Published : 05 Dec 2015 09:26 AM
Last Updated : 05 Dec 2015 09:26 AM

மழைக்கு இதுவரை 245 பேர் பலி: போர்க்கால அடிப்படையில் மீட்புப் பணிகள்- அமைச்சர்கள், அதிகாரிகள் விளக்கம்

அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், ஆர்.வைத்திலிங்கம், தலைமைச் செயலாளர் கு.ஞானதேசிகன் மற்றும் முக்கியத் துறைகளின் செயலாளர்கள் தலைமைச் செயலகத்தில் நேற்று செய்தியாளர்களிடம் கூறிய தாவது:

வடகிழக்கு பருவ மழைக்கு தமிழகத்தில் இதுவரை 245 பேர் பலியாகியுள்ளனர். எவ்வித பாகு பாடும் இல்லாமல் பாதிக்கப்பட்ட அனைத்து பகுதிகளிலும் போர்க்கால அடிப்படையில் மீட்பு, நிவாரணப் பணிகளில் தமிழக அரசின் அனைத்துத் துறைகளும் ஈடுபட்டு வருகின்றன.

மீட்புப் பணிகளுக்காக வந்த முப்படைகள், தேசிய பேரிடர் மீட்புப் படைகளுக்கு தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளித்தது. அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் போர்க்கால அடிப்படையில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து அமைச்சர்களும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் முகாமிட்டுள்ளனர். இதுவரை 3 லட்சத்து 50 ஆயிரம் பேர் மீட்கப்பட்டுள்ளனர். 11 லட்சத்து 53 ஆயிரத்து 59 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

ஆக்சிஜன் பற்றாக்குறையால் பலி

சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 18 பேர் உயிரிழந்துள்ளனர். மின்சாரம் இல்லாததால் உயிரிழந்தனர் என்ற செய்தி தவறானது. சில தனியார் மருத்துவமனைகளில் இருந்து நோயாளிகள் ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 92 நடமாடும் மருத்துவ முகாம்கள் உள்பட 23 ஆயிரத்து 142 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. 18 லட்சத்து 12 ஆயிரம் பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. 30 லட்சத்து 61 ஆயிரம் பேருக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை முழுவதும் வெள்ளிக்கிழமை 8 லட்சத்து 20 ஆயிரம் லிட்டர் ஆவின் பால் விநியோகிக்கப்பட்டுள்ளது. வழக்கமான 11 லட்சத்து 50 ஆயிரம் லிட்டர் ஆவின் விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பெட்ரோல், டீசல் தட்டுப்பாட்டைப் போக்க தண்டையார்பேட்டை எரிபொருள் நிரப்பும் மையத்தில் உள்ள தண்ணீரை வெளியேற்றும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் தட்டுப்பாடு நீங்கும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் 4 ஏரிகளில் இருந்து குறைந்த அளவே நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 89 நீர்த்தேக்கங்களில் 46 நீர்த்தேக்கங்கள் 100 சதவீதம் நிரம்பியுள்ளன. 14 ஆயிரத்து 98 ஏரிகளில் 7 ஆயிரத்து 367 ஏரிகள் முழுமையாக நிரம்பியுள்ளன. இவ்வளவு ஏரிகள் நிரம்பியது இதுவே முதல் முறை.

கடந்த இரு நாள்களாக 65 சதவீதம் பஸ்கள் இயக்கப்பட்டன. வெளியூர் செல்லும் மக்களின் வசதிக்காக கோயம்பேட்டில இருந்து 3 ஆயிரம் பஸ்கள் இயக்கப்பட்டன. பஸ் இயக்கம் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு வருகிறது. சனிக்கிழமை முதல் 100 சதவீத பஸ்கள் இயக்கவும், ரயில் நிலையங்கள், புறநகர் பகுதிகளில் இருந்து கூடுதல் சிறப்பு பஸ்கள் இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x