Last Updated : 07 Dec, 2016 08:39 AM

 

Published : 07 Dec 2016 08:39 AM
Last Updated : 07 Dec 2016 08:39 AM

பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் அழகு ஆங்கிலத்தை பயின்ற ஜெயலலிதா: பள்ளிக் கால புகைப்படத்தின் கதை

தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் மறைவால் பெங்களூருவில் அவர் படித்த பள்ளியின் மாணவிகளும் முன்னாள் இந்நாள் ஆசிரியர்களும் ஆழ்ந்த‌ வருத்தம் அடைந்துள்ளனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வில் உள்ள பிரபலமான பிஷப் காட்டன் பள்ளியில் ஜெயலலிதா எல்கேஜி முதல் நான்காம் வகுப்பு வரை 6 ஆண்டுகள் படித்தார். அப்போது அழகாக ஆங்கிலம் பேச, எழுத கற்றுக்கொண்ட அவர் கல்வியிலும் விளையாட்டிலும் சுட்டியாக விளங்கினார். இதை நினைவுகூரும் வகையில் பிஷப் காட்டன் பள்ளியின் மாணவிகள் தங்கள் பள்ளியில் படித்த ஜெயலலிதாவுக்கு நேற்று மவுன அஞ்சலி செலுத்தினர்.

பிஷப் காட்டன் பள்ளியின் முன் னாள் தாளாளர் ஸ்டெல்லா சாமு வேல் நீர்க்கோர்த்த கண்களுடன் கூறியதாவது:

‘‘எங்கள் பள்ளியின் முன்னாள் மாணவி என்பதால் ஜெயலலி தாவை எங்கள் குடும்பத்தில் ஒரு வராகவே பார்த்தோம். அவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்தே சரியாக தூங்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் அவரது பிறந்த நாளை எங்கள் பள்ளி மாணவர்களுடன் இனிப்பு வழங்கி கொண்டாடினோம்.

கடந்த முறை முதல்வராக பொறுப்பேற்றபோதுகூட, பதவி ஏற்பு விழாவுக்கு வர வேண்டும் என எங்கள் பள்ளியின் நிர்வாகிகள் 3 பேருக்கு அழைப்பிதழுடன் விமான டிக்கெட் அனுப்பி இருந்தார்.

தமிழகத்துக்கு மட்டுமில்லாமல் தேச எல்லைகளைக் கடந்து ஒட்டு மொத்த பெண் சமுதாயத்துக்கும் ஜெயலலிதா பெருமையாக விளங்கி னார். ஜெயலலிதாவின் மறைவு பிஷப் காட்டன் பள்ளி குடும்பத் துக்கே பேரிழப்பு ஆகும்'' என்றார்.

புகைப்படத்தின் கதை

இதைத் தொடர்ந்து ஸ்டெல்லா சாமுவேல், ''எனக்கு சிறுவயதில் இருந்தே ஜெயலலிதாவைப் பிடிக் கும். அவரும் எம்ஜிஆரும் சேர்ந்து நடித்த படங்களை விரும்பிப் பார்ப் பேன். சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரு பிஷப் காட்டன் பள்ளியில் ஆசிரியராகப் பணியில் சேர்ந்தேன். சில ஆண்டுகள் கழித்து நண்பர் ஒருவர், ‘‘உங்களுக்குத் தெரியுமா? தமிழக ஜெயலலிதா பிஷப் காட்டனில் தான் படித்தார்'' என்றார். இந்தச் செய்தி எனக்குள் விவரிக்க‌ முடியாத சந்தோஷத்தை ஏற்படுத்தியது.

‘‘நான் பணியாற்றும் பள்ளியில் ஜெயலலிதா படித்தாரா? இதைக் கண்டுபிடிக்க வேண்டும்'' என எனக்குள் தேடலைத் தொடங்கினேன். ஜெயலலிதா பள்ளியில் படித்த ஆண்டை கணக்குப் போட்டு, அந்த ஆண்டில் படித்த மாணவர்களையும் போதித்த ஆசிரியர்களையும் தேடினேன்.

ஸ்டெல்லா சாமுவேல்

அப்போது என்னுடன் பணியாற் றிய ஆசிரியை ஃபாத்திமா ஜாஃபர், ‘‘நானும் அதே காலக்கட்டத்தில் தான் படித்தேன். ஜெயா என்பவர் என்னுடன்தான் படித்தார். நாங்கள் எடுத்துக்கொண்ட புகைப்படம் காணாமல் போய்விட்டது’’ என்றார். இதையடுத்து ஃபாத்திமா ஜாஃபர் உடன் படித்த மாணவிகளைத் தேடும் பணியை தொடங்கினேன். அப்போது பெங்களூருவைச் சேர்ந்த‌ ஆயர் சம்பத் குமாரின் மனைவி டாரத்தி, சாந்தா ஆகியோரும் ஃபாத்திமா ஜாஃபருடன் படித்தது தெரிய வந்தது.

நான் பிஷப் காட்டன் பள்ளியின் தாளாளராக ஆனபிறகு, டாரத்தியை தேடிப்பிடித்து விசாரித்தபோது, ஆச்சரியமூட்டும் புகைப்படத்தைக் காண்பித்தார். 1950களின் இறுதியில் எடுக்கப்பட்ட அந்தப் படத்தில் இறுதியில் ஜெயலலிதா உட்கார்ந்து இருந்தார். இந்தப் புகைப்படத்தை வைத்துக்கொண்டு, பள்ளியில் பழைய கோப்புகளை தேடிய போது 1952-ம் ஆண்டு முதல் 1958 வரை ‘‘ஜெயலலிதா ஜெயராமன்''என்ற பெயரில் தமிழக முதல்வர் 6 ஆண்டுகள் எங்கள் பள்ளியில் படித்தது உறுதியானது.

இதையடுத்து அந்தப் புகைப் படத்தில் இருக்கும் ஆசிரியை மோர்த்தி, மாணவிகள் ஒவ்வொருவரின் பெயர்களையும் கண்டுபிடித்தேன். இந்தப் புகைப்படத் திலுள்ள ஒவ்வொருவரையும் சந்திக்கும்போதும், ‘‘எங்களோடு படித்த ஜெயா தான், ஜெயலலிதாவா? அவருடனா நான் எல்கேஜி முதல் 4-ம் வகுப்பு வரை படித்தேன்'' என ஆச்சரியத்துடன் கேட்டனர்.

சில ஆண்டுகள் பிஷப் காட்டன் ஹாஸ்டலில் ஆங்கிலோ இந்திய ஆசிரியைகளுடன் இருந்த தால் அழகாக ஆங்கிலம் பேசுவார் என ஒவ்வொருவரும் விவரித்தனர்.

இந்தத் தகவலையெல்லாம் திரட்டிக் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு, இந்தப் புகைப்படத்தை ஜெயலலிதாவுக்கு அனுப்பி வைத்தேன். இந்தப் புகைப்படத்தைப் பார்த்து மிகவும் ஆச்சரியப்பட்டு, எனக்கு நன்றி கூறினார். ஜெயலலிதாவை மையமாக கொண்டு, ஒரு புகைப்படத்தைத் தேடிய பயணம் உண்மையிலே இப்போதும் எனக்கு சிலிர்ப்பாக இருக்கிறது''என மலரும் நினைவு களைப் பகிர்ந்து கொண்டார்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x