Published : 05 Dec 2015 10:03 AM
Last Updated : 05 Dec 2015 10:03 AM

பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து கூடுதல் நிவாரண நிதி ஒதுக்க வேண்டும்: மத்திய அரசுக்கு தலைவர்கள் கோரிக்கை

தமிழகத்தை பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

இது தொடர்பாக அரசியல் கட்சி தலைவர்கள் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

வைகோ (மதிமுக பொதுச் செயலாளர்):

பிஹார் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு முன்பு அம்மாநில வளர்ச்சிக்கு ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை மத்திய அரசு அளிக்கும் என்று பிரதமர் அறிவித்தார். இந்நிலையில், தமிழகத்தை பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவித்து, ரூ.50 ஆயிரம் கோடியை வெள்ள நிவாரண நிதியாக வழங்க வேண்டும்.

இரா.முத்தரசன் (இந்திய கம்யூ. மாநிலச் செயலாளர்):

இதுவரை இல்லாத அளவுக்கு சென்னையில் பெய்த மழையால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மக்கள் உணவு , தங்குமிடமின்றி தவிக்கின்றனர். வெள்ள நிவாரண நிதியாக ரூ.5 ஆயிரம் கோடி வழங்க வேண்டும் என்று தமிழக முதல் அமைச்சர் கோரிக்கை விடுத்த நிலையில், ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் தருவதாக பிரதமர் அறிவித்துள்ளார்.

ஜி.கே.வாசன் (தமாகா தலைவர்):

கனமழை காரணமாக தமிழகம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்துக்கு இடைக்கால நிவாரண நிதியாக ஆயிரம் கோடி ரூபாயை பிரதமர் அறிவித்துள்ளார். தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு இந்த நிதி போதாது. எனவே, இடைக்கால நிவாரண நிதியை உயர்த்தி வழங்க வேண்டும். இத்தகைய சூழலில் அரசியலுக்கு அப்பாற்பட்டு, பாதிக் கப்பட்டவர்களுக்கு அனைவரும் உதவ வேண்டும்.

கி.வீரமணி (திக தலைவர்):

தமிழகத்தில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது. எனவே, தமிழகத்தை பேரிடர் பாதிப்பு மாநிலமாக அறிவித்து, தேவையான நிவாரண உதவியை மத்திய அரசு வழங்க வேண்டும். அரசு இயந்திரத்தை வேகமாக முடுக்கிவிட வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x