Published : 30 Jan 2017 11:15 AM
Last Updated : 30 Jan 2017 11:15 AM

மீண்டும் உயிர்பெறுகிறது கோவை உள்விளையாட்டு அரங்க திட்டம்: ஒரு வருடத்துக்குள் பணிகள் முடியுமென அமைச்சர்கள் உறுதி

கோவை மத்திய சிறை வளாகத்தில் செம்மொழிப் பூங்காவுக்கு பதிலாக உள் விளையாட்டு அரங்கம் அமைக்கும் திட்டம், நீண்ட இடைவெளிக்கு பிறகு செயல்பாட்டுக்கு வந்துள்ளது. ஒரு வருட காலத்தில் உள்விளையாட்டு அரங்கம் தயாராகும் என அமைச்சர்கள் உறுதியளித்துள்ளனர்.

கோவை மாநகரில் உள்ள சிறைத் துறை வளாகத்தை இடம் மாற்றிவிட்டு அங்கு செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும் என 2010-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டது. ஆனால் பணிகள் தொடங்கும் முன்பாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், அத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. 2013-ம் ஆண்டு செம்மொழி பூங்காவுக்கு என தேர்வு செய்யப்பட்ட இடத்துக்கான அரசாணையில் திருத்தம் செய்ய கோவை மாநகராட்சி தீர்மானம் கொண்டு வந்தது. அதைத் தொடர்ந்து செம்மொழிப் பூங்காவுக்காக தேர்வு செய்யப்பட்ட சிறைத்துறை வளாகத்தில் வ.உ.சி. உயிரியல் பூங்காவை விரிவுபடுத்துவது, உலகத் தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் ஆகியவை அமைப்பது என அரசாணையில் திருத்தம் செய்யப்பட்டது. பின்னர், இத்திட்டத்துக்கு தமிழக அரசு ரூ.3.85 கோடி நிதி ஒதுக்கியது. ஆனாலும் பணிகள் தொடங்கப்படாமலேயே காலம் தாழ்த்தப்பட்டு வந்தது.

இந்நிலையில், நீண்ட இடைவெளிக்குப் பிறகு கோவை மாநகரில் சர்வதேச தரத்திலான உள்விளையாட்டு அரங்கம், நீச்சல் குளம் ஆகியவை அமைக்க பணிகள் தொடங்கியுள்ளன. தேர்வு செய்யப்பட்ட இடத்தில் முதல்கட்டமாக விளையாட்டுத்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆகியோர் நேற்று ஆய்வு செய்தனர்.

அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறும்போது, 'தமிழக அரசு விளையாட்டுத் துறையில் தனிக்கவனம் செலுத்தி வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் விளையாட்டு உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தி வருகிறது. கோவையில் அனைத்து வசதிகளுடன் சர்வதேச தரம் வாய்ந்த உள்விளையாட்டு அரங்கம் அமைக்க ரூ.3.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. முதல்கட்டமாக நகரின் மையத்தில் சுமார் 5.63 ஏக்கர் பரப்பளவு இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் விளையாட்டு அரங்கத்தின் பணிகள் முடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் ரூ.1.75 கோடியில் நீச்சல்குளம், ரூ.60 லட்சத்தில் விளையாட்டு விடுதியும், ரூ.1.5 கோடியில் பல்வேறு விளையாட்டுகளுக்கு ஏற்ப உள் விளையாட்டு அரங்கமும் அமைக்கப்பட உள்ளன.

நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறும்போது, 'கோவை மாநகரில் உள் விளையாட்டு அரங்கம் கட்ட உத்தரவிட்டதைப் போல கோவைப்புதூர், மற்றும் நகரின் மற்றொரு பகுதியிலும் புதிய விளையாட்டு மைதானம் அமைக்க கோரிக்கை வைக்கப்பட்டது. அதுதொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன. ரூ.300 கோடி மதிப்பில் மேற்கு புறவழிச்சாலை திட்டமும், ரூ.85 கோடியில் உக்கடம் பகுதியில் பாலம் அமைக்கவும் பணிகள் தொடங்க உள்ளன' என்றார்.

நேரு விளையாட்டு அரங்கத்திலும் அமைச்சர்கள், அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அங்கு தங்கியுள்ள மாணவர்களிடம் குறைகளைக் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின்போது ஆட்சியர் ஹரிஹரன், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாவட்ட நிர்வாக, மாநகராட்சி அதிகாரிகள் ஏராளமானோர் உடனிருந்தனர்.

பள்ளிகளை முறைப்படுத்த அரசாணை

நேரு விளையாட்டு அரங்க வளாகத்தில் உள்ள அரசு அருங்காட்சியகத்தை பார்வையிட்ட அமைச்சர்கள் கூறும்போது, 'கொங்குநாட்டு வரலாற்றை மக்களுக்கு எடுத்துக் கூறும் வகையில் ரூ.2 கோடி மதிப்பில் புதிய அருங்காட்சியகம் அமைக்கப்பட உள்ளது. மேலும் இங்கு அகழ்வாய்வு அருங்காட்சியகமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது' என்றார்.

அங்கீகாரம் இல்லாமல் பல தனியார் பள்ளிகள் இயங்குவது குறித்து கேட்டபோது, 'தமிழகத்தில் அங்கீகாரம் பெறாமல் இயங்கும் தனியார் பள்ளிகளை கண்டறிந்து முறைப்படுத்த தனி அரசாணை விரைவில் வெளியாகும்' என அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x