Published : 06 Oct 2016 01:59 PM
Last Updated : 06 Oct 2016 01:59 PM

மரபு மீறாமல் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும்: விஜயகாந்த்

இனி வரும் தேர்தல்கள் தெளிவாக மக்களுக்கு நம்பிக்கை தருவதாக, மரபுகளை மீறாமல், முறையாக நடத்தப்பட வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு என்பது யாரும் எதிர்பாராத ஒன்றாக முதல்நாள் மாலை 6 மணியளவில் தேர்தல் தேதி அறிவித்து மறுநாள் வேட்புமனு தாக்கல் என்று அறிவிக்கப்பட்டது மிகபெரிய சந்தேகத்தை அனைத்து கட்சியினர் சார்பாகவும் எழுப்பப்பட்டது.

தமிழகத்தில் தேர்தல் என்பது மரபுகளை மீறி நியாயமான முறையில் நடக்காத தேர்தலாகவே அமைந்து வருகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை இடைத்தேர்தல்கள், உள்ளாட்சி தேர்தல்கள், பாராளுமன்ற தேர்தல் ஆகியவை ஆளும் கட்சியின் தேர்தல்களாக மாற்றப்பட்டு பல ஆண்டுகள் ஆகின்றன.

தேர்தல் என்பது மக்களின் பயன்பாட்டிற்கும், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகவும் நடக்கவேண்டிய தேர்தல் ஆகும். ஆனால் ஆளும் கட்சி இடும் கட்டளைகளுக்கு இசைந்து கொடுக்கும் தேர்தல்களாக மாறியுள்ளது. அமெரிக்கா போன்ற நாடுகளில் நவம்பர் 8-ம் தேதி அதிபர் தேர்தல் என்றால் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை அதே தேதியில் நிச்சயம் மரபுகளை மீறாத தேர்தலாக நடக்கும். ஆனால் நம்நாட்டில் ஆட்சியாளரே தேர்தல் தேதியும், நடத்தும் முறையும் தீர்மானிப்பவர்களாக உள்ளனர். இப்படி இருக்கும் போது எப்படி இங்கு நியாயமான தேர்தலையும், நியாயமான முடிவுகளையும் எப்படி எதிர்பார்க்க முடியும்.

2006 பொது தேர்தலுக்கு பிறகு திமுக நடத்திய உள்ளாட்சி தேர்தல்களில் எத்தனை முறைகேடுகள் நடந்தது என்பது நாடறியும். அதே பாணியில் அதிமுக அரசும் தங்கள் ஆட்சியில் தங்களுக்கு சாதகமான முறையில் தேர்தல்களை அமைத்துக் கொள்கின்றனர். இந்த நிலை முற்றிலும் மாறி ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வரும் வகையில் தேர்தல்கள் அமையவேண்டும்.

ஏற்கெனவே உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடந்து முடிந்த நிலையில் தேர்தல் ரத்து என்பது ஜனநாயகத்தின் மீதே மிகப்பெரிய கேள்விக்குறியை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை இந்த உள்ளாட்சித் தேர்தலுக்காக 106 கோடி ரூபாய் தேர்தல் ஆணையம் செலவு செய்ததாக ஒரு புள்ளி விவரம் கூறியுள்ளது. இந்த 106 கோடி ரூபாய் என்பது மக்களின் வரிப்பணம், இந்த பணம் முற்றிலும் வீணடிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டும் அல்லாமல் உள்ளாட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் செய்த செலவும் மிகப்பெரிய கேள்விக்குறியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இனிமேல் அறிவிக்கப்படும் தேர்தல்களாவது கேலிகூத்துக்கு உட்படாமல் தெளிவாக மக்களுக்கு நம்பிக்கை தரும் தேர்தல்களாக மரபுகளை மீறாமல், முறையாக நடத்தப்படும் தேர்தல்களாக இருக்க வேண்டும்'' என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x