Last Updated : 03 Jul, 2017 11:49 AM

 

Published : 03 Jul 2017 11:49 AM
Last Updated : 03 Jul 2017 11:49 AM

பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத போதும் பொடி விதைப்பு நெல் சாகுபடியில் குமரி விவசாயிகள் தீவிரம்: 1,000 ஹெக்டேரில் நாற்றுகள் துளிர்விட்டன

கன்னியாகுமரி மாவட்டத்தில் கன்னிப்பூ சாகுபடி பாசனத்துக்கு தேவையான தண்ணீர் இருப்பு இல்லாத நிலையில், பருவ மழையை நம்பி பொடிவிதைப்பு நெல்சாகுபடியில் விவசாயிகள் களம் இறங்கியுள்ளனர். 1,000 ஹெக்டேருக்கு மேல் விதை நெல் தூவிய நிலையில் அவ்வப்போது பெய்யும் மழையால் வயல்களில் நெல் நாற்றுகள் துளிர் விட்டுள்ளன. நெற்பயிர்கள் செழிப்பாக வளர இன்னும் 3 மாத காலத்துக்கு தண்ணீர் தேவைப்படும் நிலையில், மழை கைகொடுக்காவிட்டால் நெல்லுக்கு பதில் வைக்கோல் தான் மிஞ்சும் என்று அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

இம்மாவட்டத்தில் கடந்த கும்பப்பூ சாகுபடிக்கு பருவமழை கைகொடுக்காததால் பாதிக்கும் மேற்பட்ட நெல்வயல்களில் மகசூல் இழப்பு ஏற்பட்டது. இந்நிலையில் கடந்த மாதம் தொடக்கத்தில் கன்னிப்பூ சாகுபடியை ஆரம்பிக்க விவசாயிகள் திட்டமிட்டிருந்தனர். ஆனால், தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு கைகொடுக்க வில்லை.

கன்னிப்பூ சாகுபடி தொய்வு

மழை கண்ணாமூச்சி காட்டு வதால் வழக்கமாக ஜூலை மாதம் நிரம்பிய நிலையில் காணப்படும் அணைகளும், குளங்களும் தற்போது வறண்டு கிடக்கின்றன. கடந்த வாரம் சில நாட்கள் பெய்த கனமழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி உள்ளிட்ட அணைகள் மற்றும் சில நீர்நிலைகளில் சிறிதளவு தண்ணீர் பெருகியுள்ளது.

இதனால் கன்னிப்பூ நெல் சாகுபடிக்கு நாற்றங்கால் அமைக் கும் பணிகள் தொடங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. மழை பெய்தபோது உழுது பண் படுத்தப்பட்ட பல வயல்கள் தரிசாக கிடக்கின்றன. நடவு செய்த வயல் களுக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் திண்டாடுகின்றனர்.

பொடி விதைப்பு

அதே நேரம், பருவமழை தொடங் குவதற்கு முன்பே சுசீந்திரம், இறச்சக்குளம், திருப்பதிசாரம், தேரூர், பூதப்பாண்டி, வழுக்கம் பாறை, பொற்றையடி உள்ளிட்ட பகுதிகளில் காய்ந்த வயல்களை உழுது பொடி விதைப்பாக நெல் விதைகளை தைரியமாக விவசாயிகள் தூவியிருந்தனர்.

மழை பெய்தால் நெல் சாகு படிக்கு கைகொடுக்கும் என்ற நம்பிக்கையில் 1,000 ஹெக்டேருக்கு மேல் பொடி விதைப்பு பணிகளை விவசாயிகள் மேற்கொண்டிருந்தனர். ஆனால், குளங்களில் இருந்து பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலையில், மழையும் சரிவர பெய்யாதால் பொடிவிதைப்பு நெல் பயிரிட்ட வயல்களுக்கு இன்னும் 3 மாதம் வரை எப்படி தண்ணீர் பாய்ச்சுவது என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

இதுகுறித்து தேரூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் கூறும்போது, ‘‘பருவமழை தீவிரமடையும் என எதிர்பார்த்தோம். ஆரம்பத்தில் கனமழை பெய்த நிலையில் கடந்த வாரத்தோடு மழை நின்று விட்டது. தற்போது கோடை போல் வெயில் வறுத்தெடுக்கிறது.

ஆற்றில் தண்ணீர் திறக்காத நிலையில், குளங்களிலும் போதிய தண்ணீர் இல்லை. இதனால் அறுவடை காலம் வரை பயிற் களுக்கு தண்ணீர் கிடைக்குமா? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

ஆண்டுதோறும் ஒவ்வொரு பருவ சாகுபடி காலத்திலும் இதுபோன்ற பேரிழப்புகளை நாங்கள் சந்தித்து வருகிறோம். நல்ல மகசூல் இருக்கும் வேளையில், அறுவடையின் போது அடைமழை பெய்து இழப்பை ஏற்படுத்தியதும் உண்டு.

நெல் சாகுபடியில் எப்போதாவது தான் லாபம் கிடைக்கும். தற்போது பொடி விதைப்பு மூலம் துளிர்விட்ட நாற்றுகளுக்கு இடையிடையே பெய்யும் மழை கைகொடுத்து வருகிறது. அறுவடை நேரம் வரை இயற்கை கைகொடுத்து தண்ணீர் கிடைத்தால் நெல் கிடைக்கும். தண்ணீரின்றி வயல்கள் வறண்டால் வைக்கோல் தான் மிஞ்சும்’’ என்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x