Published : 01 Aug 2015 01:07 PM
Last Updated : 01 Aug 2015 01:07 PM

புதுக்கோட்டை அருகே மயானத்தில் குடியேறிய கிராம மக்கள்: கழிவுகள் கொட்டுவதை தடுக்காததால் போராட்டம்

பிறபகுதியில் இருந்து கொண்டுவந்து தங்கள் கிராமத்தில் கழிவுகள் கொட்டுவதைத் தடுக்காததைக் கண்டித்து பாதிக்கப்பட்ட கிராமத்தினர் நேற்று மயானத்தில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை அருகேயுள்ள அக்கச்சிப்பட்டி கிராமத்தில் சுமார் 500 குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

கந்தர்வக்கோட்டையில் உள்ள நூற்றுக்கணக்கான கடைகளில் இருந்து இறைச்சி, பிளாஸ்டிக், காய்கறி கழிவுகள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகள் அக்கச்சிப்பட்டி கிராமத்தில் கொட்டப்படுகின்றன.

மேலும், கந்தர்வக்கோட்டையில் உள்ள குடியிருப்பு மற்றும் கடைவீதியிலிருந்து வெளியேற்றப்படும் கழிவுநீரும் அக்கச்சிப்பட்டியில் உள்ள குளம் மற்றும் பொது இடங்களில் விடப்படுகிறது. இப்பகுதியில் உள்ள குடிநீர் ஆதாரங்களில் கழிவுநீர் கலப்பதால் மக்கள் குடிநீருக்கு திண்டாடும் சூழல் ஏற்பட்டுள்ளது. மேலும், கொட்டப்படும் கழிவுகள் மக்குவதால் இப்பகுதியில் துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகளை எரிப்பதால் அப்பகுதியில் புகைமூண்டு அப்பகுதி மக்கள் சுவாசிக்க முடியாமல் திணறுகின்றனர். கழிவுகளை தூக்கிச் செல்லும் பறவைகள் மக்கள் பயன்படுத்தும் தண்ணீர் பாத்திரங்கள், குடிநீர் தொட்டிகளில் விட்டுச் செல்கின்றன.

இதனால், அக்கச்சிப்பட்டி கிராமத்தில் சுகாதாரமற்ற சூழலும், மக்கள் வசிக்க தகுதியற்ற நிலையும் ஏற்பட்டுள்ளது. இந்த சுகாதார சீர்கேட்டால் அங்குள்ள அரசு நடுநிலைப் பள்ளி மாணவர்களும் மிகவும் அவதிப்படுகின்றனர்.

கந்தர்வக்கோட்டையிலிருந்து கொண்டுவந்து அக்கச்சிப்பட்டியில் கழிவுகள் கொட்டுவதை தடுக்க வேண்டும் என கந்தர்வக்கோட்டை ஊராட்சி ஒன்றிய நிர்வாகத்தினர், மாவட்ட நிர்வாகத்தினருக்கு கிராம மக்கள் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதையடுத்து, கழிவுகள் தங்கள் பகுதியில் கொட்டப்படுவதை தடுக்காததைக் கண்டித்து, அக்கச்சிப்பட்டி கிராமத்தினர் பாமக மாவட்டச் செயலாளர் முத்துக்குமரன் தலைமையில் சமையல் பாத்திரங்கள், கால்நடைகளுடன் அங்குள்ள மயானப்பகுதியில் குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து 3 மாதத்துக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என கந்தர்வக்கோட்டை வட்டாட்சியர், ஒன்றிய ஆணையர் மற்றும் போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து மக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x