Published : 06 Jan 2015 09:09 AM
Last Updated : 06 Jan 2015 09:09 AM

முல்லை பெரியாறு அணையை தகர்க்க கேரளம் திட்டம்? - வைகோ அதிர்ச்சித் தகவல்

முல்லை பெரியாறு அணையை கேரள அரசே தகர்த்துவிட்டு, நக்ஸலைட்கள் மீது பழி போட திட்டமிட்டிருப்பதாக தகவல் கிடைத்துள்ளது என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தெரிவித்தார்.

சென்னையில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த கருத்தரங்கில், தடை செய்யப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கத்தை ஆதரித்து பேசியதாக வைகோ மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு சென்னை 3-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றத்தில் வைகோ ஆஜரானார். விசாரணை அதிகாரி சாட்சியம் அளித்தார். அதை பதிவு செய்துகொண்ட நீதிபதி கயல்விழி, வழக்கு விசாரணையை பிப்ரவரி 3-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

பின்னர் நீதிமன்றத்தில் இருந்து வெளியே வந்த வைகோ, நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

நரேந்திர மோடி அரசு, சங்பரிவார் உதவியோடு நம்நாட்டின் வளத்தைச் சுரண்டி பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்தை கைவிட வேண்டும். காவிரியின் குறுக்கே அணை கட்டுவதைத் தடுக்க வேண்டும் என்று விடுக்கப்பட்ட கோரிக்கைகள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

முல்லை பெரியாறு அணையை கேரள அரசே தகர்க்கப்போவதாக வும், அதற்கு நக்ஸலைட்களே காரணம் என்று அவர்கள் மீது பழியை போடப் போவதாகவும் எனக்கு தகவல் கிடைத்துள்ளது. தாமிரபரணி ஆற்றுப் பகுதியில் சோலார் பேனல் அமைக்கும் திட்டத்தை அதானி குடும்பம் மேற் கொள்ள இருக்கிறது. இதற்கு வசதியாக நிலம் கையகப்படுத்தும் சட்டத்தில் அவசர அவசரமாக திருத்தம் கொண்டு வரப்பட்டுள் ளது. எனவே, இந்த திட்டத்துக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யக்கூடாது என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x