Published : 01 Aug 2015 09:27 AM
Last Updated : 01 Aug 2015 09:27 AM

பேச்சுவார்த்தையில் அதிகாரிகள் வேகம் காட்டவில்லை: சசிபெருமாள் இறப்பு குறித்து பரபரப்பு குற்றச்சாட்டு

மதுவுக்கு எதிரான பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்தவர் காந்தியவாதி சசிபெருமாள். தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி நீண்டகாலமாக போராடி வந்தவர்.

கன்னியாகுமரி மாவட்டம், உண்ணாமலைக்கடையில் செயல்படும் டாஸ்மாக் மதுக்கடையை மூடக்கோரி நேற்று அவர் நடத்திய போராட்டத்தின்போது அதிகாரிகள் விரைந்து பேச்சு நடத்தியிருந்தால் அவரை உயிருடன் மீட்டிருக்கலாம் என பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

கடந்த 2013 ஜனவரி 30-ம் தேதி சென்னையில் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கி, 33 நாட்கள் உண்ணாவிரதம் இருந்தார். டெல்லியிலும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டார்.

கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி அன்று கன்னியாகுமரி காந்தி மண்டபத்திலிருந்து சென்னை நோக்கி மதுவுக்கு எதிரான பிரச்சார நடைபயணம் மேற்கொண்டார். இதேபோல் கடந்த ஆண்டு டிசம்பர் 23-ம் தேதி மதுவுக்கு எதிராக மாணவர்களைத் திரட்டி 'தீபச் சுடர்' போராட்டத்தையும் கன்னியாகுமரியில் இருந்து தொடங்கினார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் மதுவுக்கு எதிரானவர்களை ஓரணியில் திரட்டும் பணியை முன்னெடுத்திருந்தார் சசிபெருமாள். சில தினங்களுக்கு முன்பு, திமுக ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என கருணாநிதி கூறியதும், அவரை நேரில் சந்தித்து மகிழ்ச்சி தெரிவித்தார்.

தொடர்ந்து மதுவுக்கு எதிரான போராட்ட களத்தில் இருந்த அவர், மதுக்கடை எதிர்ப்பு போராட்டத்தி லேயே மரணமடைந்தார்.

திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மனோதங்கராஜ் கூறும்போது, 'அனைத்து கட்சி சார்பில் தீக்குளிப்பு போராட்டம் நடப்பதாக அறிவிக்கப்பட்டும், முன்னெச்சரிக்கை நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. அதிகாரிகள் வந்த பின்பும் பேச்சுவார்த்தையில் வேகம் காட்டவில்லை. செல்பேசி கோபுரத்தின் உச்சியில் நின்று கொண்டிருந்தார் சசிபெருமாள். பேச்சுவார்த்தையில் வேகம் காட்டியிருந்தால் சசிபெருமாளை உயிருடன் மீட்டிருக்கலாம்' என்றார் அவர்.

பேச்சுவார்த்தை நீண்டது

கன்னியாகுமரி மாவட்ட டாஸ்மாக் அதிகாரி செல்வமணியிடம் கேட்டபோது, 'காலை 9 மணிக்கெல்லாம் பேச்சுவார்த்தைக்கு சென்று விட்டோம். நாங்கள் முதலில் 30 நாளில் அகற்றுகிறோம் எனத் தெரிவித்தோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. தொடர்ந்து 15 நாள் என வாக்குறுதி கொடுத்தோம். அதிலும் உடன்பாடு ஏற்படவில்லை. இதையடுத்து 7 நாளில் அகற்றுவதாக தெரிவித்தோம். அதையும் எழுத்துபூர்வமாக கொடுக்க வேண்டும் என்றனர். அதனால்தான் பேச்சுவார்த்தைக்கான நேரம் இழுத்தது. எனினும் நான் உரிய நேரத்தில் பேச்சுவார்த்தைக்கு சென்று விட்டேன்' என்றார் அவர்.

ஆட்சியர் சொல்வது என்ன?

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் சவானிடம் கேட்டபோது, 'டாஸ்மாக் அதிகாரிகள் உடனே சம்பவ இடத்துக்கு சென்று விட்டனர். அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையை மாற்ற அதிகாரிகள் வேறு இடம் தேடி வந்தனர்' என்றார் அவர்.

கதிர்வீச்சு பாதிப்பு இருக்குமா?

செல்பேசி கோபுரங்களில் பொதுமக்கள் ஏறாமல் தடுப்பது குறித்து, பி.எஸ்.என்.எல். நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:

"பொதுவாக செல்போன் டவர்களில் ஏறுவது சட்டப்படி குற்றமாகும். எனினும், சிலர் சட்டவிரோதமான முறையில் ஏறுகின்றனர். மேலும், செல்போன் டவர்களில் கதிர்வீச்சு இருக்கும். இருப்பினும் ஒருவர் உயிரை பாதிக்கின்ற அளவிற்கு இருக்காது. சசிபெருமாள் விஷயத்தில் அவர் டவர் மீது ஏறியவுடன் அவருக்கு தலைச்சுற்றல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏதேனும் ஏற்பட்டிருக்கலாம். அதன் காரணமாகக்கூட அவர் உயிரிழந்திருக்கலாம்'' என்றார்.

தற்கொலை வழக்கு பதிவு

சசிபெருமாள் மரணம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீஸார் 174-வது பிரிவின் (தற்கொலை) கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

`போலீஸாரும், தீயணைப்பு வீரர்களும் கீழே இறங்க கூறியும், கோபுரத்தில் இருந்து சசி பெருமாள் இறங்கவில்லை. தீயணைப்பு வீரர்கள் மேலே ஏறத் தொடங்கினர். அப்போது அவர் கையில் இருந்த கயிறை கழுத்தில் மாட்டிக் கொண்டு, கோபுரத்தில் தொங்கினார். தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். இருந்தும் பலனின்றி இறந்து போனார்' என முதல் தகவல் அறிக்கையில் போலீஸார் கூறியுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x