Published : 01 Aug 2015 10:07 AM
Last Updated : 01 Aug 2015 10:07 AM

மாவோயிஸ்ட்களிடம் 4 மொழிகளில் கையெழுத்து பெற நீதிமன்றம் அனுமதி: மேல்முறையீடு செய்ய முடிவு

கோவையில் கைதான மாவோயிஸ்ட்கள் 5 பேரிடம் இருந்து 4 மொழிகளில் கையெழுத்து பெற அனுமதிக்க கோரி கியூ பிரிவு போலீஸ் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு நீதிமன்றம் நேற்று அனுமதி வழங்கியது.

கோவை மாவட்டம், கருமத்தம் பட்டியில் பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தைச் சேர்ந்த ரூபேஷ், இவரது மனைவி சைனா, அனூப், வீரமணி, கண்ணன் ஆகிய 5 பேர், கடந்த மே 4-ம் தேதி கைது செய்யப்பட்டனர். இவர்களை தேசிய பாதுகாப்புச் சட்டத்தின்கீழ் அடைப்பதற்கான உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், ஐந்து பேரிடம் இருந்தும் தமிழ், ஆங்கிலம், மலையாளம், கன்னடம் ஆகிய 4 மொழிகளில் கையொப்பம் பெறுவதற்கு நீதிமன்றம் அனுமதி அளிக்க வேண்டும் என கியூ பிரிவு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு மீதான விசாரணை, கோவை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில், நீதிபதி பொங்கியப்பன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

மனு மீது விசாரணை நடத்திய நீதிபதி, 4 மொழிகளில் கையொப்பம் பெறுவதற்கு கியூ பிரிவு போலீஸாருக்கு அனுமதி அளித்தார். கையொப்பத்தை உடனடியாக அளிக்கிறீர்களா என குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் நீதிபதி கேள்வி எழுப்பினார்.

‘நீதிமன்ற உத்தரவை மதிப்பதாகவும், இருப்பினும் உடனடியாக கையெழுத்து அளிக்க விருப்பமில்லை. உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்கிறோம்’ என குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பாலமுருகன் தெரிவித்தார். இதனை நீதிபதி ஏற்றுக்கொண்டார்.

இதையடுத்து, நீதிபதியிடம் சைனா மனு ஒன்றை அளித்தார். அதில், சிறையில் தனக்கு அடிப் படை உரிமைகள் மறுக்கப்படுவ தாகவும், யாருடனும் பேசுவதற்கு அனுமதி அளிக்கப்படுவதில்லை, தனிமையில் அடைக்கப்படுவதாக புகார் தெரிவித்திருந்தார். அந்த மனுவை நீதிபதி பெற்றுக்கொண் டார். தொடர்ந்து, வழக்கின் மறு விசாரணையை வரும் ஆகஸ்ட் 7-ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்டபோது 5 பேரும் மாவோயிஸ்ட் ஆதரவு, போலீஸாரின் நடவடிக்கைகளைக் கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதில், கேரளத்தில் உள்ள வழக்குகளை ஒருங்கிணைத்து நடத்த வேண்டும் என வலியுறுத்தி தொடர்ந்து 7-வது நாளாக ரூபேஷ் உண்ணாவிரதம் இருந்து வருவதாகக் கூறப் படுகிறது. இதனால், நீதிமன்றத் துக்கு அழைத்து வரப்பட்டபோது அவர் மிகவும் சோர்வாகக் காணப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x