Last Updated : 23 Jan, 2015 08:54 AM

 

Published : 23 Jan 2015 08:54 AM
Last Updated : 23 Jan 2015 08:54 AM

புது அமைப்பு தொடங்க வலியுறுத்தல்: சிதம்பரம் ஆதரவாளர்களுடன் கார்த்தி ஆலோசனை - விளக்கம் கேட்க கட்சித் தலைமை முடிவு

முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம் பரத்தின் ஆதரவாளர்களுடன் கார்த்தி சிதம்பரம் நேற்று திடீரென ஆலோசனைக் கூட்டம் நடத்தியது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுசம்பந்தமாக விளக்கம் கேட்கப்படும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் இளங்கோவன் கூறினார்.

ஜி.கே.வாசன் மீண்டும் தமாகா தொடங்கியதை அடுத்து, ப.சிதம்பரம் ஆதரவாளர்கள் தங்களுக்கு காங்கிரஸில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் பதவி, ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வழங்கப்பட்டது. அப்போதிருந்தே, சிதம்பரம் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளனர்.

இந்நிலையில், ப.சிதம்பரத்தின் ஆதரவாளர்களை அவரது மகன் கார்த்தி சிதம்பரம் நேற்று திடீரென சந்தித்து ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். சென்னை ஆந்திரா கிளப்பில் இக்கூட்டம் நடந்தது. இதுகுறித்து சிதம்பரம் ஆதரவாளர்கள் சிலர் கூறியதாவது:

தமிழக காங்கிரஸில் வாசன் இருந்தவரை கட்சியை முழுக்க முழுக்க தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார். அவரது நடவடிக்கைகளால், காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது. அவர் சென்றதும், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தலைவரானார். அதன் பிறகு, கட்சியில் இளைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்கவேண்டும் என்று ப.சிதம்பரம் தொடர்ந்து கோரிக்கை வைத்தார். அதை இளங்கோவன் கண்டுகொள்ளவில்லை.

கட்சி தொடர்ந்து பின்னடைவைச் சந்திப்பதைக் கருத்தில் கொண்டு ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து தொகுதி வாரியாக 300-க்கும் அதிகமானவர்கள் பங்கேற்றனர். அவரவர் பகுதிகளில் சிதம்பரத்தை முன்னிலைப்படுத்த வேண்டும் என்று வலிறுத்தி பலர் பேசினர். 2001-ல் தமாகாவில் இருந்து ப.சிதம்பரம் வெளியே வந்து ‘காங்கிரஸ் ஜனநாயகப் பேரவை’ தொடங்கியதுபோல, ‘சோஷலிஸ்ட் பேரவை’ என்ற அமைப்பை தற்போது தொடங்க வேண்டும் என்றும் சிலர் கூறினர். முதலில் காங்கிரஸில் நம்மை பலப்படுத்துங்கள் என்று கார்த்தி சிதம்பரம் கூறினார்.

இவ்வாறு சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறினர்.

இப்படி ஒரு ஆலோசனைக் கூட்டம் நடத்த கட்சித் தலைமையின் அனுமதி பெறப்படவில்லை. முறைப்படி தலைமைக்கு தெரிவிக்கவும் இல்லை. இது காங்கிரஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக தமிழக மேலிட பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் மற்றும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் ஆகியோரிடம் சிலர் புகார் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது.

இதுபற்றி கார்த்தி சிதம்பரத்திடம் கேட்டபோது, ‘‘இது என் தனிப்பட்ட முறையிலான சந்திப்பு. நட்பு ரீதியாக சிலரை சந்தித்தேன். அவ்வளவுதான்’’ என்றார்.

இதுதொடர்பாக ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனிடம் கேட்டதற்கு, ‘‘கட்சி அனுமதியின்றி தனிப்பட்ட முறையில் கூட்டங்கள் நடத்துவது கட்சிக்கு விரோதமானது. இதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் நிச்சயம் விளக்கம் கேட்கப்படும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x