Published : 31 Jan 2017 05:56 PM
Last Updated : 31 Jan 2017 05:56 PM

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகையை உயர்த்துக: ராமதாஸ்

பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவில் இடைநிற்றல் விகிதம் அதிகமாக இருப்பதால், பள்ளியில் சேரும் மாணவர்கள் பாதியில் படிப்பை நிறுத்தாமல் தொடர்ந்து படிப்பதற்கு வசதியாகவும், தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் வகையிலும் பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு பல்வேறு நிலைகளில் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

பத்தாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டத்தின்படி ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ.25, ஆறு முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு ரூ.40, 9 மற்றும் 10-ம் வகுப்பு படிப்போருக்கு ரூ.50 வீதம் மாத உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது போதுமானதல்ல என்பதால் இத்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நிதிச்சுமையை காரணம் காட்டி நிராகரிக்கப்பட்டிருக்கிறது. இது கண்டிக்கத்தக்கது.

பட்டியலின மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கும் இதே போன்ற கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ் மாதந்திர உதவித் தொகையாக ரூ.110 முதல் ரூ.150 வரை வழங்கப்படுகிறது. இச்சமூகப் பிரிவினரில் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சம் வரை உள்ளவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இது அவர்களுக்கு பயனுள்ளதாக அமைந்திருக்கிறது.

கல்வி உதவித் தொகை வழங்குவதில் உள்ள பாகுபாடுகள் களையப்பட வேண்டும். பிற பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகையை இன்றைய தேவைக்கு ஏற்றவாறு உயர்த்தி வழங்க வேண்டும். இதைப் பெறுவதற்கான ஆண்டு வருமான வரம்பும் உயர்த்தப்பட வேண்டும். மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்திடம் இருந்து நிதி அமைச்சகம் பெற்று அதற்கு நிதி ஒப்புதல் அளிப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்" என்று ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x