Last Updated : 05 Dec, 2015 08:58 AM

 

Published : 05 Dec 2015 08:58 AM
Last Updated : 05 Dec 2015 08:58 AM

மின்சாரம் துண்டிப்பு, மழைநீரால் ஜெனரேட்டர் பாதிப்பு: சென்னை தனியார் மருத்துவமனையில் 18 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழப்பு

சென்னை தனியார் மருத்துவ மனையில் மின்சாரம் துண்டிப்பு, மழைநீர் உள்ளே சென்றதால் ஜெனரேட்டர் இயங்காதது போன்ற காரணங்களால் சிகிச்சை பெற முடியாமல் 18 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

சென்னை மணப்பாக்கத்தில் மியாட் மருத்துவமனை உள்ளது. இங்கு இதயம், கல்லீரல், புற்றுநோய் உள்ளிட்ட பிரிவுகளிலும் அவசர மற்றும் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் ஏராளமான நோயாளிகள் சிகிச்சை பெற்றுவந்தனர். பெரும்பாலான நோயாளிகளுக்கு செயற்கை சுவாசம் (வென்டிலேட்டர்) அளிக்கப்பட்டு வந்தது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெய்துவரும் கன மழையால் மின்சாரம் துண்டிக்கப் பட்டிருந்தது. ஜெனரேட்டர் உதவியுடன் மருத்துவமனைக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், மருத்துவ மனைக்குள் மழைநீர் சென்றதால் ஜெனரேட்டர் இயங்குவதும் தடைபட்டுள்ளது. இதனால் தீவிர சிகிச்சைப் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளுக்கு மின்சாரம் கிடைக்காத நிலை ஏற்பட்டது. மருத்துவமனை தெரிவித்த தகவலையடுத்து சுகாதாரத் துறையினர் தேவையான உதவிகளை செய்தனர். ஆனாலும் தீவிர சிகிச்சை மற்றும் செயற்கை சுவாசம் கிடைக்காமல் நோயாளிகள் ஒவ்வொருவராக உயிரிழக்கத் தொடங்கினர். மொத்தம் 18 நோயாளிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். அவர்களில் 4 பேரின் உடல்களை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் எடுத்துச் சென்றுவிட்டனர். மீதமுள்ள 14 பேரின் உடல்கள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப் பட்டுள்ளன. உடல்களை பெற்றுச் செல்வதற்காக உறவினர்கள் திரண்டுள்ளதால், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தனியார் மருத்துவமனையில் 18 பேர் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுதொடர்பாக சுகாதாரத் துறை செயலாளர் ஜெ.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:

மியாட் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழக்கவில்லை. நோயாளிகள் குறிப்பிட்ட நேர இடை வெளியில்தான் இறந்துள்ளனர். ஆக்ஸிஜன் இல்லை என்றால் அனைத்து நோயாளிகளும்தான் இறந்திருப்பர். எனவே, நோயின் தீவிரத்தால்தான் சிலர் இறந்துள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அருகில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 70 வயது முதியவர் மட்டும் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட் டுள்ளார். அதேபோல பல்வேறு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் சில நோயாளிகளும் அரசு மருத்துவ மனைகளுக்கு மாற்றப்பட்டுள்ள னர். நோயாளிகள் தங்களுக்கு விருப்பம் இருந்தால் அரசு மருத்துவமனைகளுக்கு மாறிக் கொள்ளலாம். அதற்கு தேவை யான அனைத்து வசதிகளும் அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் உள்ளன. கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் 3 லாரிகளில் ஆக்ஸிஜன் (பிராணவாயு) தயார் நிலையில் உள்ளது. தனியார் மருத்துவமனைகள் யாருக்காவது ஆக்ஸிஜன் தேவைப்பட்டால் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

சென்னை மணப்பாக்கத்தில் அடையாறு ஆற்றின் கரையோரம் அமைந்துள்ள மியாட் மருத்துவமனை. படம்: பி.ஜோதிராமலிங்கம்

26 உடல்கள்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நீரில் மூழ்கியும், வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும் பலர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் தாக்கி உயிரிழந்த நான்கரை வயது சிறுவன், நீரில் மூழ்கி பலியான கொருக்குப்பேட்டையை சேர்ந்த சங்கர் (38) ஆகியோரது உடல்கள் ஸ்டான்லி மருத்துவமனையிலும், முகப்பேர் கிழக்கு கோல்டன் ஜார்ஜ் நகரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின்வாரிய ஊழியர் ரஞ்சனின் (35) உடல் கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையிலும் வைக்கப் பட்டுள்ளன. இதுதவிர ராயப்பேட்டை அரசு மருத்துவமனை யில் அடையாளம் காணப்படாத 23 பேரின் உடல்கள் வைக்கப்பட்டுள்ளன.

மியாட் மருத்துவமனையில் ஒரே நேரத்தில் 18 நோயாளிகள் உயிரிழக்கவில்லை. நோயாளிகள் குறிப்பிட்ட நேர இடைவெளியில்தான் இறந்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x