Published : 18 Jan 2017 11:52 AM
Last Updated : 18 Jan 2017 11:52 AM

மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களுடன் முதல்வர் ஓபிஎஸ் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்: ஸ்டாலின்

மெரினாவில் போராட்டம் நடத்தி வரும் இளைஞர்களை முதல்வர் சந்தித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இது தொடர்பாக ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், '' ஜல்லிக்கட்டு கோரி மாணவர்களும், இளைஞர்களும் போராட்டம் நடத்தி வரும் மெரினா கடற்கரை பகுதியில் மின்சார விளக்குகளை அணைத்து வைத்துள்ள சென்னை மாநகர காவல்துறைக்கு கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.

தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தைக் காப்பாற்றக் கோரி நடைபெறும் போராட்டப் பகுதியில் அதிமுக அரசு இப்படி இருட்டடிப்பு செய்திருப்பது வேதனையளிக்கிறது.

நேற்று காலையிலிருந்து மாணவர்கள் போராடிக் கொண்டிருந்தும் அமைச்சர்களோ, முதல்வரோ அவர்களை சந்தித்து பேச்சுவார்த்தையும் நடத்தவில்லை. அவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்தக் கருத்தும் தெரிவிக்க இல்லை.

தன்னெழுச்சியாக நடக்கும் இந்த போராட்டத்திற்கு மின் தடை மட்டும் ஏற்படுத்தி விட்டால் போதும் என்ற மனப்பான்மையில் அதிமுக அரசு செயல்படுவது ஜனநாயக நெறிமுறைகளுக்கு முற்றிலும் மாறானது. ஜனநாயக முறையில் நடக்கும் போராட்டங்களை மதித்து அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண முயற்சி செய்வது தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் முதல் கடமை என்பதை அதிமுக அரசு உணர வேண்டும்.

ஆகவே மாணவர்களும், இளைஞர்களும் போராடும் இடத்தில் துண்டிக்கப்பட்ட மின்சாரத்தை முதலில் வழங்கி, மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும்.

முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உடனடியாக போராடும் மாணவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி ஜல்லிக்கட்டு பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x