Last Updated : 08 Nov, 2016 10:26 AM

 

Published : 08 Nov 2016 10:26 AM
Last Updated : 08 Nov 2016 10:26 AM

பைக்கில் இருந்து விழுந்து 2 மாணவர்கள் படுகாயம்: போக்குவரத்து போலீஸ் கெடுபிடிக்கு காரணம் என்ன?- பரபரப்பு தகவல்கள்

திடீரென மறித்த போக்குவரத்து போலீஸ்காரரின் கால் உடைந்தது

கல்லூரி மாணவர் ஓட்டி வந்த இரு சக்கர வாகனத்தை போக்குவரத்து போலீஸ் ஒருவர் திடீரென மறித்தபோது கட்டுப்பாட்டை இழந்த இரு சக்கர வாகனம் மோதி போலீஸின் கால் உடைந்தது. நிலை தடுமாறி விழுந்த கல்லூரி மாணவர்கள் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

இரு சக்கர வாகன விபத்துகளில் பெரும்பாலும் ஹெல்மெட் அணியாத வாகன ஓட்டிகளே பலியாகினர். இதைத் தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூலை 1-ம் தேதி முதல் ஹெல்மெட் அணிவதை சென்னை உயர் நீதிமன்றம் கட்டாயமாக்கியது. ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு சென்னை போக்குவரத்து போலீஸார் ரூ.100 அபராதம் விதித்து வருகின்றனர்.

அதன்படி, சென்னையில் தினமும் சுமார் 200 இடங்களில் போக்குவரத்து போலீஸார் சுழற்சி முறையில் வாகன சோதனையில் ஈடுபட்டு அபராதம் விதித்து வருகின்றனர். கடந்த 2015 ஜூலை 1-ம் தேதி முதல் இந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதிவரை ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகள் மீது 4 லட்சத்து 43 ஆயிரத்து 657 வழக்குகள் பதியப்பட்டுள்ளது.

ஹெல்மெட் அணியாத இரு சக்கர வாகன ஓட்டிகள் மீது போக்குவரத்து போலீஸார் கடுமையாக நடந்துகொள்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதை நிரூபிக்கும் வகையில் பல சம்பவங்கள் நடந்துள்ளன.

கடந்த ஆண்டு மே மாதம் கே.கே நகரில் இரு சக்கர வாகனத்தில் சென்ற செல்வம் என்ற இளைஞரை போக்குவரத்து போலீஸார் பிடிக்க விரட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முற்பட்டபோது விபத்து ஏற்பட்டு சாலை தடுப்பில் விழுந்து செல்வம் பலியானார். அவரது நண்பர் படுகாயம் அடைந்தார். அதே போலவே இருசக்கர வாகனத்தில் செல்பவர்களை மடக்குகிறோம் என்ற பெயரில் மறைந்து இருந்து திடீரென இரு சக்கர வாகனம் முன் பாய்ந்து மடக்குவதாகவும், இதனால், வாகன ஓட்டிகளில் பலர் அடிக்கடி விபத்துகளில் சிக்கும் நிலைமை ஏற்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், நிற்காமல் செல்லும் வாகன ஓட்டிகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவங்களும் நடந்துள்ளன.

இதே பாணியில் தற்போது மீண்டும் ஒரு சம்பவம் மெரினா கலங்கரை விளக்கம் (போலீஸ் டிஜிபி அலுவலகம் உள்ள பகுதியில்) அருகே நேற்று காலை 9 மணிக்கு நடந்துள்ளது.

சூளையை சேர்ந்தவர் மோகித் (19). சென்னையில் உள்ள கல்லூரி ஒன்றில் பிபிஏ 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் தனது நண்பரும், அதே கல்லூரியில் படிப்பவருமான கெல்லீசை சேர்ந்த புவன் குப்தா (19) என்பவருடன் நேற்று பெசன்ட் நகர் சென்று அங்கு படிப்பு சம்பந்தமாக புகைப்படம் எடுத்துக் கொண்டு மெரினா வழியாக வீடு திரும்பிக் கொண்டு இருந்தார். அப்போது அவர் ஹெல்மெட் அணியாமல் வந்தார்.

