Published : 09 Jan 2015 09:57 AM
Last Updated : 09 Jan 2015 09:57 AM

மாணவர்களுக்கு வாசிப்பு சூழலை உருவாக்க வேண்டும்: பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேச்சு

மாணவர்களுக்கு வாசிப்புக்கான சூழலை உருவாக்க வேண்டும் என்று பாரதிய வித்யா பவன் தலைவர் முனைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் கூறினார்.

சென்னை இலக்கியச் சங்கத்தின் தொடக்க விழா சென்னை பல்கலைக்கழகத்தில் நேற்று நடைபெற்றது. பல்வேறு கல்லூரி வளாகங்களில் 3 நாட்கள் நடைபெறும் இலக்கிய சங்கமத்தை சென்னை இலக்கியக் கழகம் நடத்துகிறது.இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட முனைவர் கிருஷ்ணராஜ் வானவராயர் பேசியதாவது:

மாணவர்கள் பாடப் புத்தகங்களைத் தவிர வேறு புத்தகங்களைப் படிப்பதில்லை என்று குறை கூறுகிறோம். ஆனால், அவர்கள் படிப்பதற்கான சூழல் இருக்கிறதா? படிப்பு, தேர்வு, வேலை என்பதை தாண்டி யோசிக்க இன்றைய சூழல் அவர்களை அனுமதிப்பதில்லை.

கடந்த 100 ஆண்டுகளில் ஏற்பட்ட அறிவியல் தொழில்நுட்ப முன்னேற்றம், காலனிய ஆதிக்கத்திலிருந்து இந்தியாவின் விடுதலை, 1990-களில் அமல்படுத்தப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்கள், தகவல் தொழில்நுட்ப புரட்சி ஆகியவை மிகப்பெரிய வாழ்க்கை முறை மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. இதனால், மானுடத்துக்கு பல முன்னேற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், இந்த மாற்றத்தின் வெளிப்பாடுதான் வாசிப்பு பழக்கம் குறைந்திருப்பது.

சென்னை இலக்கிய சங்கமத்தின் நோக்கம் மாணவர்களிடையே இலக்கிய ஆர்வத்தை தூண்ட வேண்டும் என்பது மட்டுமல்ல. அதன் மூலம் மாணவர்களை சமூக அக்கறை கொண்டவர்களாக மாற்ற வேண்டும் என்பதும்தான்.

அதற்கு ஏற்ற சூழலை ஏற்படுத்த இந்த சங்கமமும், நடைபெறவிருக்கின்ற சென்னைப் புத்தக கண்காட்சியும் உதவும். இது ஒரு இயக்கமாக வளர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை இலக்கியக் கழகத்தின் தலைவர் ஒளிவண்ணன் பேசும்போது, “மற்ற நகரங்களில் நடைபெறும் இலக்கிய விழாக்களைப் போல் அல்லாமல் சென்னை இலக்கியச் சங்கமம் மாணவர்களை மையப்படுத்தி நடத்தப்படுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு அதிகமான பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்படுகின்றன” என்றார்.

சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் ஆர்.தாண்டவன், ஆங்கில துறைத் தலைவர் பேரா.ஆம்ஸ்ட்ராங் வாழ்த்துரை வழங்கினர். சென்னை இலக்கியக் கழகத்தின் செயலாளர் ஹேமலதா ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x