில் அடைக்கப்பட்டு இறந்தது.

இந்த விவகாரம், வனத்துறை - விவசாயிகள் - இயற்கை ஆர்வலர் களுக்கிடையே சர்ச்சையை வெளிப்படுத்தி வருகிறது.

இதற்கு விதிவிலக்காக பழங்குடியின கிராம மக்கள் சிலர், ‘எங்க ஊர் வழியா போற யானைகளுக்கு அவரை, துவரைன்னா பிடிக்காது. அதனால காலங்காலமா அதையே பயிர் செஞ்சுட்டு வர்றோம்’ என்று தெரிவிக்கின்றனர்.

கோவையிலிருந்து ஆனைகட்டி செல்லும் சாலையில் 25 கிமீ தொலைவில் உள்ள மாங்கரையை அடைந்து, அங்கிருந்து சுமார் 10 கிமீ தொலைவுக்கு ஜீப் மட்டுமே செல்லும் குண்டும் குழியுமான சாலையில் உள்ளது சேம்புக்கரை, தூமனூர்.

உயர்ந்த மலைகள், பள்ளத் தாக்குகள், தூக்கித் தூக்கிப் போடும் அந்த சிறுபாதையில் செல்லும் போதே விதவிதமான பாம்புகளை யும், யானைகளையும் பார்க்க முடி கிறது.

சேம்புக்கரையில் 40 வீடுகளில் 120 பேர் வசிக்கின்றனர். அங்கிருந்து 3 கிமீ தூமனூர். இங்கே சுமார் 80 வீடுகள். 300 பேர் வசிக்கின்றனர். இந்த மக்கள்தான் முழுக்க, முழுக்க யானைகளுக்கு பிடிக்காத அவரையை காலங்காலமாக விளை வித்து பிழைப்பு நடத்தி வருகிறார் கள்.

இதுகுறித்து இங்கு வசித்து வரும் ரங்கம்மாள், பாப்பாள் கூறிய தாவது. ‘இங்கே கரண்ட் கிடையாது. சோலார் மாட்டியிருக்கிறதால வீட் டுக்கு ஒரு பல்ப் எரியும். எதுக்கும்ன் னாலும் மாங்கரை போகோணும், ஆனைகட்டி போகோணும்ன்னா ஜீப்புலதான் எல்லாம். 35 கிலோ அரிசி ரேஷன்ல போடறாங்க. அதுக்கு ஜீப்புக்கு ரூ.100 வாடகை கொடுக்கோணும். அதுவும் 10 பேர் சேர்ந்து எடுத்து வந்தால்தான். இந்த வசதியெல்லாம்கூட இப்ப சில வருஷங்களாத்தான்.

கேரளா, கர்நாடகா போற யானைக நிறைய எங்க ஊர் வழியா போகும். அதனால ஆதிகாலத் துல இருந்தே அவரை, துவரை, தட்டை பயிறு, பச்சை பயிறுன்னு எங்களுக்கான நிலத்துல விதைச்சு பழகிட்டோம். அது மட்டும்தான் பெரியவங்க (யானைகள்) வாய் வைக்க மாட்டாங்க. அதையும் மழை வந்த காலத்துல மட்டும்தான் விதைப்போம், மத்த நாள்ல செங்கல்சூளை, சீமார்புல், வனப் பொருள் சேகரிக்க, ஆடு,மாடு மேய்ச்சல்ன்னு இறங்கிடுவோம்’ என்றனர்.

இங்குள்ள பழங்குடி மக்களுக்கு என ஓரிரு ஏக்கர் நிலங்கள் உள் ளன. அதில் பெயரளவுக்குக் கூட வாழையோ, கரும்போ, தென் னையோ வைப்பதில்லை. அதுபற் றிக்கேட்டால், ‘அதுக்கு நிறையா தண்ணீ வேணும். அப்படியே போர் போட்டு தண்ணி எடுத்து, ஆயில் இன்ஜின் வச்சு ஓட்டி, தண்ணீய பாய்ச்சி வாழை, தென்னைன்னு வச்சா மனுசன் குடியிருக்கவே முடியாது. பெரியவங்க சூறையாடி டுவாங்கள்ல’ என்று கூறுகிறார் ராமன்.

இவர்களின் வாழ்வாதாரமே ரேஷன் அரிசியும், அவரையுமாக இருப்பதால் தினந்தோறும் இவர் கள் உணவில் ரேஷன் அரிசி சோறும், அவரைக்குழம்பு, அவரை பொரியல், அவரை சுண்டல் என்று எல்லாமே அவரை மயமாகவே உள் ளது. 40 குடும்பங்களுக்கு மேல் அவரை, துவரை பயிர் செய்கி றார்கள்.

ஒரு குடும்பத்தினர் வரு டத்துக்கு 5 மூட்டை முதல், 6 மூட்டை வரை அவரை மட்டுமே விளைவித்து சந்தைக்கு அனுப்பு கிறார்களாம். இந்த ஆண்டு மட்டும் ஓரளவு மழை இருந்தது. எனவே இந்த விளைச்சல் கிடைத்தது. இதற்கு முன்பு மூன்றாண்டுகளாக மழையே இல்லை. அதனால் வீட் டுத் தேவைக்கு அவரையை காண்பதே அரிதாக போய்விட்டது என்கின்றனர் இந்த கிராம மக்கள்.

பேராசிரியர்கள் பதில்

பழங்குடியினரின் இந்த நம்பிக்கை குறித்து மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி பேராசிரியர்களிடம் கேட்டபோது, ‘மிளகாய், மிளகு போன்ற காரத் தன்மையுள்ள சில தாவரங்களை காட்டு யானைகள் சாப்பிடுவதில்லை என்பது எங்களது ஆய்வில் தெரியவந்துள்ளது. ஆனால், அவரையை யானைகள் சாப்பிடுமா என்பதை எங்கள் ஆய்வில் உட்படுத்தியதில்லை’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x