அவர்களை கலங்கரை விளக்கம் எதிரே காமராஜர் சாலையில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து முதல்நிலை காவலர் புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஷாம்வெஸ்லிதாஸ் (33) என்பவர் திடீரென வழிமறித்தார். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த மோகித்தின் இரு சக்கர வாகனம் மோதியதில் ஷாம்வெஸ்லிதாஸின் வலது கால் உடைந்தது. மாணவர்களும் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தனர்.

தற்போது மாணவர்கள் டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையிலும், ஷாம்வெஸ்லிதாஸ் மற்றொரு தனியார் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

போக்குவரத்து போலீஸார் பதுங்கி இருந்து திடீரென வாகன ஒட்டிகளை மறிப்பதே விபத்துக்கு காரணம் என கூறப்படுகிறது. வாகன சோதனையில் ஈடுபடும் போலீஸாருக்கு வாகன தணிக்கை செய்யும்போது நடந்துகொள்ளும் முறை? பேசும் முறை? அபராதம் விதிக்கும் முறை உள்ளிட்டவை குறித்து முறையான பயிற்சி வகுப்புகள் நடத்தினால் மட்டுமே விரும்பத்தகாத நிகழ்வுகளை தடுக்க முடியும் என பொது மக்கள் கூறிவருகின்றனர். இதற்கிடையில், மாணவர்களுக்கு ஆதரவாக போக்குவரத்து போலீஸாருக்கு எதிராக காமராஜர் சாலையில் சிறிது நேரம் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

கெடுபிடிக்கு காரணம் என்ன?

போக்குவரத்து எஸ்ஐ ஒருவர் கூறும்போது, “ஹெல்மெட் அபராத வழக்கை எஸ்ஐ அந்தஸ்தில் உள்ளவர் பதிவு செய்கிறார். அவர் தினமும் 30 அல்லது 40 வழக்கு பதிவு செய்ய வேண்டும். மேலும் குடிபோதை தொடர்பாக 4 கார் ஓட்டுநர், 6 பைக் ஓட்டிகளுக்கு அபராதம் விதிக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால் எங்களுக்கு விளக்கம் கேட்டு குறிப்பாணை (மெமோ) அனுப்புவார்கள். இப்படி 2 மெமோ வந்தால் எங்களுக்கு பதவி உயர்வில் சிக்கல் ஏற்படும். எனவே, நாங்கள் சில நேரங்களில் கடுமையாக நடக்க வேண்டியுள்ளது. இதற்கு காரணம் எங்களது உயர் அதிகாரிகளின் கெடுபிடிதான்” என்றார். மேலும் ஒரு போக்குவரத்து போலீஸ் ஒருவர் கூறும்போது, “பணிக்கு வரும்போது எந்த நோயும் கிடையாது. ஆனால் தற்போது சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு உள்ளிட்ட நோய்கள் வந்துவிட்டன. காரணம் காலையில் 8 மணிக்கு பணிக்கு வர வேண்டும். நாங்கள் குடியிருக்கும் பகுதி ஒன்று அதிகாரிகள் எங்களுக்கு பணி ஒதுக்கும் இடம் மற்றொன்றாக இருக்கும். எங்க ளுக்கு கொடுக்கப்பட்ட இலக்கை பூர்த்தி செய்யாமல் வீடு திரும்ப முடியாது.

இதனால் சாவு வீட்டுக்கு செல்பவர்கள், பள்ளிக் குழந்தைகளை அழைத்துச் செல்பவர்கள் என பல தரப்பட்ட ஹெல்மெட் அணியாத இருசக்கர வாகன ஓட்டிகளை மறித்து அபராதம் விதிக்கிறோம். அவர்கள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்துவார்கள். இதனால், மன அழுத்தம் ஏற்பட்டு பல நோய்கள் வந்துவிட்டன என ஆதங்கப்பட்டார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x