Published : 07 Dec 2016 05:24 PM
Last Updated : 07 Dec 2016 05:24 PM

மக்கள் பிரச்சினைகளை தீர்க்க புதிய அரசு முழுவீச்சில் செயல்பட வேண்டும்: ராமதாஸ்

மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு புதிய அரசு முழு வீச்சில் செயல்பட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவால் காலமானதையடுத்து ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் 32 உறுப்பினர்களைக் கொண்ட புதிய அமைச்சரவை பதவியேற்றிருக்கிறது. புதிதாக பெறுப்பேற்றுள்ள முதல்வருக்கும், அமைச்சர்களுக்கும் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஓ.பன்னீர் செல்வம் தலைமையிலான அரசு பதவியேற்றுள்ள நேரம் மிகவும் நெருக்கடியான காலகட்டம்தான் என்ற போதிலும், அவசரமாக நிறைவேற்ற வேண்டிய பொறுப்புகளும், கடமைகளும் அதிகமாக உள்ளன. இவைதவிர கடந்த ஐந்தரை ஆண்டுகளில் அறிவிக்கப்பட்டு நிறைவேற்றப்படாத மற்றும் நிதி ஒதுக்கீடு செய்யப்படாத திட்டங்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

2011-ம் ஆண்டில் பதவியேற்ற ஜெயலலிதா தலைமையிலான அரசு இயங்கிக் கொண்டிருந்த போது, 2014-ம் ஆண்டில் சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா பதவி இழந்த பிறகு அரசின் செயல்பாடுகள் முற்றிலுமாக முடங்கின. அதன்பின் அரசின் இயக்கம் இன்று வரை வேகம் பெறவில்லை. தமிழகத்தின் புதிய முதல்வராக பதவியேற்றுள்ள பன்னீர்செல்வம் கடந்த ஆட்சியில் 8 மாதங்கள் முதல்வராக இருந்தார்.

இப்போதைய ஆட்சியில் 48 நாட்களுக்கு முதல்வர் பொறுப்புகளை கவனித்துக் கொண்டார். இந்த காலத்தில் விசுவாசத்தை தான் காட்டினாரே தவிர, திறமையை காட்டவில்லை. அதற்கான வாய்ப்புகளும் அவருக்கு கிடைக்கவில்லை. அவரது கைகள் கட்டப்பட்டிருந்தது உட்பட ஏராளமான காரணங்கள் இதற்கு இருக்கலாம். ஆனால், இப்போது அவருக்கு எந்த தடையும் இருப்பதாகத் தோன்றவில்லை.

இன்னும் நான்கரை ஆண்டு பதவிக்காலம் உள்ள நிலையில், தீர்ப்பதற்கான பிரச்சினைகளும், ஆற்றுவதற்கான பணிகளும் ஏராளமாகவே உள்ளன. இதைக் கருத்தில் கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதற்காக புதிய அரசு முழுவீச்சில் செயல்பட வேண்டும். யாருடைய வழிகாட்டுதலுக்கும் இடம் தராமல் அரசியல் சட்டத்தை மட்டுமே வழிகாட்டியாகக் கொண்டு செயல்பட வேண்டும்.

அரசின் திட்டங்கள் மற்றும் முடிவுகள் குறித்து அரசியல் சட்ட வரம்புக்கு உட்பட்டவர்களைத் தவிர மற்றவர்கள் எவருடனும் விவாதிக்காமல், பதவியேற்பின் போது அரசியலமைப்புச் சட்டத்தின் 164(3)பிரிவின் கீழ் ஏற்றுக் கொண்ட உறுதிமொழியை முழுமையாக மதித்து நடக்க வேண்டும். நல்லாட்சிக்கான இலக்கணங்களை மதித்து ஆட்சி செய்தால் புதிய அரசை மக்கள் வாழ்த்துவார்கள்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.





FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x