Published : 22 Mar 2017 10:44 AM
Last Updated : 22 Mar 2017 10:44 AM

மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டம்: கடலாடியில் 247 பேர் கைது

கடலாடி அரசு மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர்கள் இல்லாததை கண்டித்து பூட்டு போடும் போராட்டத்தில் ஈடுபட்ட வர்த்தக சங்கத்தினர் 247 பேரை போலீஸார் கைது செய்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கடலாடியில் அரசு பொது மருத்துவமனை இயங்கி வருகிறது. ஆறு மருத்துவர்கள் பணிபுரியக்கூடிய மருத்துவமனையில் நிரந்தர மருத்துவர்கள் இன்றி, தற்காலிக மருத்துவர் ஒருவர் மட்டுமே பணியில் உள்ளார். இங்கு அடிப்படைத் தேவைகளான தண்ணீர், கழிப்பறை வசதி, இரவில் மின்சார வசதி உள்ளிட்டவைகள் இன்றி நோயாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். கடலாடி மருத்துவமனையில் கடந்த 15 ஆண்டுகளாக இதே அவலநிலை தொடர்கிறது. இப்பிரச்சினையை தீர்க்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனமாக உள்ளது.

இந்நிலையில், கடலாடி வர்த்தக சங்கத்தினர் ஒரு நாள் அடையாள கடை அடைப்பும், -அரசு மருத்துவமனைக்கு பூட்டு போடும் போராட்டத்தையும் நேற்று நடத்தினர். நேற்று காலை 10 மணியளவில் கடலாடி காமராஜர் சிலை முன் திரண்ட வியாபாரிகளும் பொதுமக்களும் வர்த்தக சங்கத் தலைவர் கோட்டைச்சாமி தலைமையில் ஊர்வலமாக சென்று அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். பின்னர் கடலாடி சாயல்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதனால் அச்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ஆர்ப்பாட்டத்தின் போது அரசு மருத்துவமனைக்கு கூடுதல் மருத்துவர்களை நியமிக்கவும், 108 ஆம்புலன்ஸ் வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்தனர்.

பின்னர் மருத்துவமனையை பூட்டுப்போட புறப்பட்டனர். அவர்களை போலீஸார் தடுத்து நிறுத்தி 148 பெண்கள் உள்ளிட்ட 247 பேரைக் கைது செய்தனர்.

முன்னதாக மருத்துவ துணை இயக்குநர் முனியரசு, போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் விரைவில் கூடுதல் மருத்துவர்களை நியமிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட கடலாடியைச் சேர்ந்த குருவம்மாள் என்பவர் கண்ணீருடன் கூறுகையில், கடலாடி மருத்துவமனையில் ஓராண்டிற்கு முன் உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை பெற்று வந்த எனது 12 வயது மகன், மருத்துவர்கள் இல்லாததால் இறந்து போனான். எனக்கு ஏற்பட்ட நிலைமை வேறு எந்த தாய்க்கும் ஏற்படக்கூடாது என அழுது புலம்பினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x