Published : 05 Jan 2017 09:13 AM
Last Updated : 05 Jan 2017 09:13 AM

முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை: தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவு

முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க தொடக்கக் கல்வி இயக்ககம் முடிவுசெய்துள்ளது. இதுகுறித்து சம்பந் தப்பட்ட ஆசிரியர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்பப்பட்ட விவர அறிக் கையை ஒருவாரத்துக்குள் அனுப்பு மாறு மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரி களுக்கு திடீர் உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளது.

அரசு பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் தங்களுக்கு நிர்ணயிக்கப் பட்ட கல்வித் தகுதியைக் காட்டிலும் கூடுதல் கல்வித்தகுதி பெற்றிருந்தால் அவர்களுக்கு அதிகபட்சம் 2 ஊக்க ஊதியங்கள் (Incentives) வழங் கப்படுகின்றன. ஒரு ஊக்க ஊதியம் என்பது 2 வருடாந்திர ஊதிய உயர்வைக் (Increment) குறிக்கும். (ஒரு இன்கிரி மென்ட் என்றால் அடிப்படை சம்பளம் மற்றும் தர ஊதியத்தில் 3 சதவீத உயர்வும் அதற்குரிய அகவிலைப்படி யையும் உள்ளடக்கியது).

நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச கல்வித் தகுதியுடன் புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் உயர்கல்வி படிக் கலாம். படித்து முடித்தவுடன் அதற்கான ஊக்க ஊதியங்களைப் பெறலாம். பணியில் உள்ள ஆசிரியர்கள் உயர்கல்வி பயில விரும்பினால் அதற்கு துறையின் முன்அனுமதி பெற வேண்டும். அவ்வாறு முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களுக்கு பின்அனுமதி வழங்கப்பட்டு, உரிய ஊக்க ஊதியம் வழங்கப்பட்டு வந்தது.

ஆனால், தற்போது பின்அனுமதி வழங்கும் முறை நிறுத்தப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர் களுக்கு ஊக்க ஊதியம் வழங்குவதும் நிறுத்தப்பட்டு இருக்கிறது. இவ்வாறு தமிழகம் முழுவதும் உள்ள அரசு தொடக் கப் பள்ளிகள், நடுநிலைப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் ஏறத்தாழ 3 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்கள் முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றுள்ளனர்.

சூழ்நிலை காரணமாக அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரி யர்கள் முன்பு இருந்ததைப் போன்று பின் அனுமதி அளித்து அவர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கங்கள் அரசை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.

இதுகுறித்து தொடக்கக்கல்வி இயக்க கம் அரசின் கவனத்துக்குகொண்டு சென்றது. முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்கள் மீது எடுக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கை குறித்த விவரங்களை அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதற்கு முன்பாக முதலில் அவர்களுக்கு விளக்க நோட்டீஸ் அனுப்ப வேண்டும். அந்த நோட்டீஸஸுக்கு அவர்கள் அளிக்கும் விளக்கத்தைப் பெற்ற பின்னரே ஒழுங்கு நடவடிக்கை எடுக்க முடியும்.

இந்த நிலையில், தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன், சென்னை, கடலூர், பெரம்பலூர், தேனி மாவட்டங்கள் நீங்கலாக மற்ற அனைத்து மாவட்டங்களின் மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கு ஒரு அவசர சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “துறை முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்ற ஆசிரியர்களிடம் ஒழுங்கு நடவடிக்கையின் முதல் கட்டமாக முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி கல்வி பயின்றதற்காக சம்பந்தப்பட்ட ஆசிரியர்களிடம் ஏன் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக்கூடாது என்பதற்கு உரிய விளக்கம் பெற்றும் அந்த விளக்கத்தின் மீதான நடவடிக்கை குறித்தும் ஒரு வாரத்திற்குள் அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.

எச்சரிக்கை செய்யலாம்

ஆசிரியர்கள் மீதான ஒழுங்கு நடவடிக்கை விவகாரம் குறித்து பட்டதாரி ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலாளர் பேட்ரிக் ரெய்மான்ட் கூறியதாவது:

பணியில் உள்ள ஆசிரியர்கள் அரசின் முன்அனுமதி பெற்று உயர்கல்வி படிக்க வேண்டும் என்பது விதிமுறை. சில நேரங்களில் சூழல் காரணமாக முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி படித்த ஆசிரியர்களை எச்சரித்துவிட்டு, பின்அனுமதி (பின்னேற்பு) வழங்கி அவர்களுக்கு ஊக்க ஊதியங்கள் வழங்கப்பட்டுள்ளன. தற்போது அந்த பின்அனுமதி முறையை நிறுத்திவிட்டனர். ஆசிரியர்கள் தங்கள் சொந்த செலவில்தான் மேற்படிப்பு படிக்கிறார்கள். உரிய முறையில் விடுப்பு எடுத்துவிட்டு படிப்பு பணியில் ஈடுபடுகிறார்கள்.

சூழ்நிலை காரணமாக முன்அனுமதி பெறாமல் இருந்திருக்கலாம். அதற்காக அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கக் கூடாது. மாநிலம் முழுவதும் இதுபோன்று ஏறத்தாழ 3 ஆயிரம் ஆசிரியர்கள் முன்அனுமதி பெறாமல் உயர்கல்வி பயின்றிருக்கிறார்கள். ஏற்கெனவே இருந்து வந்த நடைமுறையைப் போன்று இந்த ஆசிரியர்களை எச்சரிக்கை செய்துவிட்டு, உயர்கல்விக்கு பின்அனுமதி அளித்து உரிய ஊக்க ஊதியங்களை வழங்கிவிடலாம். ஆசிரியர்களின் பணிப் பதிவேட்டில் பதியும் வகையில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்று அரசுக்கு வேண்டுகோள் விடுக்கிறோம்.

இவ்வாறு பேட்ரிக் ரெய்மான்ட் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x