Published : 28 Jun 2016 07:56 AM
Last Updated : 28 Jun 2016 07:56 AM

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு தொடங்கியது: இசிஇ பிரிவில் சேர அதிக ஆர்வம்

பொறியியல் படிப்புக்கான பொது கலந்தாய்வு அண்ணா பல்கலைக்கழகத்தில் நேற்று தொடங்கியது. வழக்கம்போல் இசிஇ பாடப்பிரிவில் சேர மாணவ-மாணவிகள் ஆர்வமாக உள்ளனர். தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களைப் பிடித்தவர்களில் 5 பேர் இசிஇ பாடப்பிரிவையே தேர்வு செய்தனர்.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான விளையாட்டுப் பிரிவு மற்றும் மாற்றுத்திறனாளி களுக்கான சிறப்பு கலந்தாய்வு முடிவடைந்த நிலையில், பொது கலந்தாய்வு (அகாடமிக்) நேற்று தொடங்கியது. தரவரிசைப் பட்டி யலில் முதலிடத்தைப் பிடித்த மாணவி ஏ.அபூர்வா தர்ஷிணி கிண்டி பொறியியல் கல்லூரியில் எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூ னிகேஷன் பாடப்பிரிவை (இசிஇ) தேர்வுசெய்தார். 2-ம் இடம் பெற்ற மாணவர் வி.விக்னேஷ் மருத்துவப் படிப்புக்குச் சென்றுவிட்டதால் அவர் கலந்தாய்வில் கலந்துகொள்ள வில்லை. 3-ம் இடத்தைப் பிடித்த மாணவர் என்.பரதன், 4-ம் இடம் பெற்ற மாணவி ஆர்.ரக் ஷனா ஆகியோர் கிண்டி பொறியியல் கல்லூரியில் மெக்கானிக்கல் பிரிவை தேர்வுசெய்தனர். 5-ம் இடம் பெற்ற எஸ்.சிவராம் ருத்விக் இசிஇ பாடப்பிரிவையும், 6-ம் இடம் பிடித்த மாணவி கேஎம்.ஹர்ஷிதா கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடத்தையும், 7-ம் இடம் பெற்ற ஷேக் அப்துல் சமீது இசிஇ பாடப்பிரிவையும் தேர்வுசெய்தனர்.

தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்ற முதல் 10 பேர்களில் 5 பேர் இசிஇ பாடப்பிரிவையே தேர்வுசெய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் அனைவருக்கும் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கல்லூரி ஒதுக்கீட்டு ஆணையை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

அப்போது உயர்கல்வித் துறை செயலர் ஏ.கார்த்திக், தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.மதுமதி, அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் எஸ்.கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் இந்துமதி, மாணவர் சேர்க்கை இயக்குநர் ஜி.நாகராஜன், நுழைவுத்தேர்வுகள் இயக்குநர் பி.மல்லிகா, கிண்டி பொறியியல் கல்லூரி டீன் நாராயணசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொது கலந்தாய்வின் முதல் நாளான நேற்று 3 ஆயிரம் மாணவர்கள் கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டனர். பெரும்பாலான மாணவர்கள் கலந்தாய்வுக்கு தங்கள் பெற்றோருடன் வந்திருந்த னர். வெளியூர் மாணவர்களுக்கு ஓய்வறை, கேன்டீன் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் அண்ணா பல்கலைக்கழகத்தில் செய்யப்பட்டுள்ளன.

கலந்தாய்வு மூலம் ஒதுக்கீட்டு ஆணை பெறும் மாணவர்களுக்கு உடனடியாக கல்விக்கடன் வழங்கும் வகையில் வங்கிகள் கலந்தாய்வு நடக்கும் இடம் அருகிலேயே அரங்குகள் அமைத்துள்ளன.

கலந்தாய்வு நடைபெறும் அண்ணா பல்கலைக்கழகத்தில் துண்டறிக்கை விநியோகிக்கவும், குறிப்பிட்ட கல்லூரியில் சேரச் சொல்லி மாணவர்களுக்கு சிபாரிசு செய்வதற்கும் தடை விதிக்கப் பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x