Published : 20 Sep 2015 11:04 AM
Last Updated : 20 Sep 2015 11:04 AM

பாலியல் பலாத்கார வழக்கில் மெத்தனம்: 4 போலீஸாருக்கு கட்டாய பணி ஓய்வு - வேலூர் சரக டிஐஜி உத்தரவு

பள்ளி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட ஆய்வாளர் உட்பட 4 பேருக்கு கட்டாய பணி ஓய்வு கொடுத்து வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார்.

குடியாத்தம் அடுத்துள்ள கே.வி.குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுநர் பாண்டியன். இவரது உறவினர் மகள், அங் குள்ள அரசுப் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். பாண்டியனின் ஆட்டோவில்தான் அந்த மாணவி பள் ளிக்கு சென்று வருவது வழக்கம். கடந்த 2013-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி பள்ளியில் இருந்து வீடு திரும்பிக் கொண்டி ருந்த மாணவியை, பாண்டியன் தனியாக அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாகக் கூறப்படுகிறது.

வீட்டுக்கு தாமதமாக வந்த மாணவியிடம் பெற்றோர் விசாரித்துள்ளனர். அப்போது, பாண்டியன் தன்னிடம் நடந்துகொண்ட விதம் குறித்து மாணவி கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர், பாண்டியனை பிடித்து கே.வி.குப்பம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். ஆனால், ஆய்வாளர் சம்பத், உதவி ஆய்வாளர் டோமினிக், தனிப்பிரிவு காவலர் மோகனம், தலைமைக் காவலர் கோபி ஆகியோர் பாண்டியன் மீது மது போதையில் வாகனம் ஓட்டியதாகக் கூறி வழக்கு பதிவு செய்து, வீட்டுக்கு அனுப்பிவிட்டனர்.

இதற்கிடையில், தான் கொடுத்த புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது குறித்து அப்போதைய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமாரிடம் மாணவியின் பெற்றோர் புகார் கொடுத்தனர். அதன்பேரில் இந்த வழக்கு குடியாத்தம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டு பாண்டியன் கைது செய் யப்பட்டார்.

மேலும், புகார் மனு மீது மெத்தனமாக செயல்பட்டதாக ஆய்வாளர் சம்பத், உதவி ஆய்வாளர் டோமினிக், மோகனம், கோபி ஆகியோர் மீது துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

அதில், வழக்கு பதிவு செய்யாமல் 4 பேரும் மெத்தனமாக செயல்பட்டது உறுதியானது. இதையடுத்து, ஆய்வாளர் சம்பத் உள்ளிட்ட 4 பேருக்கு கட்டாய ஓய்வு அளித்து வேலூர் சரக டிஐஜி தமிழ்ச்சந்திரன் உத்தரவிட்டுள்ளார். இதற்கான உத்தரவு நகல் 4 பேருக்கும் நேற்று முன்தினம் வழங்கப்பட்டது.

மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் பாண்டியனுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத் தக்கது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x