Published : 30 Dec 2016 02:50 PM
Last Updated : 30 Dec 2016 02:50 PM

முதல்வர் ஓபிஎஸ் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும்: ஸ்டாலின் வலியுறுத்தல்

தமிழகத்தில் ஆரோக்கியமான நிலை உருவாக முதல்வர் ஓபிஎஸ் பத்திரிகையாளர்களை சந்திக்க வேண்டும் என்று திமுக பொருளாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழகத்தில் அரசியல்-சமூக நிலவரங்களை 24 மணி நேரமும் தொலைக்காட்சி ஊடகங்கள் வழங்கி வருகின்றன. அதுபோலவே நாளேடுகள், வார ஏடுகள் உள்ளிட்ட பத்திரிகைகளும் மக்களுக்கான செய்திகளை வழங்கி வருகின்றன.

மக்களின் அவலங்கள் குறித்து ஆட்சியாளர்கள், குறிப்பாக முதல்வரின் கருத்தை நேரடியாகப் பெற்று வெளியிடும் மரபு கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அற்றுப் போய்விட்டது.

திமுக தலைவர் கருணாநிடி முதல்வராக இருந்த போது தலைமைச் செயலகத்திலும், அவரது இல்லத்திலும், அவர் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடைபெறும் அரங்குகளிலும் ஊடக நண்பர்கள் அவர்களிடம் கருத்துகளைக் கேட்டு வெளியிடுவார்கள்.

ஆனால், ஜெயலலிதா ஆட்சியில் அத்தகைய நடைமுறை அருகிப் போனது. வாரம் ஒரு முறை பத்திரிகையாளர்களை சந்திப்பேன் என 2011ல் பதவியேற்ற நாளில் ஜெயலலிதா வாக்குறுதி தந்தார். ஆனால், அதனை அவர் தனது ஆட்சிக்காலம் முழுவதும் நிறைவேற்றவில்லை. ஊடகத்துறை நண்பர்களும் அவரது வாக்குறுதி குறித்து அவரிடம் வலியுறுத்தவில்லை.

தற்போது முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பொறுப்பேற்றுள்ள நிலையில், ஊடக நண்பர்கள் அவரை சந்தித்து, அரசின் செயல்பாடுகள் மற்றும் மக்களின் கோரிக்கைகள் குறித்து நேரடியாகக் கருத்துகளைப் பெற வேண்டியது அவசியமாகும்.

அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலங்கானா மாநில முதல்வர்கள் அடிக்கடி பத்திரிகையாளர்களை சந்தித்துக் கருத்துகளைத் தெரிவிக்கிறார்கள். பத்திரிகையாளர்களுடன் கலந்தாலோசிக்கிறார்கள். அதுபோல தமிழகத்திலும் ஆரோக்கியமான நிலை உருவாக வேண்டும். அதற்கு முதல்வர் வாய்ப்பளிப்பார் என்றே நினைக்கிறேன்.

முன்னாள் தலைமைச் செயலாளர் அளித்த பேட்டியில், மாநில அரசின் செயல்பாடுகள் குறித்து குற்றம்சாட்டும் தொனியில் கருத்துகளைத் தெரிவித்திருக்கிறார். தான் இன்னமும் தலைமைச் செயலாளர் பதவியில் நீடிப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விளக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் முதல்வருக்கு உள்ளது.

நேற்றைய தினம் போயஸ் தோட்டத்தில் முதல்வரை சந்தித்து பேட்டி எடுத்த ஊடக நண்பர்கள், முன்னாள் தலைமைச் செயலாளரின் குற்றச்சாட்டு குறித்தோ, முன்னாள் முதல்வரின் மரணம் குறித்தான சந்தேகம் பற்றி நீதிமன்றம் எழுப்பிய கேள்விகள் குறித்தோ எந்தக் கேள்வியும் எழுப்பாமல் இருந்தது வேதனையளிக்கிறது.

இரண்டு நாட்களுக்கு முன்பாக தலைமைச் செயலாளரின் குற்றச்சாட்டு பற்றி என்னிடம் கேட்டபோது, ''தமிழக அரசு பற்றி குற்றச்சாட்டு தெரிவித்திருப்பதால் முதல்வர் பதிலளிப்பதுதான் முறையாக இருக்கும். அவரிடம் கேளுங்கள்'', எனவும் தெரிவித்தேன்.

திமுகவைச் சேர்ந்தவர்களிடம் சுதந்திரமாக கேள்வி கேட்கும் உரிமையுள்ள ஊடக நண்பர்கள், அதே சுதந்திரத்தையும், உரிமையையும் ஆளுங்கட்சியிடமும் வெளிப்படுத்த ஏன் தயங்குகிறார்கள் எனத் தெரியவில்லை.

உண்மைகளை வெளிக்கொண்டு வரும் வகையில் ஊடக நண்பர்கள் தயக்கமின்றி செயல்பட வேண்டும் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். தமிழக மக்களின் நலன் கருதி ஊடக நண்பர்கள் இந்தக் கடமையை நிறைவேற்றுவார்கள் என எதிர்பார்க்கிறேன்'' என ஸ்டாலின் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x